வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

மேகாலயாவில் இந்தி திணிப்பு எதிர்ப்பு- ஆளுநர் உரையை மாநில மொழிகளான காசி காரோ மொழிகளில் நிகழ்த்த ஆர்ப்பாட்டம்

tamil.oneindia.com - Mathivanan Maran :ஷில்லாங்: மேகாலயா சட்டசபையில் ஆளுநர் பாகு சவுகான் இந்தியில் உரையாற்றியதற்கு அம்மாநில எதிர்க்கட்சியான வி.பி.பி. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆளுநர் பாகு சவுகான் இந்தியில் உரையாற்றினால் ஆங்கிலத்தில் கட்டாயம் மொழிபெயர்ப்புக்கான ஏற்பாடு செய்ய வேண்டும்;
அப்படி செய்யாவிட்டால் ஆளுநர் உரையை புறக்கணிப்போம் என விபிபி கட்சி அறிவித்துள்ளது.
மேகாலயாவில் என்பிபி தலைமையில் பாஜக, சுயேட்சைகள் மற்றும் மாநில கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
அம்மாநில முதல்வராக கன்ராட் சங்மா பதவி வகித்து வருகிறார்.
மேகாலயாவில் கடந்த ஆண்டு புதிய அரசு பதவியேற்ற போது முதல் கூட்டத் தொடரில் மாநில ஆளுநர் பாகு சவுஹான் (பகு சவுகான்) இந்தியில் உரையாற்றினார்.
இதற்கு அப்போதே கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்தியில் ஆளுநர் உரையாற்ற எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியான விபிபி தலைவர்கள், மேகாலயா மாநிலத்தின் காசி, காரோ மொழிகளை 8-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என நாங்கள் போராடி வருகிறோம். அஸ்ஸாமிய மொழித் திணிப்புக்கு எதிராகவும் போராடுகிறோம். அஸ்ஸாம் மொழித் திணிப்பில்தான் மேகாலயா தனி மாநிலமே உருவானது. இந்த நிலையில் எங்களுக்கு புரியாத மொழியில் ஆளுநர் உரையை வாசித்தால் எப்படி ஏற்க முடியும்? என கொந்தளித்திருந்தனர். அத்துடன் சட்டசபையில் இருந்து வெளிநடப்பும் செய்தனர்.

இந்த நிலையில் நடப்பு ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் வரும் 18-ந் தேதி நடைபெற உள்ளது. இப்போதே ஆளுநர் உரையை முன்வைத்து மேகாலயாவில் பிரச்சனை வெடித்துள்ளது. ஆளுநர் பாகு சவுகான் இந்தியில் உரையாற்ற கூடாது என மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது விபிபி கட்சி. அத்துடன் இந்தியில்தான் ஆளுநர் உரையாற்றுவார் எனில் ஆங்கில மொழி பெயர்ப்புக்கு மாநில அரசுதான் ஏற்பாடு செய்ய வேண்டும்; அப்படி ஆங்கில மொழி பெயர்ப்புக்கான ஏற்பாடுகளை செய்யாமல் விட்டால் வெளிநடப்பு செய்வோம் என மிரட்டல் விடுத்துள்ளது விபிபி கட்சி. அதே நேரத்தில் ஆளுநர் இந்தியில் உரையாற்றுவதில் தவறு இல்லை என்கிறது மேகலாயாவின் ஆளும் பாஜக கூட்டணி கட்சி. இதனால் இந்தி எதிர்ப்பு மேகங்கள் மேகாலயாவை சூழ்ந்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக