செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 3 தொகுதிகள்? - விரைவில் தொகுதிப் பங்கீடு - வெளியான தகவல்!

tamil.samayam.com - எழிலரசன்.டி  :  மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் திமுக தீவிரம் காட்டி வருகிறது.
தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, முஸ்லீம் லீக், கொமதேக ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
 புதிதாக மக்கள் நீதி மய்யம் மட்டும் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணியில் இருந்தாலும் மமக, தவாக ஆகிய கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
கடந்த தேர்தல் போலவே கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரமும் ஒதுக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதே சமயம் காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம் கட்சிகள் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி இருந்தாலும் இன்னும் தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடியவில்லை.

திருமாவளவனின் விசிக இந்த முறை நான்கு தொகுதிகளை கேட்டு திமுகவிடம் லிஸ்ட் தந்தது. சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய தனி தொகுதிகளில் மூன்றையும், பெரம்பலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய பொது தொகுதிகளில் ஒன்றையும் கேட்டுள்ளது. திருச்சி வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் திரண்ட கூட்டத்தையும் சுட்டிக்காட்டி தங்கள் பலத்தையும் தெரிவித்தது. ஆனால், திமுக இதற்கு இசைவு தெரிவிக்காததால் இழுபறி நீடித்து வந்தது.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இரண்டு தனித் தொகுதிகள் மற்றும் ஒரு பொதுத் தொகுதியை விசிகவுக்கு ஒதுக்க திமுக தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இரண்டு தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிடலாம். மூன்றாவது தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என நிபந்தனையும் விதிக்கப்பட உள்ளது. நாளை மறுநாள் திமுக - விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்றும், அதில் எத்தனை தொகுதிகள் என்பது அனைவருக்கும் தெரியவரும் என்கிறார்கள் விசிக நிர்வாகிகள். அதேபோல வரும் தேர்தலில் திருமாவளவன் மீண்டும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடப்போவது உறுதி என்கிறார்கள் விசிகவினர்.

திமுகவுடன் 2009 முதல் அனைத்து அனைத்து மக்களவைத் தேர்தல்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் இருந்து வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்திலும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும் நின்று வெற்றிபெற்றனர்.

எழிலரசன்.டி கட்டுரையாளரை பற்றி
எழிலரசன். கடந்த 8 ஆண்டுகளாக டிஜிட்டல் ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சமூகம் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளேன். தற்போது சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer - ஆக பணியாற்றி வருகிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக