ஞாயிறு, 10 மார்ச், 2024

மணியம்மையார் பிறந்தநாள்! பெரியார் திரைப்படத்தில் மணியம்மையார்...

 மார்ச் 10 மணியம்மையார் பிறந்தநாள்!  Maniammai
பெரியார் திரைப்படத்தில் மணியம்மையார் பற்றிய பல செய்திகள் இடம்பெறவில்லை
மேலும் அதில் மணியம்மையாரின் பாத்திரப்படைப்பு கூட சரியாக காட்டப்படவில்லை
யாரவது மணியம்மையார் வரலாற்றை திரைப்படமாக தயாரிக்க வேண்டும்!

நன்றி விகடன் :  பெரியாரின் ஆயுளை நீட்டிக்கச் செய்த பெண்மணி மணியம்மை!
வி.எஸ்.சரவணன்
``பெரியாருடன் குற்றாலத்திலும் ஈரோட்டிலும் ஒரு மாத காலமிருந்தேன். அவர் உடல்நிலை மிகப்பலவீனமாகவும் நாளுக்கு நாள் மெலிவாகியும் வருகிறது. அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவருக்குப் பின் இயக்கக் காரியங்களைப் பார்க்கத் தகுந்த முழு மாதக் காலமும் முழுக் கொள்கைக்காரர்களும் கிடைப்பார்களா என்ற கவலையிலேயே இருக்கிறார்.’’

1943-ம் ஆண்டு குடியரசு ஏட்டில் மணியம்மை எழுதியதில் உள்ள வரிகள் இவை. இந்த வரிகளில் தென்படுவது மணியம்மையின் உண்மையான அக்கறை. அந்த அக்கறைதான் 1973-ம் ஆண்டு வரை, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பெரியாருடன் பயணித்து, அவரை நன்கு கவனித்துக்கொண்டும் இயக்க வேலைகளைப் பார்க்கவும் வைத்தது. மணியம்மை போன்ற அர்ப்பணிப்பு மிக்க ஒருவரை நாம் காண்பது அரிது.

1920-ம் ஆண்டு, மார்ச் மாதம் 10-ம் நாள், வேலூரில் பிறந்தவர் காந்திமதி (மணியம்மையின் இயற்பெயர்). அவரின் அப்பா கனகசபை விறகுக் கடை வைத்திருந்தார். அம்மா, பத்மாவதி. வேலூர், கொசப்பேட்டை, அரசு பெண்கள் இடைநிலைப் பள்ளியில் படித்தார். காந்திமதியின் அப்பா, பெரியார் ஆதரவாளர். பெரியார் அந்தப் பகுதிக்கு வந்தால், இவர்களின் வீட்டில்தான் தங்கும் அளவுக்குப் பழக்கம் உண்டு. காந்திமதியின் அப்பா, பெரியாருக்கு அடிக்கடி கடிதம் எழுதும் பழக்கம் கொண்டவர். அப்படி ஒருமுறை, `உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளுங்கள்’ என்று எழுதியிருந்தார். அதற்குப் பெரியார் எழுதிய பதில் கடிதத்தில், `` `எல்லோரும் தூர இருந்தபடி உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால், கூட இருந்து உதவிசெய்ய யாருமில்லை. என்னவோ, என் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்’’ என்று எழுதியிருந்தார். அது கனசபையை என்னவோ செய்தது, மகள் காந்திமதியை பெரியாரிடம் அழைத்துவந்து, `இந்தப் பெண் கூட இருந்து தொண்டு செய்யட்டும்’ என்று கூறினார்.

1943-ம் ஆண்டில் கனகசபை இறந்துவிட, எவ்வித வைதிக சடங்குகளும் இன்றி, தமிழ்ப் பாடல்களைப் பாட வைத்து இறுதிக் காரியங்கள் நடத்தினார் கனகசபையின் நண்பரான அண்ணல் தங்கோ. அந்த நிகழ்ச்சிக்கு பெரியாரும் வந்திருந்தார். அதன்பின், முழுநேரமாக காந்திமதி பெரியாரிடம் வந்துசேர்ந்தார். அவரை, குலசேகரபட்டினம் தமிழ்க் கல்லூரியில் தமிழ் வித்துவான் படிப்பில் சேர்த்தார்.

காந்திமதிக்கு அண்ணல் தங்கோ இயக்கப் பேராக அரசியல்மணி என்று பெயர் வைக்கிறார். பத்திரிகைகளில் கே.ஏ.மணி என்று எழுதுகிறார். பின்னாளில் மணியம்மை என்றழைக்கப்படுகிறார். இந்தச் சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் எளிய மக்கள் முன்னேறுவதற்குத் தடையாக இருப்பவற்றை எதிர்த்துப் போராடும் பெரியாருக்குப் பக்கபலமாக இருக்கிறார். அதேநேரம் திராவிட இயக்கப் பணிகளிலும் முழு வீச்சில் களம் கண்டுவந்தார். அவரின் செயல்பாடுகளால், இயக்கத்தில் மாநிலப் பொறுப்பும் `விடுதலை’ பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பும் வந்தடைகின்றன. 1948-ம் ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு அரசுத் தடை விதித்தாலும், அதை மீறி போராடிய மணியம்மை கும்பகோணத்தில் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம், உங்கள் மதம் எது என்ற கேள்விக்கு, `எனக்கு எந்த மதமும் கிடையாது’ என்றும் `உங்கள் ஜாதி’ என்ற கேள்விக்கு, `திராவிட ஜாதி’ என்றும் தெரிவித்தார். நீதிபதி தண்டனை அளித்ததும், அதை மகிழ்ச்சியுடன் ஏற்பதாகச் சொன்னார்.

பெரியாரின் கூட்டங்களில், புத்தகங்களை விற்பனை செய்து, அதற்கான கணக்கு வழக்குகளை மிகச் சரியாக ஒப்படைப்பவர் மணியம்மை. மேலும், பெரியார் பேசுவதைக் குறிப்பெடுத்துக்கொண்டு, அதை சுவாரஸ்யமான கட்டுரையாக்குவதிலும் திறமை மிக்கவர். ஒரு கட்டத்தில் பெரியாரின் உடல்நிலை சரியில்லாமல் போய்க்கொண்டிருக்க, இயக்கத்தை வழிநடத்தும் ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும் என நினைத்தார். மணியம்மைதான் அதற்குத் தகுதியானவர் என்றதும், வாரிசாக்க அப்போதைய சட்டம் இடம் அளிக்காததால், திருமணம் செய்துகொண்டார். அதைச் சட்டப்படியான ஒரு ஏற்பாடு அவ்வளவுதான் என்றே பெரியார் குறிப்பிடுகிறார். இந்தத் திருமணத்தால், மணியம்மை பலரிடமிருந்து வசைச் சொற்களைக் கேட்க வேண்டியிருந்தது. ஆயினும் தனது செயலில் சமூகத்துக்கான நியாயம் இருப்பதால், அவை எதுவுமே அவரை வீழ்த்திவிட வில்லை.  

பெரியாரின் உடல்நிலையின்மீது எப்போதும் கவனத்தோடு இருப்பார். மருத்துவரின் ஆலோசனைபடியே உணவுகளை வழங்குவார். பெரியாரின் நண்பர்கள், தொண்டர்கள் ஆசையோடு அவருக்குச் சாப்பிடக் கொடுத்தாலும், கண்டிப்போடு தவிர்க்க வைத்துவிடுவார். ஒருமுறை, மணியம்மைக்குத் தெரியாமல் பெரியாருக்குப் பிரியாணியை அவர் நண்பர் தந்துவிட, உடலுக்கு என்னவாகுமோ என்று பதறிப்போனார். இன்னும் சொல்லப்போனால் ஒரு குழந்தையைப் பார்த்துக்கொள்வதைப்போல, பெரியாரைக் கவனித்துக்கொண்டார். பெரியாரும் மணியம்மையை அம்மா என்றே அழைத்தார். ஒருமுறை பெரியார், ``இந்த வயதிலும் நான் சாகாமல் இருக்கிறேன் என்றால், இந்த அம்மாவால் என்பது யாருக்கும் தெரியாது. எனது உடம்புக்கு ஏற்ற உணவைப் பக்குவப்படி கொடுப்பது, உடை மாற்றுவது எல்லாம் இந்த அம்மாதான்’’ என்று மணியம்மையைப் பற்றிச் சொல்கிறார் என்றால், மணியம்மையின் பணி எவ்வளவு அர்ப்பணிப்பு மிக்கதாக இருந்திருக்க வேண்டும்.

சுயமரியாதைத் திருமணங்களையும் முன்னின்று நடத்தியிருக்கிறார் மணியம்மை. பெரியார் சிறையிலிருந்தபோது, திருச்சி பெரியார் மாளிகையைப் புதுப்பிக்க அனுமதிகேட்டார். வீண் செலவு எதற்கு என்பதாக நினைத்த பெரியாருக்கு, முறையாகப் பராமரிக்க வேண்டிய தேவைகளைக் கூறி அனுமதிப் பெற்று புதுப்பித்தார். இப்படிப் பல விஷயங்களைத் தாமே முன்வந்து செய்துமுடித்தார். `குடியரசு’ இதழில் `இளந்தமிழா புறப்படு போருக்கு’ எனும் கட்டுரையை வெளியிட்டதற்காக அரசு அவரை ஒரு மாதம் சிறையில் அடைத்தது.

பெரியாரின் மறைவு வரை, அவர் இயங்குவதற்கு உறுதுணையாக, சமூகத் தொண்டாற்றுவதற்கு பேருதவியாக இருந்தார் மணியம்மை. திருச்சியில், இவர்கள் தொடங்கிய குழந்தைகள் இல்லத்தில் வளர்ந்த ஒவ்வொரு குழந்தையையும் நேசித்து அவர்களின் எதிர்காலம் வரை யோசித்து, செயல்பட்டு உடன்நின்றார். கழகப் பணிகளிலும் அந்தத் தீவிரம் கொஞ்சமும் குறையவில்லை. 1974-ம் ஆண்டு, பெரியார் திடலில், ராவண லீலா கொண்டாடத் திட்டமிட்டார். அதற்குப் பல முனைகளிலிருந்து எதிர்ப்புகள் வந்தன. அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி சார்பிலும் விழாவைக் கைவிடச் சொல்லிக் கேட்டனர். அனைத்தையும், `இது பெரியார் மேற்கொள்ள இருந்த பணி’ என்று கூறி, வெற்றிகரமாக விழாவை நடத்தி முடித்தார். அதற்காக வழக்கு போடப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். தம் வாழ்வில் ஒவ்வொரு நாளையும் இந்தச் சமூக முன்னேற்றத்துக்காக மட்டுமே அர்ப்பணித்த மணியம்மை, 1978-ம் ஆண்டு மறைந்தார்.

இது மணியம்மையின் நூற்றாண்டு. இந்தத் தருணத்தில் அவரின் உழைப்பை, சேவையை நினைவுகூர்வோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக