வியாழன், 22 பிப்ரவரி, 2024

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை வாதத்திற்கு ஆர்யமா சுந்தரம் பதிலடி ! எல்லாம் தவறு

 tamil.oneindia.com - Vignesh Selvaraj : சென்னை: செந்தில் பாலாஜி மீது 30 வழக்குகள் உள்ளதால் அவரை ஜாமீனில் விடக்கூடாது என அமலாக்கத்துறை வாதம் வைத்த நிலையில், அவற்றில் பல கேஸ்கள், போராட்டங்கள் நடத்தியதற்காக, போஸ்டர் ஒட்டியதற்காக போடப்பட்ட வழக்குகள் என பதில் வாதம் வைத்துள்ளது செந்தில் பாலாஜி தரப்பு.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக தாக்கல் செய்துள்ள மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த சில நாட்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி இந்த வழக்கு விசாரணையின்போது செந்தில் பாலாஜி தரப்பு பல்வேறு முக்கிய வாதங்களை முன்வைத்தது.



இப்பயாவது ஜாமீன் கொடுங்க: அப்போது, அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி விலகிவிட்டதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரினார். அமைச்சராக இருப்பதால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்று தான் அமலாக்கத்துறை தொடர்ச்சியாக வாதம் வைத்து வந்தது. அமலாக்கத்துறையின் வாதம் தற்போது செல்லாததாகிவிட்டது. எனவே, அவருக்கு இப்போது ஜாமீன் வழங்க வேண்டும் என ஆர்யமா சுந்தரம் வாதங்களை வைத்தார்.

அதற்கு அடுத்த நாள், அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், வாதங்களை வைத்தார். முந்தைய ஜாமீன் மனு தள்ளுபடிக்கு பிறகு இந்த வழக்கில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தவிர, வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதுவும் ஜாமீன் மனு விசாரணை துவங்குவதற்கு ஒரு நாள் முன் தான் ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும் இன்னமும் அவர் செல்வாக்கான நபராகவே உள்ளார்.

30 வழக்குகள் இருக்கு: ஏற்கனவே பணம் கொடுத்தவர்களிடம் செந்தில் பாலாஜி சமரசம் செய்திருக்கிறார். வழக்கில் சாட்சிகள் இன்னும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படாத நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைக்கக் கூடும். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சண்முகம், சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாக உள்ளனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார்.

மேலும், 30 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர் ஜாமீனில் விடுதலையானால் எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டார் என நம்ப எந்த காரணமும் இல்லை. சாட்சி விசாரணை துவங்க அமலாக்கத் துறை தயாராக உள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்காத அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் வாதங்களை வைத்தார்.

போராட்டம் நடத்திய வழக்குங்க.. செந்தில் பாலாஜி தரப்பு பதில்: இந்நிலையில், அமலாக்கத்துறை தரப்பு, செந்தில் பாலாஜி மீது 30 வழக்குகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி வைத்த வாதங்களுக்கு பதிலளித்து, இன்று அடுக்கடுக்காக வாதங்களை வைத்தார் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம்.

அமலாக்கத்துறை ஆதாரங்களில் முன்னுக்குப் பின் முரண்.. பாயிண்டை பிடித்த செந்தில் பாலாஜி தரப்பு!அமலாக்கத்துறை ஆதாரங்களில் முன்னுக்குப் பின் முரண்.. பாயிண்டை பிடித்த செந்தில் பாலாஜி தரப்பு!

செந்தில் பாலாஜிக்கு எதிராக 30 வழக்குகள் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டதைச் சுட்டிக்காட்டிய ஆர்யமா சுந்தரம், போராட்டங்கள் நடத்தியதற்காக, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டது, கொரோனா விதிகளை மீறியதாக என அரசியல் காரணமாக தொடரப்பட்ட வழக்குகள் அவை என்றார்.

அமலாக்கத்துறை வாதமே தவறு: இந்த 30 வழக்குகளில், 21 வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட மூன்று வழக்குகள் தவிர, மீதமுள்ள ஆறு வழக்குகள், போஸ்டர் ஒட்டியது, முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பியது தொடர்பான வழக்குகள் தான் என்பதால், 30 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை முன் வைத்த வாதம் தவறு என தெரிவித்தார்.

அன்றைக்கு செந்தில் பாலாஜி கரூரிலேயே இல்லை: மேலும், கரூரில் சோதனைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்குக்கும், செந்தில் பாலாஜிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சம்பவம் நடந்தபோது செந்தில் பாலாஜி கரூரிலேயே இல்லை. அப்படி இருக்கும்போது, அவர் மீது எப்படி குற்றம்சாட்ட முடியும் என்றும் வாதிட்டார் ஆர்யமா சுந்தரம்.

அமலாக்கத்துறையின் பதில்: அதைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதங்களை வைத்தார். 2,700 பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒவ்வொரு நாளும் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள் அனைத்தும் பென் டிரைவில் உள்ளன. எந்த ஆதாரங்களும் ஜோடிக்கப்படவில்லை. 67 கோடி ரூபாய் வசூலித்தது தொடர்பான அனைத்து ஆதார ஆவணங்களும் சிறப்பு நீதிமன்றத்தால் சான்றளிக்கப்பட்ட உண்மை ஆவணங்கள்.

செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லாவிட்டாலும், தற்போது எம்எல்ஏ ஆக நீடிக்கிறார். ஜாமீன் மனு விசாரணைக்கு வந்ததால் தான் அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்தார். அதை அரசு உடனடியாக ஏற்றுக் கொண்டதில் இருந்தே அவர் செல்வாக்கான நபர் என்பது தெளிவாகிறது. சாட்சிகள் அச்சுறுத்தப்பட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் ஜாமீன் வழங்க கூடாது. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக