சனி, 9 மார்ச், 2024

ஜாபர் சாதிக் கைது - போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடவடிக்கை

hindutamil.in : தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது - போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடவடிக்கை | Drug Trafficking | Absconding Jaffer Sadiq arrested.
சென்னை: ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை (சூடோபெட்ரின்), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைத்து,
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக
டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக, டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கடத்தல் கும்பல், மேற்கு டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள கிடங்கில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. கடந்த 15-ம் தேதி அங்கு நுழைந்த போலீஸார், அங்கிருந்த சென்னை முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.2,000 கோடி.

கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்டஅயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, திமுகவில் இருந்து அவர் நிரந்தமாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக, தங்கள் அலுவலகத்தில் பிப்ரவரி 26-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார், கடந்த 23-ம் தேதி ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் (அழைப்பாணை) ஒட்டினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இதையடுத்து, அவரையும், அவரதுகூட்டாளிகளையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெய்ப்பூரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கைதை உறுதிப்படுத்தியுள்ள என்சிபி அதிகாரிகள், முழு விவரங்களை மதியம் 2 மணிக்கு மேல் சொல்வதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது அவரிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக