திங்கள், 11 மார்ச், 2024

தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகளின் உத்தேச பட்டியல்

 மாலைமலர் :சென்னை:  பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது.
கடந்த தேர்தலில் 20 தொகுதிகளில் தி.மு.க. நேரடியாக போட்டியிட்டது. ஆனால் இந்த முறை ஐ.ஜே.கே. கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. அக்கட்சி எம்.பி.யாக உள்ள பாரிவேந்தர் பெரம்பலூரில் உதயசூரியன் சின்னத்தில் கடந்த முறை போட்டியிட்டிருந்தார்.
இதனால் அந்த ஒரு இடத்தை தி.மு.க. எடுத்துக்கொண்டு 21 தொகுதிகளில் இந்த தேர்தலில் களம் காண்கிறது. தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டு விட்டது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட நாகை, திருப்பூர் தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு மதுரை, கோவை தொகுதிகளும் கிடைத்து விடும் என்று அக்கட்சியினர் நம்பிக்கையோடு உள்ளனர்.



இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் கிடைத்து விட்டது.

ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள சில தொகுதிகளை தி.மு.க. மாற்ற உள்ளது. இதில் புதுச்சேரி தொகுதியை வழக்கம் போல் காங்கிரசுக்கு தி.மு.க. கொடுத்து விடுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளில் கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, திருச்சி, கரூர், ஆரணி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தேனி ஆகிய தொகுதிகளை காங்கிரஸ் மீண்டும் கேட்டு வருகிறது.

ஆனால் இந்த முறை காங்கிரஸ் வசம் உள்ள சில தொகுதிகளை தி.மு.க. எடுத்துக்கொண்டு அதற்கு பதிலாக புது தொகுதிகள் சிலவற்றை காங்கிரசுக்கு கொடுக்க உள்ளது.

ஏனென்றால் காங்கிரஸ் வசம் உள்ள கரூர் தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு மகன் அருண் போட்டியிட எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். திருவள்ளூர் தொகுதியையும் சிவகங்கை தொகுதியையும் இம்முறை தி.மு.க. எடுத்துக்கொள்ளும் என கட்சி நிர்வாகிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

காங்கிரஸ் வசம் உள்ள ஆரணி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதியையும் தி.மு.க. எடுத்துக்கொண்டு வேறு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கும் என்றும் தெரிகிறது. இதற்காக காங்கிரஸ் கட்சியுடன் இன்று தி.மு.க. ஆலோசிக்க உள்ளது.

தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில் சில தொகுதிகளின் வேட்பாளர் யார் என்று இப்போதே தெரிந்து விட்டது.

தூத்துக்குடியில் கனிமொழி, நீலகிரியில் ஆ.ராசா, ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர்.பாலு, மத்திய சென்னையில் தயாநிதி மாறன், தென் சென்னையில் தமிழச்சி தங்க பாண்டியன், வேலூரில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகளில் 7 தொகுதிகளின் வேட்பாளர் யார்? என்று இப்போதே தெரிந்துவிட்டதால் மீதம் உள்ள 14 தொகுதிகளை தி.மு.க. அடையாளம் காண உள்ளது. அது சம்பந்தமாக இன்று காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

இதில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் பேசி முடிவு செய்யப்படும் அதைத் தொடர்ந்து ம.தி.மு.க.வுக்கும் தொகுதி இறுதி செய்யப்படும்.

எனவே எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை தி.மு.க. நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக