செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

ராமஜெயம் கொலை வழக்கில் பேரம் பேசப்படுகிறதா?

SP informs that 2 Bamakavins are connected in Ramajayam case

  நக்கீரன் : தி.மு.க. முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என். நேருவின் தம்பி தொழிலதிபர் கே.என். ராமஜெயம். இவர் 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி  திருச்சியில் நடைப்பயிற்சி சென்றபோது, கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்.
அவரின் உடல் திருச்சி - கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலை வழக்கினை,
உள்ளூர் போலீசார் முதலில் விசாரித்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்தனர். இருப்பினும் எந்தத் துப்பும் துலங்கவில்லை.
அதைத் தொடர்ந்து ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன், 'இந்த வழக்கைத் தமிழக அரசின் சிறப்புப் புலனாய்வுக் குழு மூலம் விசாரிக்க வேண்டும்' என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமீபத்தில் வழக்கு தொடர்ந்தார்.



பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவின்படி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், டி.எஸ்.பி. மதன்குமார் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், பாலன் கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடிகள் 20 பேரிடம் விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில், அதில் 12 பேரை உண்மைக் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டது. பின்னர் சாமி ரவி, கடலூர் லெப்ட் செந்தில், திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து, சீர்காழி சத்யராஜ், தினேஷ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், சண்முகம், ராஜ்குமார், சிவ குணசேகரன், சுரேந்தர், கலைவாணன் ஆகிய 13 ரவுடிகளுக்கு திருச்சி கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடலூர் லெப்ட் செந்தில், திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், திண்டுக்கல் தினேஷ் ஆகிய 4 ரவுடிகள் தவிர்த்து மீதமுள்ள 9 ரவுடிகளும் திருச்சி 6வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜராகினர். அதைத் தொடர்ந்து விசாரணை அதிகாரியும் எஸ்.பி.யுமான ஜெயக்குமார், தொழிலதிபர் வழக்கு தொடர்பாக மேற்கண்ட ரவுடிகளிடம் உண்மைக் கண்டறியும் சோதனைக்கு அனுமதி தருமாறு மனுத் தாக்கல் செய்தார். அதில், வழக்கு விசாரணையின்போது கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நம்பத் தகுந்த, ஆனால் உறுதி செய்யப்படாத தகவலின் அடிப்படையில் மேற்கண்ட 13 ரவுடிகள் மீது விசாரணை நடத்த வேண்டியுள்ளது என மனுவில் தெரிவித்து இருந்தார்.

மேலும் உண்மைக் கண்டறியும் சோதனைக்கு ரவுடிகள் அனைவரும் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுத் தந்திருப்பதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இதற்கிடையே ரவுடிகள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் உண்மைக் கண்டறியும் சோதனை மருத்துவர்கள் மற்றும் வக்கீல்கள் முன்னிலையில் நடத்த வேண்டும் என வாதிட்டனர். அதனைத் தொடர்ந்து, ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக ரவுடிகளிடம் உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

கொலையாளிகள் பயன்படுத்திய காரின் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனாலும் குற்றவாளிகளை நெருங்க முடியவில்லை. இதனால் இந்த வழக்கில் பெரும் தொய்வான நிலை ஏற்பட்டது. கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்த வழக்கில் கொலையாளிகள் யார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து கோர்ட்டு உத்தரவின் பேரில், ராமஜெயம் கொலை வழக்கில் துப்புத் துலக்க சிறப்புப் புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் ராமஜெயம் கொலை வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. ராமஜெயம் கொலை வழக்கில் பாமகவை சேர்ந்த உமாநாத் மற்றும் பிரபு என்கிற பிரபாகரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் பா.ம.க. பிரமுகரான பிரபு என்ற ஆம்புலன்ஸ் பிரபு. இவருக்கு 45 வயதாகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் இவரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். ராமஜெயத்தை அதிகாலை நேரத்தில் மர்ம நபர்கள் கடத்திச் சென்ற கார், வெர்சா மாடல் வகையைச் சேர்ந்தது எனச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் ஏற்கனவே விசாரணையில் கண்டறிந்து இருந்தனர். இந்தநிலையில், அதே மாதிரியான காரை பா.ம.க. பிரமுகரான பிரபு பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரைச் சந்தேக வளையத்துக்குள் கொண்டு வந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், அவரிடம் விசாரித்தனர்.

இந்த விசாரணையில் பெரிதாக, எந்தத் தகவலும் கிடைக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. உமாநாத்திற்கு சொந்தமான வெர்சா காரை பிரபாகரன் பயன்படுத்தி வந்ததன் காரணமாகவே விசாரணை நடைபெற்றதாகக் கூறப்பட்டது. இதுதொடர்பாக சிறப்பு எஸ்பி ஜெயக்குமாரை தொடர்புகொண்டு பேசியபோது, “அதே மாதிரியான வெர்சா காரை பயன்படுத்தியதால் பிரபு மற்றும் உமாநாத்திடம் விசாரித்தோம். அவ்வளவுதான். எல்லாரும் சொல்லும்படி அவர்களுக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பு எதுவும் இருப்பதாகக் கூறுவதில் உண்மை இல்லை" என்றார்.

ராமஜெயத்தை கடத்தி படுகொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட காரை, பாமகவை சேர்ந்த பிரபு, உமாநாத் ஆகியோர் பயன்படுத்தியதாகக் கூறி, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக