ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

டெல்லி பாஜக மாநாட்டில், அண்ணாமலை தரையில் அமர்ந்திருக்கும் காட்சி

 மின்னம்பலம் -Aara : டெல்லி பாஜக மாநாட்டில், அண்ணாமலை தரையில் உட்கார வைக்கப்பட்டாரா?
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகக் குழு மற்றும் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகள் அடங்கிய மெகா அமர்வு நேற்றும் இன்றும் (பிப்ரவரி 17,18) டெல்லியில் நடைபெற்றது.
இந்த முக்கியமான கூட்டத்தில் தமிழ்நாடு பாஜகவின் மாநில தலைவரான அண்ணாமலை தரையில் அமர்ந்திருக்கும் காட்சி சமூக தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
பாஜகவின் தேசிய அளவிலான நிர்வாகிகள், மாநிலத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களில் பெரும்பான்மையோர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற பாரத் மண்டபத்தில் சொகுசு நாற்காலிகளில் அமர்ந்திருக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட சிலர் தரையில் அமர்ந்திருந்தனர்.

இந்த காட்சியை வைத்துக்கொண்டு சமூக தளங்களில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தேசிய பாஜக தலைமையால் அவமதிக்கப்பட்டு விட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

’சிங்கத்தை இப்படி தரையில் உட்கார வச்சுட்டீங்களேடா’ என்ற கமெண்ட்களோடு இந்த புகைப்படங்கள் அதிக அளவு பகிரப்பட்டு வருகின்றன.

டெல்லியில் அண்ணாமலை அவமதிக்கப்பட்டாரா என்ற கேள்வியும் இதோடு சேர்ந்து எழுகிறது. ஏனென்றால் இந்த மாநாட்டில் பங்கேற்ற மிகப் பெரும்பாலானோர் நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் நிலையில், ஒரு மாநில தலைவரான அண்ணாமலை ஏன் தரையில் அமர வேண்டும் என்று கேள்வியும் எழுகிறது.

இதுகுறித்து இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.
“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாரத் மண்டபத்தில் நடைபெற்ற தேசிய நிர்வாகிகள் மாநாட்டில் தரையில் அமர்ந்து பிரதமர் மோடியின் பேச்சை கவனித்தது உண்மைதான். இது திட்டமிட்டு நடந்ததல்ல. நேற்று நடந்த அமர்வில் கலந்து கொண்ட பலரும் வெளி அரங்கில் அமர்ந்தபடி எல்இடி திரையில் கூட்டத்தை கவனித்தார்கள்.

இன்று பிரதமர் மோடி நிறைவுரை ஆற்றியதால் மண்டபத்தின் வெளியரங்களில் இருந்த சுற்று வட்டார ஹால்களில் இருந்த அனைத்து நிர்வாகிகளும் ஒன்று திரண்டு இன்று பிரதான மண்டபத்துக்கு வந்து விட்டனர். அதனால் அங்கிருக்கும் இருக்கைகளை விட அதிகமான கூட்டம் திரண்டது.

இந்த நிலையில், அண்ணாமலை வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளி நிர்வாகிக்கு தனது இருக்கையை விட்டுக் கொடுத்தார். அதனால் அவருக்கு இருக்கை இல்லாத நிலையில் சக நிர்வாகிகளுடன் கீழே அமர்ந்திருந்தார்.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கூட்டங்களில் இதுபோன்று கீழே அமர்ந்திருப்பது என்பது சாதாரணமானது. ஏற்கனவே அத்வானி தலைமையில் இதேபோல் நடந்த தேசிய நிர்வாகிகள் குழு கூட்டத்தில் இப்போதைய பிரதமர் மோடியும் தரையில் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதை வைத்து சமூக நீதி விளையாட்டுக்களை தமிழ்நாட்டில் விளையாட வேண்டாம்” என்கிறார்கள்.

இன்னும் சில பாஜக நிர்வாகிகளோ, ‘ அண்ணாமலை தரையில் உட்காரவில்லை என்றால், இப்படி ஒரு செய்தி வந்திருக்குமா? பல ஆயிரம் பேரில் ஒருவராக நாற்காலியில் அமர்ந்திருந்தால் கிடைக்காத கவன ஈர்ப்பு, இப்போது கிடைத்துவிட்டதே’ என்று சிரிக்கிறார்கள்.
–வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக