சனி, 3 பிப்ரவரி, 2024

கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் வழங்ககூடாது.. சுதர்சன நாச்சியப்பன் தலைமை காங்கிரஸ் கூட்டத்தில் காங்கிரஸ் தீர்மானம்!

tamil.oneindia.com - Nantha Kumar R:  சிவகங்கை: சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் கார்த்தி சிதம்பரத்துக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இவர் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
Resolution passed in Congress that party should not be given a chance Karti Chidambaram on Sivaganga
இந்நிலையில் தான் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் சிவகங்கை தொகுதியில் போட்டியிட கார்த்தி சிதம்பரம் காய் நகர்த்தி வருகிறார். தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் உள்ளது.

இத்தகைய சூழலில் தான் காங்கிரஸ் கட்சி மீண்டும் சிவகங்கை தொகுதியை திமுகவிடம் கேட்டு பெற முயன்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு திமுகவுடன் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ் சார்பில் கடந்த முறை வழங்கியதை விட கூடுதல் தொகுதியை தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதோடு கூடதுலாக சில தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் இன்னும் இறுதி முடிவு என்பது எடுக்கப்படவில்லை.

இருப்பினும் கூட கடந்த முறை வென்ற தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறையும் திமுக வழங்கலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் சிவகங்கை தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கலாம். இந்நிலையில் தான் சிவகங்கை தொகுதியில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய எம்பி கார்த்தி சிதம்பரம் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது சுதர்சன நாச்சியப்பன் கடந்த 1999-2004 காலக்கட்டத்தில் சிவகங்கை தொகுதி எம்பியாக இருந்தார்.

அதன்பிறகு ப சிதம்பரத்துக்கு காங்கிரஸ் கட்சி இந்த தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் 2004, 2009 தேர்தலில் வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் கார்த்தி சிதம்பரம் தோற்ற நிலையில் 2019ல் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த தீர்மானத்தின் மூலம் வரும் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் சுதர்சன நாச்சியப்பன் போட்டியட விரும்புவதும் முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. சிவகங்கை தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியில் இப்படிப்பட்ட சூழல் நிலவும் நிலையில் திமுகவினரோ இந்த முறை சிவகங்கை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுக்க கூடாது என பேசி வருகின்றனர். இதனால் இந்த தொகுதி எந்த கட்சிக்கு செல்லும். வேட்பாளராக யார் போட்டியிடுவார்கள்? என்பதை அறிய இன்னும் சிறிது காலம் நாம் காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக