திங்கள், 11 மார்ச், 2024

ஓ.பன்னீர்செல்வம் சிவகங்கை தொகுதியில்? டெல்லிக்கு ஜாகையை மாற்ற திட்டமா? விருப்ப மனு.. பரபர தகவல்!

 tamil.oneindia.com - Vignesh Selvaraj  :  சென்னை: சிவகங்கை லோக்சபா தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட மருது அழகுராஜ் விருப்ப மனு அளித்துள்ளார்.
சிவகங்கை தொகுதியை தினகரனும், ஓபிஸ் தரப்பும் குறி வைக்கும் நிலையில், அங்கு ஓபிஎஸ் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
எதிர்வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுத்துள்ளார்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் தனது ஆதரவாளர்களைச் சந்தித்து ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.


ஓபிஎஸ் திட்டம்: பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் தரப்புக்கு எத்தனை சீட், எந்தெந்த தொகுதி, என்ன சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்பவை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
ஆனால், பாஜகவுடன் தான் கூட்டணி, மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவோம் என அடித்துக் கூறி வருகிறார் ஓபிஎஸ். ஓபிஎஸ் அணி சார்பில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதிமுகவுக்கு தற்போது கையில் உள்ள லோக்சபா தொகுதி தேனி தான். தேனியில் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் ஓபி ரவீந்திரநாத் போட்டியிட்டு வென்றார். இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் தேனி தொகுதி, பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கப்படுமா? அப்படி ஒதுக்கப்பட்டால் ஓபி ரவீந்திரநாத் அங்கு மீண்டும் போட்டியிடுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

ஓபிஎஸ் போட்டியிட பிளான்?: இதற்கிடையே, தேனி லோக்சபா தொகுதியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் களமிறங்க உள்ளதாகவும் பேச்சுகள் உலவி வருகின்றன. தேனி தொகுதியில் நிற்கப்போவது யார் என பெரும் விவாதமே நடக்கிறது. இதுபோக, ஓ.பன்னீர்செல்வம் இந்த எம்.பி தேர்தலில் போட்டியிடக்கூடும் என்றும் தகவல்கள் பரபரக்கின்றன.
Will O Panneerselvam contest in sivaganga lok sabha constituency


ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியும் பறிபோன நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது சட்டசபைக்கு செல்லாமல் தவிர்த்து வந்தார் ஓபிஎஸ். இதனால் தனது ஜாகையை டெல்லியை நோக்கி ஓபிஎஸ் திருப்பக்கூடும் இதனால், வரும் லோக்சபா தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிட்டு டெல்லிக்கு செல்லக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவகங்கை தொகுதி: அப்படி நின்றால் எங்கு போட்டியிடுவார் என்பது பற்றியும் தகவல்கள் கசிந்து வருகின்றன. சிவகங்கை மக்களவைத் தொகுதி, விஐபி தொகுதி அந்தஸ்து கொண்டது. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பல முறை வென்ற தொகுதி சிவகங்கை. இந்த முறை சிட்டிங் எம்.பி கார்த்தி சிதம்பரம் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சீட் பெற முயன்று வருகிறார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு 9 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த முறை காங். போட்டியிட்ட சிவகங்கை தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

பாஜகவில் சிவகங்கை தொகுதியைப் பொறுத்தவரை மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா, சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் மேப்பல் சக்தி, பாஜக சிவகங்கை தொகுதி பொறுப்பாளர் அர்ஜுன மூர்த்தி உள்ளிட்டோர், சீட் பெற விரும்புவதாகத் தெரிகிறது. அதேசமயம், பாஜக கூட்டணியில் இணைய விரும்பும் அமமுகவின் முக்கியமான குறிகளில் ஒன்றாகவும் சிவகங்கை தொகுதி உள்ளது.

தினகரன் வாக்கு வங்கி: அமமுக, சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் ஏற்கனவே நல்ல வாக்கு வங்கியைக் கொண்டுள்ளது. உள்ளாட்சி மன்றங்களிலும் அமமுகவினர் பலர் பதவிகளில் உள்ளனர். இதனால், வரும் லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியை எதிர்பார்க்கிறார் டிடிவி தினகரன். அவரே போட்டியிடும் திட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஓபிஎஸ் அணியினரும் சிவகங்கை தொகுதியைப் பெறுவதில் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. தேனி உள்ளிட்ட 2 தொகுதிகளை ஓபிஎஸ் பெற விரும்புவதாகவும், தேனி தொகுதியை அமமவுக்கு கொடுத்தால் சிவகங்கை தொகுதியை தனது அணிக்கு தர வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஓபிஎஸ் சிவகங்கையில் போட்டியிட விருப்ப மனு: இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்தின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு வழங்கும் நிகழ்வு சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட வேண்டும் என ஓபிஎஸ் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் விருப்ப மனு அளித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக