சனி, 16 மார்ச், 2024

அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி உடன்பாடு? 7 தொகுதிகளை ஒதுக்க முடிவு:

maalaimalar :  சென்னை: பாராளுமன்றத் தேர்தலில் பா.ம.க. எந்த கூட்டணியில் சேரப்போகிறது? என்பது மிகப் பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. கூட்டணி தொடர்பாக பாரதிய ஜனதா, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் பா.ம.க. ரகசியமாக பேசி வந்தது.
இதில் எந்த அணியில் பா.ம.க. சேரப் போகிறது என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக பா.ம.க. இறுதி முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியானது. 

இதை தொடர்ந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது என்று பா.ம.க. அதிரடி முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. 10 தொகுதிகளை கேட்ட நிலையில் 7 தொகுதிகளை ஒதுக்குவதற்கு அ.தி.மு.க. சம்மதித்திருப்பதாகவும், இதனால் 2 கட்சிகளுக்கு இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக அ.தி.மு.க., பா.ம.க. தலைவர்கள் இன்று மாலையில் சந்தித்து பேசுவதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து சேலம் சென்றிருந்தார். இந்த நிலையில் அவர் இன்று பிற்பகலில் சென்னை திரும்புகிறார்.

பா.ம.க. நிர்வாகிகள் இன்று மாலை அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டுக் குழுவினரை சந்தித்து பேச இருப்பதாகவும் அப்போது நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பின்னர், கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

அதே நேரத்தில் தே.மு. தி.க. நிர்வாகிகளும் அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரை இன்று மாலையில் சந்தித்து 3-வது கட்ட பேச்சுவார்த்தையை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பேச்சுவார்த்தையின் போது தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் இறுதியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக