ஞாயிறு, 10 மார்ச், 2024

ஜாஃபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

 minnambalam.com - christopher : போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாஃபர் சாதிக் மீது அமலாக்கத்துறை இன்று (மார்ச் 10) வழக்குப்பதிவு செய்துள்ளது.
டெல்லியில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும், டெல்லி போலீசாரும் மேற்கொண்ட சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு மூளையாக செயல்பட்டு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில், நேற்று மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் டெல்லியில் அவரை கைது செய்தனர்.


உணவு பொருள் என்ற பெயரில் போதை பொருளை இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக ஜாபர் சாதிக் கடத்தியுள்ளதாகவும்,

சர்வதேச சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்ட ஜாபர் சாதிக்,  அதில் சம்பாதித்த பெரும் பணத்தை  திரைப்படம், கட்டுமானம், ஓட்டல் போன்ற தொழில்களில் முதலீடு செய்துள்ளதாகவும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

ஜாபர் சாதிக் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் விதித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே போதை கடத்தல் தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையிடம்  மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழங்கி இருந்தனர்.

இந்த நிலையில், சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக ஜாபர் சாதிக் மீது  அமலாக்கத்துறை இன்று வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதனையடுத்து போதைப்பொருள் கடத்தல் தொடர்பான அவரது நிதி தொடர்புகள், அவரது நிதி ஆதாரங்கள் குறித்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் அமலாக்கதுறையும் ஜாபர் சாதிக்கிடம் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக