திங்கள், 5 பிப்ரவரி, 2024

மாலத்தீவில் இருந்து இந்திய படைகள் வெளியேற்றம் எப்போது? அதிபர் முய்சு புதிய அறிவிப்பு

BBC News தமிழ் :  மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை (பிப்ரவரி 5) முதல் முறையாக உரையாற்றினார்.
இந்த உரையில், முகமது முய்சு மாலத்தீவின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் எதையும் தனது அரசு செய்யாது என்றார்.
மாலத்தீவின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையை அச்சுறுத்தும் எந்தவொரு வெளிப்புற அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டோம் என்றும் முய்சு கூறினார்.
1932-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாலத்தீவு பாராளுமன்றத்தில் அப்போதைய அதிபர் சுல்தான் முகமது ஷம்சுதீன் ஆற்றிய உரையையும் முகமது முய்சு மேற்கோள் காட்டிப் பேசினார்.
இஸ்லாம் மதம் மாலத்தீவுக்குக் கிடைத்த ஆசிர்வாதம் என்று நம்பிய சுல்தான் முகமதுவின் நிலைப்பாட்டையே தாமும் பின்பற்றுவதாகக் கூறினார் முய்சு.முக்கியமாக, தனது முதல் உரையில் முய்சு இந்தியாவை பற்றியும் பேசினார். மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்களைத் திரும்பப் பெற இந்தியா கொடுத்திடுக்கும் காலக்கெடுவைப் பற்றியும் அவர் கூறினார்.

முகமது முய்சு அதிபர் தேர்தல் பிரசாரத்தில் ‘இந்தியாவே வெளியேறு’ என்ற கோஷத்தை முன்வைத்திருந்தார்.

இந்திய படைகள் வெளியேற்றம் எப்போது?

மாலத்தீவு அதிபரான பிறகு, இந்திய ராணுவ வீரர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டதுடன், வரும் மார்ச் மாதம் வரை அதற்கான காலக்கெடுவும் வழங்கியிருந்தார்.

இது குறித்து முய்சு மாலத்தீவு நாடாளுமன்றத்தில் பேசிய முய்சு, “வெளிநாட்டு ராணுவத்தை நாட்டிலிருந்து அகற்றுவோம், நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த ஒப்பந்தமும் செய்ய மாட்டோம் என்பதற்காகவே நாட்டின் பெரும்பான்மையான மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர் என்று நம்புகிறேன்,” என்றிருந்தார்.

மேலும், “மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மாலத்தீவில் இருந்து இந்தியா தனது படைகளை திரும்பப் பெறுமாறு அதிகாரப்பூர்வமாகக் கூறியுள்ளோம். இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுவரை நடைபெற்ற கலந்துரையாடல்களின்படி, 2024-ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதிக்குள் மூன்று விமான தளங்களில் ஒன்றிலிருந்து இந்தியா தனது துருப்புகளை திருமபப் பெறும். மீதமுள்ள இரண்டு விமான தளங்களில் இருக்கும் இந்திய துருப்புகள் 2024-ஆம் ஆண்டு, மே மாதம் 10-ஆம் தேதிக்குள் சொந்த நாட்டிற்கு திரும்புவார்கள்,” என்றார்.

மாலத்தீவு ஊடகமான தி எடிஷனின் அறிக்கையின்படி, "இஸ்லாம் மதத்தில் இருப்பதால் மாலத்தீவில் சமத்துவமும் நீதியும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது" என்று முய்சு கூறியுள்ளார்.

“இதற்கு ஆதாரம் காட்டத் தேவையில்லை. நம் சொந்த பலத்தால் நாம் சுதந்திரமாக இருப்பது சிறிய விஷயமல்ல. இந்த நிலையை அடைவதற்காக பல பெரிய நாடுகள் தங்கள் உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக உள்ளன,” என்றார்.

முகமது முய்சுவின் பேச்சை விமர்க்கும் எதிர்க்கட்சிகள்
அதிபராகப் பதவியேற்ற பிறகு முகமது முய்சு மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஆற்றிய முதல் உரை இதுவாகும்.
முய்சு பேசும்போது, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறைவாகவே இருந்தனர்.

மாலத்தீவின் பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயகவாதிகள் ஆகியோர் திங்கள்கிழமை நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரைப் புறக்கணித்தனர்.

நாடாளுமன்றத்தை புறக்கணிக்கப் போவதாகவும், இதற்கு பல காரணங்கள் இருப்பதாகவும் மாலத்தீவு ஜனநாயக கட்சி ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிவித்திருந்தது.

அதிபர் உரை நடைபெறும் நாள் விடுமுறை நாளாக இருந்ததும், முய்சு இந்த வழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பதும் எதிர்ப்புக்கு ஒரு காரணம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த முடிவால் நாடாளுமன்றத்திற்கான மரியாதை புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என்பது குறித்து அரசு உரிய விசாரணை நடத்தவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

சமீபத்தில், முய்சு அமைச்சரவையில் நான்கு உறுப்பினர்களுக்கு ஒப்புதல் அளிக்கும் போது நாடாளுமன்றத்தில் எதிர்ப்புகள் எழுந்தன. இதன் போது எம்.பி.க்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.

அதேசமயம், பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறாத மூன்று உறுப்பினர்கள் இந்த அமர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதால் நாடாளுமன்ற அமர்வைப் புறக்கணிக்கப் போவதாக ஜனநாயகக் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

மாலத்தீவு - இந்தியா உறவில் விரிசல்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விரிசல் அதிகரித்துள்ளது.

இதற்கு முய்சுவின் 'இந்தியாவே வெளியேறு’ என்ற பிரசாரத்தைத் தவிர, வேறு பல காரணங்களும் உள்ளன.

இந்தியப் பிரதமர் மோதி ஜனவரி முதல் வாரத்தில் லட்சத்தீவுக்குச் சென்றார். இந்த சுற்றுப்பயணத்தின் படங்கள் குறித்து முய்சு அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தனர்.

இந்தக் கருத்துகளுக்கு இந்தியர்களும் சில தொழில் நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

அப்போது மாலத்தீவைப் புறக்கணிப்பது குறித்தும் பேசப்பட்டது.

மாலத்தீவின் பொருளாதாரத்தின் பெரும்பகுதி சுற்றுலாத் துறையிலிருந்து வருகிறது. மாலத்தீவுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகளில் கணிசமானவர்கள் இந்தியர்களே.

இந்தியாவின் இந்த எதிர்ப்பிற்குப் பிறகு, மாலத்தீவு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மாலத்தீவின் முன்னாள் அதிபர்கள் முய்சு அரசாங்கத்தை விமர்சித்திருந்தனர்.

மாலத்தீவின் நீண்டநாள் நண்பனாக இந்தியா இருந்து வருவதாகவும், முய்சு அரசாங்கத்தின் அணுகுமுறை இரு நாடுகளுக்கும் இடையிலான விரிசலை அதிகரிக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறின.

ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்த அமைச்சர்களை இடைநீக்கம் செய்தால் மட்டும் போதாது என்றும், இந்தியாவிடம் அரசு முறையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் அப்போது கூறியிருந்தனர்.

இது தவிர, முகமது முய்சு சீனாவிலிருந்து மாலத்தீவு திரும்பியபோது, ‘நாங்கள் ஒரு சிறிய நாடு, எங்களை மிரட்ட யாருக்கும் உரிமை இல்லை’ என்று கூறியிருந்தார்.

முய்சு 'சீனாவுக்கு முன்னுரிமை' கொள்கையின் ஆதரவாளராகக் கருதப்படுகிறார். கடந்த காலங்களில் மாலத்தீவு அரசுகள் 'இந்தியாவுக்கு முன்னுரிமை' கொள்கையை பின்பற்றி வந்தன.

ஜெய்சங்கர் என்ன சொன்னார்?
சில நாட்களுக்கு முன்பு, மாலத்தீவில் எதிர்க்கட்சியான ஜம்ஹூரி கட்சியின் தலைவர் காசிம் இப்ராகிம், இந்தியா மற்றும் இந்தியப் பிரதமர் மோதியிடம் முறைப்படி மன்னிப்பு கேட்குமாறு ஜனாதிபதி முகமது முய்சுவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அப்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இந்தியா மற்றும் சீனா குறித்து தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

அண்டை வீட்டார் இடையே பிரச்சினைகள் எழத்தான் செய்யும். ஆனால் இறுதியில் அண்டை வீட்டாருக்கு அண்டை வீட்டாரே தேவை என்று ஜெய்சங்கர் கூறியிருந்தார்.
மேலும், "இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனா செல்வாக்கு செலுத்தும். ஆனால் இதுபோன்ற போட்டி அரசியலுக்கு இந்தியா பயப்படக் கூடாது," என்றார்.

“சீனாவும் ஒரு அண்டை நாடு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மற்றைய அண்டை நாடுகளில் சீனா பல வழிகளில் செல்வாக்கு செலுத்த முனையும். சீனாவைக் கண்டு நாம் பயப்பட வேண்டியதில்லை. உலகளாவிய அரசியல் ஒரு போட்டி விளையாட்டு. அவர்களால் முடிந்ததை அவர்கள் செய்யட்டும், நாங்கள் எங்களால் முடிந்ததை முயற்சிப்போம்,” என்று ஜெய்சங்கர் கூறியிருந்தார்.

முய்சுவுக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானம் தயார்
முய்சுவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.
மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகையில், முய்சுவுக்கு எதிராக குற்றம் சாட்டப்படும் இந்த நேரம் பல வழிகளில் முக்கியமானது.

முய்சு அதிபராகப் பதவியேற்ற மூன்று மாதங்களுக்குள் பதவி நீக்கப் பிரேரணை கொண்டுவரப்பட்டதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் காணப்படுகின்றன.

மாலத்தீவு ஜனநாயகக் கட்சியி துணைத் தலைவர் ஹுசைன் ஒரு பேட்டியில், “அதிபர் தனது கொள்கைகளால் இந்தியப் பெருங்கடல் பகுதியை ஆபத்தில் ஆழ்த்துகிறார்,” என்று கூறியிருந்தார். ராணுவத்தின் உதவியையும் பணத்தையும் பயன்படுத்தி நாட்டின் நாடாளுமன்றத்தை முறையாகச் செயல்பட விடாமல் செய்து வருகின்றனர்,” என்றார்.

80 உறுப்பினர்களைக் கொண்ட மாலத்தீவு மக்களவையில் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி 42 இடங்களைக் கொண்டுள்ளது.

13 இடங்களைக் கொண்ட ஜனநாயகவாத கட்சியினரும் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவளிக்கின்றனர்.

அரசியல் எதிரிகளாக இருக்கும் இந்த இரு கட்சிகளின் தலைவர்களும் ஒற்றை இலக்கை அடைய இணைந்துள்ளனர். அந்த இலக்கு முய்சுவை பதவி நீக்கம் செய்வதாகும்.

மாலத்தீவின் நாடாளுமன்ற தேர்தல் வரும் மார்ச் மாதம் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

முய்சுவுக்கு இது கடினமான சோதனையாக இருக்கும். அவரது கொள்கைகளை நடைமுறைப்படுத்த, சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அதற்கு நாடாளுமன்றத்தின் ஆதரவு அவசியம்.

ஹுசைன், தி இந்து நாளிதழிடம், "எப்போது பதவி நீக்கப் பிரேரணை கொண்டு வருவது என்பது குறித்து தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்வோம்," என்று கூறியிருந்தார்.

மேலும், “நாம் புவியியலை மாற்ற முடியாது. சீனாவை நம் பக்கம் கொண்டு வரமுடியாது. இந்தியா நமது அண்டை நாடு, நண்பன், குடும்பத்தில் ஒருவர். இந்தியா இல்லாமல் நாம் இருக்க முடியாது. அண்டை நாடுகளுக்கு முதலிடம் என்ற கொள்கையை இந்தியா பின்பற்றுவதால், எங்களால் நிம்மதியாக வாழ முடிகிறது,” என்று அவர் கூறினார்.


இந்தியா-மாலத்தீவு பிரச்னை
    நவம்பர் 2023 – மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று முகமது முய்சு அரசாங்கத்தை அமைத்தார்
    முதல் நாளே இந்திய படை வீரர்களைத் திரும்பப் பெறுமாறு முய்சு இந்தியாவிடம் கூறினார்
    நவம்பர் இறுதி - துருக்கி மற்றும் சவுதி அரேபியாவிற்குச் சென்றார் முய்சு
    டிசம்பர் 1, 2023 - துபாயில் பிரதமர் மோதியை சந்தித்தார் முய்சு
    ஜனவரி 2024 - முதல் வாரம், பிரதமர் மோதி லட்சத்தீவுக்குச் சென்றார். முய்சுவின் அமைச்சர்கள் பிரதமர் மோதியைப் பற்றி ஆட்சேபனைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தனர்
    இந்திய நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் மாலத்தீவைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது
    முய்சு அரசாங்கம் அமைச்சர்களை இடைநீக்கம் செய்தது. இது போதாது என எதிர்க்கட்சிகள் கூறின
    ஜனவரி 8-ஆம் தேதி - முய்சு சீனாவுக்குச் சுற்றுப்பயணம் சென்றார். திரும்பி வந்ததும் மாலத்தீவு ஒரு சிறிய நாடு, யாருக்கும் அதனை மிரட்ட உரிமை இல்லை என்றார்
    ஜனவரி 14 - முய்சு இந்தியாவுக்கு காலக்கெடுவை அறிவித்தார். அதன்படி, இந்திய வீரர்கள் மார்ச் 15-க்குள் மாலத்தீவை விட்டு வெளியேற வேண்டும்.
    ஜனவரி 28 - மாலத்தீவு நாடாளுமன்றத்தில் முய்சு ஆதரவு எம்.பி.க்களுக்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக