செவ்வாய், 9 ஏப்ரல், 2024

ஆர்.எம்.வீரப்பன் காலமானார்- தலைவர்கள் இரங்கல்!

 tamil.oneindia.com - Mathivanan Maran : சென்னை: எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் (வயது 98) முதுமையால் காலமானார்.
ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த ஆர்.எம்.வீரப்பன் எனும் இராம.வீரப்பன், பேரறிஞர் அண்ணாவிடம் உதவியாளராக இருந்தார்.
பின்னர் தந்தை பெரியாரிடமும் உதவியாளராக இருந்தார்.
1950களில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், சினிமா நிறுவனங்களைத் தொடங்கிய போது அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பாளரானார்.
1963-ம் ஆண்டு எம்ஜிஆர் தாயார் சத்யா பெயரில் சத்யா மூவீஸ் எனும் திரைப்பட நிறுவனத்தை தொடங்கினார் ஆர்.எம்.வீரப்பன்.



எம்ஜிஆர், அண்ணா திமுக தொடங்கிய போது அவரது வலதுகரமாக அக்கட்சியில் இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன், தமிழ்நாடு சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக, எம்.எல்.சியாக பதவி வகித்தார். எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது அவரது அமைச்சரவையில் சக்திவாய்ந்தவராக இருந்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜானகி அணியிலும் பின்னர் ஜெயலலிதா தலைமையில் ஒருங்கிணைந்த அண்ணா திமுகவிலும் பணியாற்றினார். ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்த போது அவரது அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார் ஆர்.எம்.வீரப்பன்.
Tamil Nadu Senior Political leader RM Veerappan passes away

பின்னர் ஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட போது எம்ஜிஆர் கழகத்தைத் தொடங்கினார். மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியுடன் அவர் மறையும் வரை மிக நெருக்கமான நட்பில் இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். இவரது எம்ஜிஆர் கழகம் தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவு தந்துவந்தது. தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினுடனும் நெருங்கிய நட்பில் இருந்து வந்தார் ஆர்.எம்.வீரப்பன்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்து பெரும் வெற்றி பெற்ற பாட்ஷா திரைப்படம் ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீஸ் தயாரிப்புதான். எம்ஜிஆர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடித்த பல படங்களை சத்யா மூவீஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.
Tamil Nadu Senior Political leader RM Veerappan passes away

கடந்த பல ஆண்டுகளாக முதுமையால் தீவிர அரசியலில் ஒதுங்கி இருந்தார் ஆர்.எம்.வீரப்பன். சென்னையில் இன்று முதுமை காரணமாக காலமானார். தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரான ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக