திங்கள், 1 ஏப்ரல், 2024

மது அருந்தும் போட்டியில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு! ஹட்டன் மலையகம்

 தினகரன் : மது அருந்தும் போட்டியில் வெல்வதற்காக அதிகளவு மது அருந்திய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். இப்போட்டி, ஹற்றன் லெதண்டி தோட்டத்தில் இடம்பெற்றது.
ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெதண்டி தோட்டத்தின் மால்ப்ரோ பிரிவில் வசிக்கும் கணேசன் இராமச்சந்திரன் என்ற 39 வயதுள்ள மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தோட்டத்திலுள்ள ஆலயத்தில் (27) வருடாந்த தேர் திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இளைஞர்கள் சிலர் அதிகளவு மது அருந்துபவர்களை தெரிவு செய்யும் போட்டியை நடத்தியுள்ளனர்.
அதே தோட்டத்தில் வசிக்கும் 03 பேர் இப்போட்டியில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு 750 மில்லிலீற்றர் மது போத்தல்கள் மூன்று வழங்கப்பட்டுள்ளன.குறைந்த நேரத்தில் மது போத்தல் மூன்றையும் அருந்துபவரை வெற்றியாளராக தேர்வு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.



இப்போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்வந்த மேற்படி நபர், ஏற்கனவே அதிகளவு மது அருந்தியிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் மூத்த மகள் தெரிவிக்கையில், இரவு வீட்டுக்கு வந்த தந்தை இரவு உணவருந்திவிட்டு நித்திரைக்கு சென்றார். மறுநாள்(28) அதிகாலை அவர் எழுந்திருக்க வில்லை. நித்திரையிலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

போட்டியில் கலந்துகொண்ட மற்றுமொருவர் மிகவும் சுகவீனமடைந்த நிலையில் டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையின் போது, ​​நிமோனியா காய்ச்சல் மற்றும் கழுத்து நரம்பில் உணவு அடைப்பு ஏற்பட்டமையே மரணத்துக்கு காரணம் என சட்ட வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் உடலின் பல பாகங்கள் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஹற்றன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நன்றி – தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக