Raja Rajendran : Poacher என்கிற மலையாள வெப் தொடரைப் பார்த்தவர்கள், பார்க்கவிருப்பவர்களும் இந்தக் கட்டுரையை வாசிக்கலாம்.
இந்தத் தொடரில் யானைகள் மீதான பரிவை அதிகம் கொட்டினாலும், கோவில் அடிமைகளாக யானைகளை அதிகம் உபயோகிக்கும் மாநிலம் கேரளாதான்.
நாட்டுக்குள் யானைகளால் அதிக மக்கள் கொல்லப்படும் நாடும் கேரளாதான். (காடு, காட்டின் எல்லையோர மக்கள் கிடையாது)
ஆனால் அதைப்பற்றி அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
யானைகளை கொல்பவன்களைக் காட்டிலும் அதன் வாழ்நாள் முழுக்க வதைப்பவனும், அதைக் கண்டுகொள்ளாதவனும் எவ்வளவு பெரிய பாவிகள் ??
அட்லீஸ்ட் அழியாமலாவது இருக்கேன்னு இதையெல்லாம் சகிச்சிக்கிட்டு போவதுதான் நல்லது என்று தொடரில் ஒரு வரி வசனம் வருகிறது.
உயிர்மையில் 2018 ல் வெளியான என் கட்டுரை (மீள்)
அய் யானைக்கு செருப்பு பாரேன் என்று குழந்தைகளுக்கு காட்டாதீர்கள்.
அதற்கு டயாபடீஸ்.
கால்கள் தார் ரோட்டிலோ, டைல்ஸிலோ மோதி காயமானால் இனி புண் ஆறாது. பாவம்.
காட்டு விலங்கு, நாட்டு விலங்குகளுக்கெல்லாம் நாம் உண்ணுவதைப் பழக்கி நமக்கு வரும் பிணிகளையெல்லாம் அதற்கும் வரச்செய்து விட்டோம்.
முன்பு எழுதியிருந்த ஒரு கட்டுரை. ஆனால், இந்தக் கொடிய துன்பத்திற்கு ஒரு முடிவுரையைத்தான் எழுத முடியவில்லை.
கோவில் விலங்கு
================
- ராஜா ராஜேந்திரன்
யானையின் பிரம்மாண்ட உருவத்தையும், வலிவையும், வியக்காத பொழுதுகளே இல்லை. ஆனால் அத்தனை பெரிய மிருகம் தன் உடல் எடை 50- ல் ஒரு பங்கு கூட இல்லாத மனிதனுக்கு அஞ்சி, அடங்கியொடுங்கி நடக்கும்போது, அதெப்படி இப்படி அடிமையாய் இவர்களுக்கு ஒத்துழைக்கிறதென அதையும் விஞ்சிய வியப்பே ஏற்படும்.
உண்மையில் காட்டு யானைகள் மனிதனை மிக மிக மோசமான எதிரியாகவே பாவிக்கும் என்று காடு மற்றும் காட்டுவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதுவும் காட்டில் திரியும் ஒற்றை யானைகளின் மூர்க்கத்தை எவ்வகையிலும் கட்டுப்படுத்தவே முடியாது. அந்த யானைகளும் வழிதவறி காட்டைத் தாண்டிவிட்டால் அவ்வளவுதான். எதிர்ப்படும் வயல்களும், மனிதர்களும் சர்வ நாசம். கூழ் கூழாக்கிப் போட்டுவிடும்.
இந்த யானைப் புராணங்களெல்லாம் நமக்கொன்றும் புதியதில்லைதான், ஆனால் சமீபத்தில் சில யானைச் சேதிகள் வாசித்திருப்போம். அதையும் வழக்கமானச் சேதிதானே எனக் கடந்துப் போய்விடாமல், காளைகளையே வன விலங்குகள் என்று சொல்லி, ஜல்லிக்கட்டுக்குத் தடையாணை பெற்றார்களே ? அவர்களின் கண்களுக்கு, கோவில்களில் வதைபடும் யானைகளைப் பற்றித் தெரியவே தெரியாதா என்கிற கேள்விகள் கிளர்ந்திருந்தால், நாமெல்லாம் ஓரினமே !
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலின் பெண் யானை ராஜேஸ்வரி. பிறவியிலேயே ஒரு காலில் குறைபாட்டோடு பிறந்த மாற்றுத் திறனாளி. வருடாந்திர முகாம் புறப்பாட்டின் ஒரு சமயம், லாரியில் ஏற்றும்போது விபத்தாகி பட்டகாலிலேயே பலத்த காயமொன்று அதற்கு ஏற்படுகிறது. பிறகு கொடுக்கப்பட்ட நற்சிகிச்சையில் மெதுவாக அந்தக் காயம் குணமாகி வந்தாலும், சில வருடங்களில் கால்கள் பலவீனமாகிவிட,
அவ்வளவு பெரிய உடல் எடையைச் சுமக்க முடியாமல், அப்படியே சரிந்து வீழ்ந்திருக்கிறது. எவ்வளவு முயன்றும் அதனுடைய கால் காயங்களை முழுமையாக ஆற்றி, யானையை எழுப்பி நிற்கவைக்க முடியவில்லை. படுத்த படுக்கையாய் இருக்கும் அந்தப் பெண் யானை, உடல் வலியால் உணவையும் மறுக்க, மெலிந்து வாடி வதங்கிக் கிடக்கிறது. துடித்து துடித்து தன் வாழ்நாளைக் கழிக்கிறதே என்று சென்னையைச் சேர்ந்த விலங்கு நல ஆர்வலொருவர் அதைக் கருணைக் கொலைச் செய்து விட அனுமதி தாருங்கள் என நீதிமன்றத்தை நாடினார்.
இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, சில விசாரணைகளுக்குப் பிறகு இந்தக் கருணைக் கொலைக்கு ஒப்புதலும் வழங்கிவிட்டது. ஆனால் யானையை வளர்த்து வருபவரும், கோயிலுக்கு வாடிக்கையாக வரும் பக்தர்களும், மிகக் கடுமையாக இந்தக் கருணைக் கொலயை எதிர்க்கிறார்கள்.
இந்து சமய அறநிலையத் துறையின் அலட்சிய நிர்வாகப் போக்கே, யானை இப்படி அவதிப்படுவதற்கான பிரதானக் காரணம் என்று ஒரு பக்தர் பொருமுகிறார். இன்னொரு சித்த வைத்தியர், சித்த வைத்தியத்தின் சில சிகிச்சை முறைகளால் யானையின் புண்களை ஆற்றி, நிச்சயம் எழுப்பி நிற்க வைத்துவிட முடியும், எனவே அதைக் கொல்லக் கூடாது என்று ஓங்கிய குரலில் நம்பிக்கையுடன் பேசுகிறார்.
பத்தாயிரத்தில் ஒருவர் மட்டுமே, இதே யானை காட்டில் இருந்திருந்தால் முதலில் இதற்கு இப்படி காயமே ஏற்பட்டிருக்காது, காட்டில் தன்னிச்சையாக நடந்துலாவி, ஆரோக்கியமான இயற்கை உணவை உண்டிருந்தால் அது இத்தனை பலவீனமாகவும் இருந்திருக்காது. எனவே யானைகளை நாட்டில் வைத்துப் பராமரிக்காதீர்கள். எல்லாக் கோவில் யானைகளையும் காட்டில் போய் விட்டு விடுங்கள் என்கிறார். எத்தனை உண்மையான வார்த்தைகள் ?? ( சோகமான ஒரு சேதி : இதை எழுதி முடிப்பதற்குள் அந்த யானை இயற்கையாகவே மரணமடைந்து விட்டது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் மனிதர்களிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டது )
கேட்டால், இந்தியாவில் யானைகள் பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதனால் பழக்கப்படுத்தப்பட்டு, போர், விவசாயம், பளு தூக்கும் வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதால், அவைகளை ஒட்டுமொத்தமாக வனவிலங்கு என்று ஒதுக்கிவிட முடியாது என்றும், சில ஆண்டுகளுக்கு முன்புவரை, செல்ல வீட்டு விலங்காய்க் கூட யானைகள் வளர்க்கப்பட்டு வந்திருக்கின்றன என்றும் பலர் இங்கு யானைகளை காட்டுக்கு அனுப்பிவிடக் கூடாதென, சப்பைக்கட்டு வரலாறுகளைக் கூறத்தான் செய்கின்றனர்.
உண்மைதான். யானைகள் மட்டுமல்ல. சிங்கங்கள், புலிகள், கரடிகள், பாம்புகள், கீரிகள், மான்கள் உட்பட ஏகப்பட்ட வனவிலங்குகள் மக்களால் வீடுகளில் வளர்க்கப் பட்டிருந்திருக்கின்றன. சினிமா பிரபலங்கள் சிங்கம், புலி வளர்த்தால், பழங்குடிகள் தங்களின் பிழைப்புக்காக கரடி, பாம்பு, கீரி வளர்த்தனர். பெரிய மலைப்பாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு மகுடி ஊதியவாறே பிச்சை எடுக்கும் நாடோடிப் பழங்குடி ஆட்கள் சகஜமாகத் தெருவில் உலா வருவதுண்டு. பாம்பு - கீரிச் சண்டைகளை கும்பலாகச் சூழ்ந்து நின்றுக் கண்டுகளித்து அவர்களுக்கு ஐந்து அல்லது பத்து காசுகளை விட்டெறிந்துவிட்டு போவார்கள். மெஹா சைஸ்களில் இரண்டு கரடிகளை அழைத்துவந்து அதைச் சண்டை போடவிட்டு காசு கேட்பார்கள். முந்தி வரும் யானையின் மணியோசையும், பிந்திக் கிட்டும் அதன் ஆசிர்வாதமும், கடை கடையாய் தும்பிக்கையை நீட்டி அது கேட்கும் பிச்சையும் மக்களிடையே வெகு பிரசித்தம். இப்போது எங்கேனும் அப்படி நம்மால் பார்க்க முடிகிறதா ?
சர்க்கஸ்களில் மிக அதிக முன்கோபியான நீர்யானையையே வாய் பிளக்கச் செய்து, அந்த பிரம்மாண்ட வாயினுள் தன் தலையை உள்ளே விட்டு எடுக்கும் மயிர்கூச்செறியும் சாகஸக் காட்சிகளையெல்லாம் கண்டிருப்போமே ? இப்போது அத்தகையச் சாகஸங்கள் சர்க்கஸ்களில் இருக்கின்றனவா ? வண்டலூர் மிருகக் காட்சிச் சாலையில் 100 சிங்கங்கள் உள்ளன என்றால் அதில் 90 சிங்கங்கள் சர்க்கஸ்களிலிருந்து மீட்கப்பட்டவைகள்தான். அதாவது வனவிலங்குகளை பொதுமக்களால் இனி வளர்க்க முடியாது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்கள் மிகக் கடுமையாக்கப்பட்டுள்ளன. அவைகளை கொல்லக் கூடாது. துன்புறத்தக் கூடாது, காட்சிப் பொருளாக்கி காசு பார்க்கக் கூடாது, இன்னும் பல கடுமையான சட்ட நடைமுறைகளைகளை வன விலங்குகளுக்காக வரைந்திருக்கிறது அரசு. விலங்கு நல ஆர்வலர்களால் விளைந்த நன்மைகள் இது.
இதில்தான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு காளைகளைக் கொண்டுபோய் வனவிலங்குகள் பட்டியலில் சேர்த்ததுகள் சில அமைப்புகள். உச்ச நீதிமன்றமும் எப்படியோ இதை அப்படியே ஏற்று ஜல்லிக்கட்டுக்குத் தடைவிதித்து பல ஆண்டுகள் அந்த விளையாட்டை நடத்த முடியாமலும் போனது.
இவ்வளவு இரக்க சுபாவமுள்ளவர்கள் கொஞ்சம் இந்தக் கோவில் யானைகள் படும் பாட்டையும் பார்த்திருந்திருக்க வேண்டும். பார்க்காமலா இருந்திருப்பார்கள் ? இங்குதான் வாழும் மகான் வடிவேலுவின் ஒரு கருத்தைச் சொல்ல வேண்டி வருகிறது தனக்கென்றால் தக்காளிச் சட்னி, பிறர்க்கெனில் அது ரத்தம்.
இந்த பீட்டா, ப்ளு கிராஸ் போன்ற விலங்கு நல ஆர்வலர்களின் பின்னணியில், நூலளவு விஷக்கொடுக்கள் சில உண்டு. கவனிக்க. எல்லோரையும் சொல்லவில்லை. அந்த விஷக் கொடுக்குகளின் மூளைகள் மட்டுமே எவையெல்லாம் வனவிலங்குகள், எவையெல்லாம் வீட்டு விலங்குகள் எனத் தீர்மானிக்கின்றன. அவைகளின் கண்களுக்கு வதைபடும் ஜல்லிக்கட்டுக் காளைகள் வனவிலங்காகத் தெரிகிறது. எதற்கு கோவிலுக்கு யானைகள் என்பதை மட்டும் தாம் கண்டுகொள்ளாமல், விட்டுவிட்டால், அது வீட்டுவிலங்காகிப் போகும் என நம்புகிறதுகள் என்பதுதான் உண்மை.
சரி. கோவிலுக்கும் யானைக்கும் என்ன சம்பந்தம் ? அது கோவிலில் என்ன பண்ணுகின்றன ?
இந்துக்களுக்கு எந்தக் காரியம் தொடங்கினாலும் அது முதற்கடவுளான கணபதியிலிருந்து தொடங்க வேண்டும். கணபதியின் வடிவம் கஜபதி. அதாவது யானை. எனவே யானை இந்துக்களுக்கு புனித விலங்கு. அப்ப பசு என்ன தக்காளித் தொக்கா என்றால், அய்யய்யோ அது புனிதவிலங்குக்கே புனிதமான விலங்கு. ஆக, இந்த யானைகள் எல்லாப் பிரபல இந்துக் கோயில்களிலும் தவறாமல் இருக்கும்.
சைவ - வைணவக் கோவில்களில், அர்த்தஜாமப் பூஜை செய்து கடவுள்களை பள்ளியறைகளுக்கு அனுப்புவதோடு அன்றைய நடை சாத்தப்படும் அல்லவா ? திருப்பள்ளியெழுச்சி பூஜை அல்லது சுப்ரபாத பூஜை என்கிற நாளின் துவக்கத்தின் போது நடைபெறும் பூஜைகளில் பல கோவில்களில் அல்லது அனைத்துப் பெரிய கோவில்களிலும் கோ, கஜ பூஜைகள் நடைபெறும். வெள்ளைப் பசு, கரிய கஜம் இரண்டையும் சன்னதிக்குள் வரவழைத்து, லட்சுமி வசிக்கும் கோவின் பின்புறத்திலும், கஜ முகத்திலும் கடவுள்களை விழிக்கச் செய்வார்கள். அந்தச் சிறப்பு பூஜையை பொதுமக்களும் கண்டுகளிக்கலாம், ஆனால் அதெல்லாம் கட்டண பூஜைகள். முன்பதிவு அவசியம். எனவே சாமானியர்களுக்குச் சாத்தியப்படாதது.
போக, ஆண்டின் சில பிரதானத் திருவிழாப் பொழுதுகளில் உற்சவர் சிலைகள் யானை மீது வைக்கப்பட்டு வலம் வரும். இதைத் தவிர்த்து யானைகளுக்கு அங்கு வேறென்ன வேலைகள் இருக்கப் போகிறது ? கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி அவர்கள் தரும் கண்ட உணவுகளையும் உண்ணும். காசுகளை துதிக்கையால் கவ்வி தம் மேலிருக்கும் பாகனிடம் தரும்.
உண்மையிலேயே இந்தப் பாகன்கள் வளர்க்கும் யானைதான் இப்படி டைம்பாஸ்க்கு கோவிலில் நின்று ஆசி வழங்குகின்றது, உணவுக்காக தெருவில் பிச்சையெடுத்து வயிற்றை வளர்க்கிறதென்றே நெடு நாட்களாக நினைத்து வந்தேன். பிறகுதான் தெரிந்தது ஒவ்வொரு பிரபலக் கோவிலாட்கள்தான் கலந்தாலோசித்து யானையை வாங்குகிறார்கள், பரமாரிக்கிறார்கள், பாகன்களுக்கும் சம்பளம் கொடுக்கிறார்கள் என்று !
இதுபற்றி மேலதிக விபரங்களுக்காக நண்பர்கள் ராகவேந்திரனையும், சத்யபெருமாளையும் தொடர்பு கொண்டேன்.
” இப்போது படைவல்லரசு என அறியப்படும் நாடுகளுக்கு எது பிரதான அடையாளம் ? விமானந்தாங்கி போர் கப்பல்கள். மிகப் பிரம்மாண்ட வடிவத்தில் அணு சக்தியில் இயங்கும் இப்படிப்பட்ட மாபெரும் போர் கப்பல்களை, உலகின் அனைத்து கடல் பிராந்தியங்களில் நிறுத்தி வைத்திருக்கும் நாடுகள்தான் பெரிய படை வல்லரசாக அறியப்படும் அல்லவா ? அதுபோல பழங்காலங்களில் பிரம்மாண்ட யானைப் படையை வைத்திருக்கும் அரசன்தான், மகா சக்கரவர்த்தி. அவனுடையதுதான் வல்லாதிக்கப் பேரரசு. ஆக, அந்தக்காலத்தில் யானை என்பது அதிகாரத்தின், பந்தாவின் அடையாளம்.
அரசர்கள், கோவில்களுக்கு நிலங்களை, யானைகளைத் தானமாக அளிப்பதென்பது தன்னுடைய நிகரற்ற அதிகாரத்தையும், செல்வாக்கையும் நிருப்பிப்பதற்காகச் செய்தது. அதேவகையில்தான் தங்களின் கோவில்களுக்கு யானை வாங்குவதையும், கோவில் அறக்கட்டளையைச் சார்ந்தவர்கள், அதை ஓர் அதிகாரக் குறியீடாகக் கருதுகிறார்கள். ஆக, தாங்கள் நிர்வகிக்கும் கோவில்களின் பெருமிதங்களுக்காகவும், எங்க கோவில்ல ஆன இருக்காக்கும் என்கிற பந்தாவிற்குமே, யானை வாங்கிப் பராமரிக்கிறார்களேத் தவிர, மற்றபடி அதனால் வேறெந்த உபயோகமும் கிடையவே கிடையாது " என்று அடித்துச் சொன்னார் ராகவேந்திரன் !
சத்யபெருமாள்தான், சேலம் யானை ராஜேஸ்வரியின் முழுக்கதையையும், யானையை வைத்து செய்யப்படும் பூஜைகளையும், அதுபற்றிய வணிக வருவாய்களையும் விளக்கினார். ஆனால் இருவருமே ஒருவிஷயத்தில் ஒத்துப் போகிறார்கள். யானை கோவில் விலங்கு அல்ல, அது காட்டுவிலங்கு. அங்குதான் அவைகள் வாழவேண்டும். யானையின் பாதங்கள் நாட்டின் கான்க்ரீட் சாலைகளுக்கோ, தார் சாலைகளுக்கோ சிறிதும் ஏற்றதல்ல. அதை வதைத்து வணங்குவதை விட வேறென்ன பாவம் வேண்டும் ?
ஜெயமோகனின் காடு வாசித்திருக்கிறீர்களா ? அதில் யானைகள் பற்றிப் பலத் தகவல்கள் உண்டு. யானைதான் அசல் காட்டு ராஜா. அதன் உயரமென்ன, கம்பீரமென்ன, ஆகிருதியென்ன என்று போற்றித் தள்ளியிருப்பார். காட்டுக்கு ராஜா என்று நீங்கள் நம்பும் புலி, சிறுத்தை, சிங்கம் கூட பெருமழையில் நனைந்து, குளிருக்கு அஞ்சி, ஒடுங்கி, வெடவெடத்து ரோமங்களெல்லாம் உடலோடு ஒட்டி, சிறுநரி போல் அசிங்கமாக, பரிதாபமாகக் காட்சி தரும். ஆனால் எதற்கும் அஞ்சாது, வானுயர மரங்களைக் கூட நெட்டித் தள்ளி, தன்போக்கில் காடுகளில் உலா வரும் நிஜ காட்டு ராஜா யானைகள்தான் என்றிருப்பார். அதாவது காட்டு யானைகளின் சுபாவம் தினமும் பல கிலோமீட்டர்கள் நடப்பது. கோவில் யானைகள் எவ்வளவு தூரம் ஒரு நாளில் நடந்து விட முடியும் ? காட்சிப் பொருளாக்கி பிச்சை எடுக்கக் கூடாது என்று வேறு ஆணையிட்டு விட்டார்கள். போக, கூட்டுக் குடும்பமாக வாழும். பெண் யானையின் தலைமையில் இருக்கும் ஒரு யானை மந்தையில் இருபது யானைகள் கூட சாதாரணமாக இருக்கும்.
திருச்செந்தூரில் பார்த்ததைச் சொல்கிறேன்.
செந்திலாண்டவர் கோவில் யானை. தேவயானியா, வள்ளியா என்பதை மறந்துவிட்டேன். ஒரு கூண்டுக்குள் அடைக்கப்பட்டு தன் பருத்த உடலை நின்றவாறே ஆட்டியவண்ணமிருக்கும். அதிகபட்சம் அந்தக் கூண்டு ஒரு கிரவுண்டில் இருக்கும். அதன் பின் கொஞ்சம் இடமுண்டு. என்ன கணக்கு போட்டாலும் அது இரண்டு மூன்று கிரவுண்டுக்குள் சுற்றும். முழுக்கச் செயற்கையான உணவுகளைக் கொடுப்பார்கள். இது போகட்டும். கொளுத்தும் திருச்செந்தூர் வெயிலில் இதற்கு தகரக்கூரை வேயப்பட்ட மேற்புறம். கடுமையான கோடைப் பருவங்களை அந்த யானை எப்படிக் கடக்குமோ என்று நினைத்துப் பார்த்தால் கொடூரமாக இருக்கும். மலைக்காடுகளில் வாழும் யானைகள் என்றேனும் இப்படிப்பட்ட கொடூர வெயில்களைக் கண்டிருக்குமா ? சரி ஒரு சில வெட்டவெளிப் பரப்பில் அப்படிப்பட்ட வாட்டியெடுக்கும் வெயிலை உணர நேர்ந்தாலும் ஓடி ஒளிந்துக் கொள்ள எத்தனை ஆயிரம் மரங்கள் அதற்கு உள்ளது ? கோவில் யானைகளுக்கு ?
ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோவில் யானையின் பெயர் கோதை. இந்தக் கோவிலுக்கு யானை மட்டும் போதாதென்று ஓர் ஒட்டகம் வேறு உண்டாம். ஒட்டகம் பாலைவன விலங்கு. எந்த வெய்யிலையும் சமாளிக்கும். கோடைக்காலங்களில் பங்குனி, சித்திரை, வைகாசி மாத வெய்யிலை நிச்சயம் அது சகித்துக்கொள்ளும். ஆனால் கோதை ? அனல்காற்றாலும், மேற்கூரையற்ற கொட்டடியில் நேரடியாக கொளுத்தும் வெய்யிலில் அது படும் பாட்டைப் பார்த்து, கண்ணீர் விட்டு, கோவில் நிர்வாகத்திற்கெதிராக சில மிருகாபிமானமிக்க பக்தர்கள் போராடி இருந்திருக்கிறார்கள். கூரை போட்டு, அல்லது மேலே நீரைப் பாய்ச்சி சற்றே கோதையை குளிர்வித்திருப்பார்கள். ஆனால் கோதையின் ஏக்கமெல்லாம் அது எப்போதோ வாழ்ந்த காட்டு வாழ்க்கை பற்றித்தானே இருந்திருக்கும் ?
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் யானை ருக்கு. அட இதுவும் பெண் யானைதான். இதுவும் கடந்த மாதத்தில் இறந்து போனது. அது கட்டிப் போடப்பட்டிருந்த இடத்தில் சில தெரு நாய்கள் சண்டையிட்டதாகவும், இது மருண்டதாகவும், ஒரு நாய் இதைக் கடித்து விட்டதாகவும், அதனால் மேலும் பயந்து சுவரில் மிக வேகமாக மோதியதில் இதன் கபாலம் உடைந்து உடனடி மரணமேற்பட்டதாகவும் சொல்கிறார்கள். ஒருசிலர் இந்த யானை சாவில் மர்மம் இருக்கிறது. அடிபட்டுக் கிடந்த யானையைச் சோதித்த மருத்துவம் சிறுகாயம்தான் விரைந்து ஆறிவிடும் என்றுச் சொன்னதாகவும், ஆனால் யானை மரணமடைந்து விட்டதாகவும், ஏதோ சூது இருப்பதாகவும் சொல்கிறார்கள். காட்டு யானைகளைக் கண்டால் சிங்கம் புலி கூட அஞ்சி ஓடுமெனும் போது, இப்படி சின்னஞ்சிறு நாய்களுக்கஞ்சியெல்லாம் சாகுமளவு யானையை நாசம் செய்திருக்கிறான் மனிதன்.
திருவிழா சமயங்களில் கோவில் சிலைகளை, வாகன உற்சவம் மூலம் ஊர்வலம் வரச்செய்வார்கள். பொதுவாக புலி வாகனம், சிங்க வாகனம், அனகோண்டா வாகனம், கருட வாகனங்களுக்கெல்லாம் அதற்குரிய பொம்மைகளைப் பயன்படுத்துபவர்கள், யானை இருக்கும் கோவிலென்றால் மட்டும் யானை மீதே சிலைகளை வைத்து யானை உற்சவம் செய்வார்கள். ப்யூர் வெஜிடேரியன் விலங்கு என்கிற ஒரு காரணத்துக்காகத்தான் மதம் பிடித்த மனிதர்களிடம், இந்தப் பிரம்மாண்ட விலங்குகள் சிக்கிச் சீரழிகிறது. புலியும், சிங்கமும் வெஜிடேரியன் சாப்பிடுமென்றால் இவர்கள் அதையும் வாங்கி வளர்க்கக் கூடும். இவர்களுக்கெனில் சட்டமும் வெட்கமில்லாமல் வளையவும் கூடும். நல்லவேளையாக ஐயப்பனின் வாகனமும், காளியின் வாகனமும் அசைவங்கள். தப்பித்தன.
பெண் யானைகளாகப் பராமரிக்கிறார்களே, இதற்கும் மனிதர்களைப் போல், மாதவிடாய் பிரச்சினைகள் இருக்குமே ? மனிதர்களுக்கே அப்படி ஒரு நிலை என்றால் கோவில்களுக்கு போக விட மாட்டார்கள். தீட்டு என முகம் சுளிப்பார்கள். ஆண் யானைகள் என்றால் அதற்கு வருடத்தில் சில மாதங்கள் பாலியல் மோகம் அதிகமாகி மதநீர் சுரக்கும். அந்தச் சமயங்களில் அதைக் கட்டுப்படுத்த மிகவும் மெனக்கிட வேண்டும். எனவேத்தான் பெண் யானைகளாக வாங்குகிறார்கள் போல ? சரி, அதற்கு மட்டும் செக்ஸ் உணர்வுகள் இருக்காதா என்ன ?
வீட்டில் நாய்களை வளர்ப்பவர்களில் ஒரு சிலருக்கு மட்டும், நாய்களின் செக்ஸ் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்கிற அக்கறையிருக்கும். ஆனால் அந்த நாயை அதற்குரிய அந்தஸ்தோடு இருக்கும் சாதி நாய்களாகப் பார்த்துத்தான் கூட விடுவார்கள். வணிக ரீதியிலாக அது போடும் குட்டிகளுக்காகவும் இந்த இரக்கம் அவர்களுக்குச் சுரப்பதுண்டு. கோவில் யானைகளுக்கு அந்தக் கருணையும் கிட்டாது. கோவில்களுக்குப் போவது புண்ணியம் என நம்புபவர்களும், தாமறியாமலேயே இந்த யானைகளிடம் ஆசி வாங்கி, பாவத்தைச் சுமக்கிறார்கள் என்றே படுகிறது !
கேரளாவில் இப்போதும், யானைகளை தனியார்கள் கூட வளர்க்கிறார்கள். அங்கு பாகன்களுக்கு உரிமமெல்லாம் உண்டு. அரசு முறையாக அவற்றை வழங்குகிறது. அங்கு ஆண் - பெண் யானைகள் ஒரே கொட்டடியில் வைத்தும் பராமரிக்கப்படுவதால் அவைகளுக்கிடையே பாலியல் தாகங்கள் இருக்காது, அதற்கு அனுமதிக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். கேரளாவில் பொதுவாக வனச் சூழல்களில்தான் யானைகளை வளர்க்கிறார்கள். என்ன ஆறுதல் சொன்னாலும் யானைகள் காட்டு விலங்குகள்தான். அது மனிதனின் அடியாட்களாக இருக்கக் கூடாது. கோவில்களில் இருக்கும் எல்லா யானைகளையும் காட்டில் விட வேண்டும் என்பதே இலக்கு.
வீட்டு விலங்காக வளர்க்கப்பட்ட யானைகளை திடுதிப்பென்று காட்டில் போய் விட்டால் அது வேட்டை விலங்குகளுக்கு எளிதாகப் பலியாகிவிடலாம். காட்டு யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழக்கலாம் என்று ஆய்வாளர்கள் வருவார்கள். உண்மைதான். வருடாந்திரப் பராமரிப்புகளுக்காக வனப்பகுதிகளுக்கு கோவில் யானைகளை அனுப்பி வைக்கிறார்கள் அல்லவா ? அவற்றை மீண்டும் கோவில்களுக்கு அனுப்பி வைக்காமல் அங்கேயே வைத்திருந்து, அரசின் பல காட்டு வேலைகளுக்கு, அதாவது கும்கிகள் போலப் பயன்படுத்திக் கொள்ளலாம். உரிய யானைப் பயிற்சியாளர்கள் மூலம், அவைகளை காட்டு வாழ்க்கைக்குப் பழக்கி, சிறுகச் சிறுக அவைகளை காடுகளுக்குள் அனுப்பி, இயற்கையாக வாழ, வழிவகைகள் செய்யலாம். நாட்டில் பிடிபடும் குரங்குகள், பாம்புகள், ஏனைய விலங்குகளையெல்லாம் இப்படித்தான் செய்கிறார்கள். வெகு சிலதான் உயிரியல் பூங்காக்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
நன்றாகக் கவனியுங்கள், இதே உயிரியல் பூங்காக்களெல்லாம் ஒரு காலத்தில் சிறு கூண்டுக்குள் வைத்து மிருகங்களை பராமரிப்பதாகவே இருந்தன. இப்போது அப்படியில்லை. வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் யானைகள் தினமும் காட்டில் நடப்பதற்கு நிகராக நடக்குமளவிற்கு அதற்கு பரந்த திறந்தவெளி இட வசதி செய்துக் கொடுத்திருக்கிறார்கள். சிங்கம் புலிகளால் தப்பித்து வெளியே போக முடியாதே தவிர, அதற்கும் போதிய பெரிய இடவசதிகளைச் செய்துக் கொடுத்திருக்கிறார்கள்.
எவ்வளவோ மேம்பட்டு விட்டோம். காடுகளை ஆக்கரமிப்பவர்களுக்கு எதிராக கடும் சட்டங்கள் கொண்டு வந்திருக்கிறோம். நாட்டில் நுழையும் காட்டு விலங்குகளை அடித்துக் கொல்லக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறோம். சினிமாக்களில், சர்க்கஸ்களில் விலங்குகளைத் துன்புறுத்தக் கூடாது எனத் தடை விதித்திருக்கிறோம். தான் வளர்த்த நாயை மாடியிலிருந்து தூக்கி எறிந்தவனை விரட்டி விரட்டிக் கைது செய்திருக்கிறோம். பசியில் வாடும் அனாதை விலங்குகளைத் தத்தெடுத்து அவைகளின் துன்பம் நீக்க பல அமைப்புகள் நாட்டில் உள்ளன. ஆனால், தேவையேயில்லாமல் ஒரு வனவிலங்கு, கோவிலில் வாடி வதங்கி, ஒடுங்கிக் கிடப்பதை மட்டும் கண்டும் காணாமலிருக்கிறோம்.
இது மிகவும் மேலோட்டமான ஒரு விவரிப்புதான்.
இன்னும் துல்லியமாக நிறைய தொடர்ந்து பேசவேண்டும், பேசுவோம் !!!
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக