ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

இந்திய பொருளாதாரத்தை மந்தகதிக்கு தள்ளியுள்ள அரசின் மோசமான வங்கி & நிதி நிர்வாகம்.

 Vimalaadhithan Mani  :   இந்திய பொருளாதாரத்தை மந்தகதிக்கு தள்ளியுள்ள சங்கி அரசின் மோசமான வங்கி & நிதி நிர்வாகம்.
இந்திய வங்கித் துறையின் லாபம் 2013 முதல் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது,
இது 2018 இல் எதிர்மறையாக மாறியுள்ளது.
2018 இல் உலகில் கிரீஸ் மற்றும் சான் மரினோ ஆகிய நாடுகளின் வங்கித் துறைகள் மட்டுமே இந்திய வங்கி துறையை விட மோசமாகச் செயல்பட்டன.
இந்திய வங்கிகளின் வாராக்கடன் அளவு 2015 மற்றும் 2018 க்கு இடையில் கணிசமாக உயர்ந்துள்ளது.
2014–15 முதல் 2017–18 வரை ரூ. 16 டிரில்லியன் மதிப்புள்ள புதிய வாராக்கடன்கள் வணிக வங்கிகளால் உறுதி செய்யப்பட்டன.
 NDA-II ஆட்சியின் கீழ் செய்யப்பட்ட  வங்கிகளின் வாராக்கடன் தள்ளுபடிகள் UPA-II ஆட்சியை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிகம்.

இந்த வாராக்கடன் தள்ளுபடிகள் வங்கிகளின் மிகப்பெரும் நிகர நிதி இழப்புகளுக்கு வழிவகுத்து இருக்கிறது. குறிப்பாக இந்திய பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலைமை மிகவும் மோசமாகி இருக்கிறது . 2015-16 முதல் 2017-18 வரை 21 பொதுத்துறை வங்கிகள் மிக பெரும் நிகர நிதி இழப்பைச் சந்தித்துள்ளன.
நான்கு ஆண்டுகளில் இவ்வளவு கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும், 2018 மார்ச் இறுதியில் இந்திய வங்கிகளின் வாராக்கடன் மதிப்பு 10.4 டிரில்லியன் ரூபாயாக இருந்தது, இதில் பொதுத்துறை வங்கிகளின் வாரா கடன்கள் 9 டிரில்லியன் ரூபாயாகும். இந்த வாராக் கடன்களில் பெரும்பகுதியை வைத்திருப்பது பணக்கார பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களே தவிர சிறு தொழில்கள் அல்லது விவசாயிகள் அல்ல. சமீபத்திய நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையின்படி, வாராக்கடன்களின் அளவு எதிர்காலத்தில் குறையவே போவதில்லை.

வங்கிகளின் பெருகிவரும் நிதி இழப்புகளுக்கு வங்கி மோசடிகள் முக்கிய காரணமாகும். தற்போதைய NDA அரசாங்கத்தின் ஆட்சியில் வங்கி மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ஆண்டு அறிக்கை கண்டறிந்துள்ளது. நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி மோசடி செய்த பஞ்சாப் நேஷனல் வங்கி இந்தியாவில் இதுவரை நடந்த வங்கி மோசடிகளில் மிக பெரும் பெரும் இழப்பை சந்தித்துள்ள வங்கியாகும் . இந்த வங்கி 2017–18ல் ரூ.411 பில்லியன் அளவுக்கு நிதி இழப்பை வங்கி மோசடிகள் காரணமாக சந்தித்தது. ஒட்டுமொத்தமாக, தற்போதைய NDA அரசாங்கத்தின் ஆட்சியில், 1.33 டிரில்லியன் ரூபாய் அளவுக்கு வங்கி மோசடிகள் காரணமாக இழப்பு வங்கிகளுக்கு ஏற்பட்டு உள்ளது. இதில் சுமார் 1.2 டிரில்லியன் ரூபாய் பொதுத்துறை வங்கிகளுக்கு சொந்தமானது. இந்த அளவுக்கான நிதி இழப்பு அரசு அதிகாரிகள், நிதி அமைச்சகம் மற்றும் வங்கிகளின் மோசமான  நிர்வாக திறனையே காட்டுகிறது .

மேலும் வங்கிகளின் வாராக்கடன் தள்ளுபடிகள் தொடர்பான வெளிப்படைத்தன்மை இல்லவே இல்லை, இந்திய ரிசர்வ் வங்கியோ மற்ற வங்கிகளோ இந்த வாராக்கடன் தள்ளுபடிகள் பற்றிய விவரங்களை பொதுவெளியில் வெளியிடுவதில்லை.வாரா கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் மற்றும் மோசடி செய்பவர்களின் பெயர்கள் கூட வங்கிகளால் பொதுவெளியில் வெளியிடப்படுவதில்லை.இந்திய வங்கிகளின் வாராக் கடன்களின் சராசரி வசூல் விகிதம் சுமார் 45% மட்டுமே. இந்த விகிதத்தை வைத்து, தற்போதுள்ள 10 டிரில்லியன் ரூபாய் மதிப்புள்ள வாராக்கடன்களின் இருப்பைக் கருத்தில் கொண்டால், இந்திய வங்கிகள் அடுத்த சில ஆண்டுகளில் 5 டிரில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பை சந்திக்க நேரிடும். இதை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி Insolvency and Bankruptcy Code (IBC), Prompt Corrective Action (PCA) framework போன்ற வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒருபுறம், பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்காக புதிய மூலதனத்தை (Re Capitalization) கொடுத்ததன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் NDA அரசாங்கம் ஏற்கனவே ரூ.1.4 டிரில்லியன் செலவழித்துள்ளது. ஆனால் பொதுத்துறை வங்கிகளுக்கு அவர்களின் நிதி நிலைமையை சீர்படுத்த அரசு கொடுத்த இந்த புதிய மூலதனம் இந்த பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலைமை சீரடையாமல் மேலும் பல புதிய நிதிச் செலவுகளை வங்கிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்கம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகிய இரண்டும் வங்கிகளின் நிதி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பொறுப்பானவை. அனால் அவர்கள் அதை செய்யாமல் வங்கிகளின் நிதி இழப்பிற்கு ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் வேலையைத்தான் செய்கின்றனர். டிசம்பர் 2018 இல் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து உர்ஜித் படேல் ராஜினாமா செய்தது இந்த உள்குத்து சண்டையின் விளைவே ஆகும்.

ரிசர்வ் வங்கியின் அதிகப்படியான லாபம் மற்றும் கையிருப்பை பொதுத்துறை வங்கிகளின் மறுமூலதனமாக்குவதற்குப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி கட்டாயப்படுத்தி ரிசர்வ் வங்கியிடம் இருந்து லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை அடிக்கடி பெறும் இந்த NDA அரசாங்கம் ,வங்கிகளின் நிதி இழப்புகள் தொடர்ந்து பெருகி வரும் வாராகடன்களால் பெருகிக்கொண்டே இருக்கிறது என்பதை வசதியாக மறந்து விடுகின்றனர். இப்படி வாரக்கடன்களால் நஷ்டமடையும் வங்கிகளுக்கு அரசாங்கத்தால் கொடுக்கப்படும் மிகபெரும் மறு மூலதனம் உங்களை போன்ற என்னை போன்ற வரி செலுத்துபவர்களின் வரி பணம் ஆகும்.  

 NDA அரசின் ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய வங்கித் துறையின் மிக பெரும் வாராக்கடன்கள் அரசின் பொருளாதார நடவடிக்கைகளையும், இந்திய பொருளாதாரத்தையும் பாதித்து இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரும் மந்தநிலையை ஏற்படுத்தியுள்ளது என்பதை அனைவரும் அறிவோம். NDA ஆட்சியின் மோசமான நிதி நிர்வாகத்தால்  மந்த நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும் பொதுத்துறை வங்கிகளுக்கு புத்துயிர் அளிக்க முடியவில்லை. மேலும் மிகப்பெரும் அளவிலான இந்திய வங்கிகளின் வாராக்கடன் தள்ளுபடிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் மறுமூலதனமாக்கல் காரணமாக மிக பெரும் அளவுக்கு  நிதி ஆதாரங்கள் (நம்மை போன்ற வருமான வரி செலுத்துபவர்களின் பணம்) வீணடிக்கப்பட்டுள்ளது என்பதுதான் கசப்பான உண்மை.

அதே போல பணப்புழக்கத்தை அதிகரிக்க போகிறோம் என்று சொல்லி NDA அரசால் கொண்டுவரபட்ட PMMY, PMJDY திட்டங்களால் தொழில்துறைக்கோ, மக்களுக்கோ அம்மஞ்சலி பிரயோசனமும் இல்லை என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

முத்ரா (PMMY)திட்டத்தின் கீழ் சராசரியாக MSME தொழில் நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை 22,500 ரூபாய் மட்டுமே. இதை வைத்துக்கொண்டு அவர்கள் சொல்லும் பக்கோடா கடை கூட போட முடியாது. அதே போல ஜன்தன் (PMJDY) திட்டத்தின் கீழ் 340 மில்லியன் புதிய வங்கி கணக்குகளில் போடப்பட்ட சராசாரி பணம் வெறும் இரண்டாயிரத்து சொச்சம் மட்டுமே. மேலும் புதிதாக திறக்கப்பட்ட இந்த வங்கி கணக்குகள் மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பணத்தை பதுக்க பெருமளவில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன என்பதுதான் உண்மை. மேலும் புதிதாக திறக்கப்பட்ட இந்த 340 மில்லியன் வங்கி கணக்குகளில் 50சதவீத வங்கி கணக்குகள் பொதுமக்களால் பயன்படுத்த படவேயில்லை என்று புள்ளி விவரம் கூறுகிறது.

அதனால் மத்திய அரசு பெருமை பீற்றிக்கொள்ளும் முத்ரா, ஜன்தன் திட்டங்களால் அம்மஞ்சல்லிக்கு பிரயோசனம் இல்லை என்பதுதான் உண்மை.
Reference: "Quantum Leap in Wrong Direction",  Book written by Rohit Azad, Shouvik Chakraborty, Srinivasan Ramani, Dipa Sinha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக