ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

யாழ்தேச வெறுப்பு அரசியலும் - ஜாதி அரசியலும்!

 ராதா மனோகர்  யாழ்ப்பாண மக்கள்  கண்ணுக்கு தெரியாத ஒரு  invisible Segregation   வெறுப்பு முள் வேலிக்குள் சிறைப்பட்டிருக்கிறார்கள்!
யாழ்ப்பாணத்தில் உண்மையான சமூகவியல் ஆய்வாளர்கள் என்று யாராவது இருக்கிறார்களா என்று உருப்பெருக்கி கண்ணாடி கொண்டு பார்க்கவேண்டி உள்ளது!
இந்த கேள்வியை வெறும் கேலியாகவோ அல்லது கோபமாகவோ நான் எழுப்பவில்லை.
நம் சமூகத்தின் பொதுப்புத்தி பற்றிய எனது பார்வையை மட்டுமே இங்கே குறிப்பிடுகிறேன்.
எனது பார்வை சரியா தவறா என்பதை காலம்தான் கூறவேண்டும்
கடந்த நூற்றாண்டுகளாக மெதுவாக ஆனால் ஆழமாக திட்டமிட்டு அடிப்படை மனித விழுமியங்களுக்கு எதிரான கோட்பாடுகள் யாழ்ப்பாணத்தில் புகுத்த பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்

ஜாதிய கட்டுமானத்தை தக்க வைப்பதற்காகவே   மனித விழுமியங்களுக்கு பொருந்தாத பல கோட்பாடுகள்  யாழ்ப்பாணத்தின் பொதுப்புத்தியில் ஆழமாக பதிக்கப்பட்டுள்ளது.

சிங்கள மக்கள் நம்மை விட தரம் குறைந்தவர்கள், படிக்காதவர்கள்,   கொடூரமானவர்கள் என்பது போன்ற ஒரு மோசமான பொதுபுத்தி யாழ்ப்பாணத்தில் எப்படி  உருவானது?    
சிங்கள மக்கள் ஒரு போதும் நமக்கு இணையானவர்கள் அல்ல என்பது போன்ற கருத்துக்கள் அந்த காலங்களில் மிகவும் அதிகமாக ஒலித்தது!

தற்போது அது குறைந்துள்ளது .. ஆனால் யாழ்ப்பாண கூட்டு உளவியலில் அந்த பொதுப்புத்தி இன்னும் கொஞ்சமாவது ஒட்டியிருக்கும்  என்ற சந்தேகம் எனக்குள்ளது.

சரி சிங்கள மக்கள்தான் அப்படி என்றல்ல.
கொஞ்சம் வரலாற்று பின்னணியை திரும்பி பார்த்தால் இன்னும் பல அதிசய பொதுப்புத்தி கோட்பாடுகளை காணலாம்
வன்னி (வன்னியர்கள்) கிளிநொச்சி மன்னார் போன்ற பகுதி மக்களை ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்புவரை யாழ்ப்பாண மக்கள் எப்படி நோக்கினார்கள்?
பொதுபுத்தியின் இலக்கணம் எவ்வாறு அவர்களை அழைத்தது?
கிழக்கு மாகாண மக்களை யாழ்ப்பாண பொதுப்புத்தி எப்படி அழைத்தது?
மலையக மக்களை யாழ்ப்பாண பொதுப்புத்தி எப்படி அழைத்து ?   
இதை விட இன்னும் ஒரு முக்கியமான  விடயம் யாழ்ப்பாண மக்கள் " தமிழக மக்களை" எப்படி நோக்கினார்கள்?
வயிற்று வலியை நம்பினாலும் வடக்கத்தையனை நம்பக்கூடாது என்று நமக்கு வகுப்பெடுத்தவர்கள் யார்?

யாழ்ப்பாண மக்களின் பொதுப்புத்தி என்பது ஏன் தம்மை சுற்றி இருக்கும் அத்தனை மக்கள் மீதும் சந்தேகமும்  இனம் புரியாத கோபமும்  கொண்டதாக எப்படி உருவானது?
சக மனிதர்களை இவர்கள் நம்மவர்கள் அல்ல,
என்று ஏறக்குறைய எல்லா மனிதர்களையும் கருதும் ஒரு பொதுப்புத்தி எப்படி  உருவானது?

மனிதவியல் வரலாற்றில் வெளி உலக தொடர்புகளை புறந்தள்ளி வாழும் குழுமங்கள் பல உண்டு
அவை பெரும்பாலும் வெளிப்படையாக தெரிய கூடிய விதமாக இருந்திருக்கிறது

இது போன்ற செக்ரகேட்டட்  Segregated Society மனித குழுமங்கள் பெரும்பாலும் நிற வெறி சமூகங்களால் கட்டமைக்க பட்டிருந்தன!
தெற்காசியாவில் ஜாதிய சமூகங்களால் கட்டமைப்பட்ட Segregated Society செக்ரகேட்டட் சமூகங்கள் இப்பொழுதும் உண்டு.
அவை வெளிப்படையாக தெரியாவிடினும்  உறைக்கும் உண்மை இது.

ஆனால் யாழ்ப்பாண சமூகம் பார்வைக்கு மிகவும் உயர்ந்த சமூகமாக தெரிகிறது.
எந்த வித சமூக உளவியல் குறைபாடுகளும் அற்ற  சமூகமாக தெரிகிறது.
கொஞ்சம் ஆழமாக உற்று நோக்கினால் மட்டுமே உள்ளே ஒரு ஒதுங்கி வாழும் கட்டமைப்பு இருப்பது தெரியவரும்!
இப்படி இல்லை என்று பலரும் வாதிப்பார்கள். அந்த அளவுக்கு இது கண்ணுக்கு தெரியாத வேலிகளை தன்னகத்தே கொண்டுள்ளது
இந்த முள்வேலிகளை கண்டுபிடிப்பதற்கு திறந்த மனதோடு சமூக ஆய்வு செய்தல் அவசியம்.
 

ஆறுமுக நாவல,ர் சேர் பொன்னம்பலம் ராமநாதன் காலங்களில் சைவ கிறிஸ்தவ வேலிகள் மக்களை  யாழ்ப்பாண வெள்ளாளர்களின் முள்வேலிக்குள் கனகச்சிதமாக மேய்த்து காவல் காத்துக்கொண்டிருந்தன!
 
அதன் பின் அடுத்த கட்டமாக .. மிக மோசமான கட்டமாக வந்தது SJV.செல்வநாயகம்  EMV.நாகநாதன்  யுகம்!

1952 இல் செல்வநாயகமும் நாகநாதனும் தேர்தலில் தோற்கும் வரை யாழ்ப்பாண மக்களுக்கு சிங்கள மக்கள் மீது பெரிதாக கோபம் அல்லது வெறுப்பு இருக்கவில்லை.
சாதாரண சிங்கள தமிழ் மக்களிடையே  சமரசமான கலந்துரையாடல்கள் இடம்பெறும் அளவுக்கு சகஜ நிலை இருந்தது!
1952 தேர்தலில் தோற்றவர்கள் (இருபகுதியிலும்)  சிங்கள தமிழர்களின் பரஸ்பர உறவுக்கு வேட்டு வைத்தனர்!

யாழ்ப்பாணம் தவிர்ந்த இதர பகுதிகளில் வாழும் தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் கூட  ஒரு தூரத்தில் வைத்திருக்கும் நடைமுறையை பொதுபுத்தியாக கட்டமைத்திருந்தார்கள்!
இது ஏன்?

இப்படிப்பட்ட பொதுபுத்தியை யாழ்ப்பாணத்தில் கட்டமைத்தவர்கள் யார்?
யாழ்ப்பாண பொதுப்புத்தி என்பது எப்படி உருவானது?
கடந்த நூற்றாண்டுகளாக யாழ்ப்பாணம் பொருளாதார ரீதியில் ஓரளவு செழிப்பாகவே இருந்தது.
கடந்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளாக தமிழகத்திலும் கேரளாவிலும் இருந்து அன்றாட  படகு போக்குவரத்துகள்  அதிகமாக இடம்பெற்றன.

 கடந்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளாக தமிழகத்திலும் கேரளாவிலும் இருந்து அன்றாட  படகு போக்குவரத்துகள்  அதிகமாக இடம்பெற்றன.
இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்கு இடையேயான வியாபாரம் யாழ்ப்பாணம் வழியாகத்தான் பெரிதும் நடந்தது.  
குறிப்பாக புகையிலை பயிர்செய்கை யாழ்ப்பாண பொருளாதாரத்தை மிக மிக உயரத்தே கொண்டுசென்றது!
திருவிதாங்கூர் அரசுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையேயான புகையிலை வெற்றிலை வியாபார போக்குவரத்து மிகப்பெரிய அளவில்  நடைபெற்றது!
யாழ்ப்பாண மலையாள புகையிலை சங்கம் என்பது அந்தக்காலத்தில் இருந்த மிகப்பெரிய காப்பரேட்டாகும்.

இதன் காரணமாக அங்கு ஒரு நிறுவனப்படுத்த பட்ட  சமூக அதிகார மய்யம் உருவாகியது.
.
இந்த  வர்த்தக மேலாதிக்க குழுமத்தை சேர்ந்தவர்கள் ஜாதி ரீதியாக தங்களை உயர்ந்தவர்களாக்கி கொண்டனர்.
தமிழகம் கேரளம் கன்னடம் ஆந்திரம் மற்றும் ஒடிஷாவில் இருந்தும் வந்து சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே இருந்த மக்களோடு இரண்டற கலந்தனர்.
உள்ளூர் மக்களின் உதவி இல்லாமல் இவர்களால் காலூன்றி இருக்கமுடியாது.
அப்படி வந்தவர்களின் வரலாறுகள் பெரும்பாலும் மறைந்து போய்விட்டன.
பல  ஜாதீய பின்புலங்களில் இருந்து வந்தவர்களுக்கு தங்களின் ஜாதி வரலாறு  சரியாக தெரியவில்லை!
அது காலப்போக்கில் மறைந்து விட்டது.
குடி பெயர்வுகளில் உள்ள ஒரு நல்ல பக்க விளைவு அது!

தமிழகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் நாடார்  (நளவர்கள்)  பறையர் பள்ளர் அருந்ததியர்  தேவர் வன்னியர் கவுண்டர் மற்றும் கேரளாவில் இருந்து வந்த ஈழவர் புலையர் நாயர் மேனன்,
கர்நாடகத்தில் இருந்து வந்த வீர சைவர்கள் (லிங்காயத்துக்கள்) மற்றும் தெலுங்கு ரெட்டிகள் நாயுடுகள் அருந்ததியர்கள் போன்றவர்கள் ஐரோப்பிய ஆட்சியாளர்களின் கெடுபிடிகளில் இருந்து தப்புவதற்கு தங்களை வெள்ளாளர்கள் என்று பதிந்து கொண்டனர்.
 

மகதபள்ளி  (ஒரிசா / கலிங்கம் ) ஒரிசாவில்  இருந்து வந்தவர்கள் மடைப்பள்ளிகள் என்று அழைக்கப்பட்டார்கள்.
இன்றும் கூட கோயில் சமையல் வேலை செய்ப்பவர்கள் மடைப்பள்ளிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

மேலும் இப்படியாக வந்தவர்கள் போர்த்துக்கல் ஹாலந்து (டச்சு)  பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்காலத்தில் தங்கள் வசதிக்காக வெள்ளாளர்கள் என்று  கூறிக்கொண்டனர்!

போர்த்துக்கீசர் காலத்தில் ஒடுக்கப்பட்ட பல ஜாதியினர் குற்றப்பின்னணி உள்ளவர்கள் என்று சந்தேகத்திற்கு உள்ளாயினர்
அதன் காரணமாக வேலை  வியாபார வாய்ப்புக்கள் பெறுவதில் சிரமங்கள் இருந்தன
அதிலிருந்து தப்புவதற்கு பெரும்பான்மையோர் தங்களை வெள்ளாளர்கள் என்று போர்த்துக்கீச காலனித்துவ அரசில் பதிவு செய்துகொண்டனர் (இப்படி ஜாதியை மாற்றி பதிவு செய்வதற்கு போர்த்துக்கீசர்களால் கட்டணம் அறிவிடப்பட்டது)
இவர்களில் பெரும்பான்மையோர் மடைப்பள்ளிகள் என்ற ஜாதியினராகும்.

இந்த ஏற்பாட்டின் வழியாக  பொருளாதார வளங்களை பெற்றவர்கள் பின்பு யாழ்ப்பாண வெள்ளாளர்கள் என்று அழைக்கப்பட்டனர்!

(கள்ளர் மறவர் அகம்படியர் எல்லாம் மெல்ல மெல்ல வந்து வெள்ளாளர் ஆயினர் என்ற பழமொழி இன்றும் வழக்கில் உள்ளது)


இந்த புதிய பணக்கார வர்க்கம் மெதுவாக உள்ளூர் ஆதிக்க ஜாதியாக மாறத்தொடங்கியது.
மறு புறத்தில் யாழ்ப்பாண  சமூக ஜாதீய அமைப்பில் அடித்தட்டில் உள்ளவர்களின் ஜாதியை சேர்ந்தவர்கள் தமிழகத்திலும் கேரளத்திலும்  மிக அதிகமாக இருந்தார்கள்!

இந்த மக்களின்  கடல் கடந்த உறவுப்பாலமானது  புதிதாக உருவான யாழ்ப்பாண வெள்ளாள சமூகத்திற்கு  ஒரு  சவாலாக வளர்ந்து விடக்கூடிய அளவு பலம் வாய்ந்ததாக இருந்தது \\


இதன் காரணமாகவே கூடுமானவரை இவர்கள்  தமிழகத்தோடும் கேரளத்தோடும் சமூக  தொடர்புகளை பேணாமல் இருக்குமாறு (முன்னாள் மடப்பள்ளிகள் போன்ற இதர ஜாதிகள்)  யாழ்ப்பாண  வெள்ளாளர்கள் பார்த்து கொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒவ்வொரு ஜாதியும் தமிழகத்திலும் கேரளத்திலும் இருக்கும் தங்கள் தங்கள் ஜாதியினரோடு தொடர்புகளை பேணுவதை திட்டமிட்டு நுட்பமாக தவிர்த்தார்கள்
குறிப்பாக வயிற்று வலியை நம்பினாலும் வடக்கத்தையனை நம்பாதே என்பது போன்ற விஷ பிரசாரம் எல்லாம் இந்த வகையை சேர்ந்தவைதான்

ஆனால் மறுபுறத்தில்  இவர்கள் சைவமும் தமிழும் தம் இரு கண்கள் என்று கூறிக்கொண்டு தமிழகத்தின் அத்தனை ஆசிரமங்கள்  கோயில்கள் போன்றவற்றோடு  இறுக்கமான தொடர்புகளை பேணினார்கள்
மறுபுறத்தில் கிறிஸ்தவர்கள் தென் இந்திய திருச்சபையோடும் இதர தமிழக மிஷனரிகளோடும்  நெருக்கமான தொடர்பில் இருந்தனர்

இந்த ஆதிக்க ஜாதி கனவான்களுக்கு தென் இந்திய ஆதீனங்களும் மடங்களும் திருச்சபைகளும் விருந்தினர் மாளிகைக்கு நிகராக  விளங்கின! .
ஒடுக்கப்பட்ட ஜாதியினருக்கு மட்டும் வயிற்று வலியும் வடக்கத்தையானும் என்ற பார்முலாவை அவர்களின் தலையில் கட்டினர்.

தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் எழுந்த ஜாதிக்கு எதிரான போராட்டங்கள்  இந்த யாழ்ப்பாண வெள்ளாளர்களை பயமுறுத்தியது .
எழுபதுகளில் ஆலைய நுழைவு போராட்ட காலங்களில் யாழ்ப்பாண வீதிகளில் காணப்பட்ட "நக்சல்பாரி போராட்டம் நமக்கு வழிகாட்டி" என்ற போஸ்டர்கள்  யாழ்ப்பாண வெள்ளாளரை எவ்வளவு தூரம் சிந்திக்க வைத்திருக்கும் என்ற கோணத்தில் பார்க்கவேண்டும்.
அந்த செய்திகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எட்டி விட கூடாது என்பதில் கூடியவரை கவனமாக இருந்தார்கள்.

தமிழகத்தில் எழுந்த சுயமரியாதை இயக்கம் அளவு கணக்கில்லாமல்  இவர்களை பயமுறுத்தியது.

குறிப்பாக 1967 இல் திமுக ஆட்சி பீடமேறியது இவர்களுக்கு ஒரு அபாய அறிவிப்பாக தெரிந்தது.
ஏனெனில் அந்த செய்தி யாழ்ப்பாண மக்களை எழுச்சி பெற செய்தது
பட்டிதொட்டி எங்கும் பேசுபொருளானது
குறிப்பாக சிகை அலங்கார நிலையங்கள் துணி வெளுக்கும் லாண்டரிகள் உள்ளூர் வாசிகசாலைகளில்   எல்லாம் திமுக அண்ணா கலைஞர் என்ற சொற்கள் ஒலித்தது.
ஜாதியமைப்பிற்கு எதிரான கோட்பாட்டை கொண்ட ஒரு சமூக இயக்கம் அரசியல் கட்சியாக மாறி ஆட்சி பீடம் ஏறுவது என்பது அதுவரை இவர்களை போன்றவர்களின் கனவில் கூட காணாத ஒரு காட்சியாகும்.

அன்றில் இருந்துதான் இவர்களின் திராவிட வெறுப்பு உச்சக்கட்ட தொனியில் கேட்கத்தொடங்கியது!
யாழ்ப்பாண சமூகத்தின் தலை மயிரில் இருந்து கால் நகம் வரைக்கும்  திராவிட வெறுப்பை மிக நுட்பமாக  விச ஊசியை  வாழைப்பழத்தில்  ஏற்றுவது போல ஏற்றினார்கள்!
திராவிட தலைவர்கள் படிக்காதவர்கள் கூத்தாடிகள்  பெரும் பாரம்பரியம் இல்லாதவர்கள் என்ற பிரசாரங்களை  வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பரப்பினார்கள்

ஒரு புறத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஜாதி ரீதியாக தங்கள்  தமிழக உறவுகளின் பக்க பலத்தை பெறுவதை  தடுத்தார்கள்
மறுபுறத்தில் ஜாதி ஆரியம் கொண்டு வந்தது!  
நாம் திராவிடர்கள் எங்களுக்கு ஜாதிகள் இல்லை,
என்ற திராவிட  கருத்தியலாளர்களையும் தற்குறிகள் கோமாளிகள் கூத்தாடிகள் என்று பிரசாரம் செய்தார்கள்
இதன் மூலம்  திராவிட கருத்துக்கள் மக்களிடையே பரவி வந்ததை தடுத்தார்கள்!
மக்கள் எந்த காலத்திலும் திராவிட சித்தாந்தத்தை அறிந்துவிட கூடாது என்று நயவஞ்சகமாக செயல்பட்டார்கள்
 
ஒடுக்கப்பட்ட ஜாதியினர் தங்களின் வலியை கூறி ஆறுதல் அடைய முடியாத அளவு அவர்களின் தமிழக சகோதர்களையே  திட்டமிட்டு  பிரித்தார்கள்  

மறு புறத்தில் ஜாதியே நமக்கு உரியதல்ல என்ற திராவிடத்தையும் எதிரிகளின்  சித்தாந்தமாக்கி  பிரித்தார்கள்!
சிங்களவர்களையும்  எதிரிகளாக்கி பிரித்தார்கள்
யாழ்ப்பாணத்திற்கு அப்பால் இருக்கும் இதர தமிழர்களையும் முஸ்லிம்களையும் யாழ்ப்பாணத்துக்கு அந்நியமாக்கி பிரித்தார்கள்.
எப்போதும் யாழ்ப்பாணத்திற்கு நாமே அரசர்கள் நாமே,
நாமே இந்திய பார்பனீயத்தின் இலங்கை Franchise  பிரான்சைஸ் முதலாளிகள் என்ற நோக்கத்தில்  இன்று வரை வெற்றிகரமாக பயணிக்கிறார்கள் இவர்கள்!

உளவியல் ரீதியில் யாழ்ப்பாண மக்கள்  கண்ணுக்கு தெரியாத ஒரு முள்வேலிக்குள் Invisible Thorn Fence  அகப்பட்டு ஒதுக்கப்பட்டு  Invisible Segregation  வாழ்கிறார்கள்

இப்படி இந்த மக்களை தங்களுக்கு வசதியான  சமூக கட்டுமானத்திற்குள் முடக்கி வைத்து அதிகாரம் செய்கிறது யாழ்ப்பாண வெள்ளாளர்களின்  யாழ்தேஷ்  ராச்சியம்
 

இந்த கட்டுமானத்திற்குள் மக்களை அடக்கி வைத்திருக்கும் நவீன கெஸ்டபோக்களின் Modern Gestapo வலிமை வாய்ந்த ஒரே ஆயுதம் வெறுப்பு அரசியல் Hate politics தான்
 

சிங்களவர்கள் மீது வெறுப்பு
இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு
மலையக மக்கள் மீது வெறுப்பு
இதர பகுதி தமிழர்கள் மீது வெறுப்பு
தமிழகத்தில் உள்ள உறவுகள் மீது வெறுப்பு
இந்தியா மீது வெறுப்பு
இத்தனை வெறுப்புக்களையும்  யாழ்ப்பாண மக்களின் தலைமீது இன்று வரை ஏற்றி கொண்டே இருக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக