ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

தமிழ்நாட்டிற்கு 29 பைசா... ஆனால் உ.பி-க்கு வட்டியுடன் இரண்டு பைசா?” கனிமொழி MP!

 கலைஞர் செய்திகள் Prem Kumar :  ஒன்றிய அரசு கொண்டுவரும் ஒவ்வொரு மசோதாவிலும் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. மேலும் புதிய திட்டத்திற்கு புரியாத மொழியில் பெயர் வைக்கப்படுகிறது என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
கடந்த பத்தாண்டு காலத்தில் ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு இழைத்த அநீதிகளையும், ஒன்றிய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து தற்பொழுது நாடகமாடும் அடிமை அதிமுகவின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதி வாரியான கூட்டங்கள் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டது.


அதன்படி நெல்லை பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்றம் எதிரே அமைந்துள்ள பெல் மைதானத்தில் திமுக சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நாடாளுமன்ற தொகுதி பரப்பரை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொது செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது கனிமொழி எம்.பி பேசுகையில், “ஒன்றிய அரசு கொண்டுவரும் ஒவ்வொரு மசோதாவிலும் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு கொண்டுவரும் புதிய திட்டத்திற்கு புரியாத மொழியில் பெயர் வைக்கப்படுகிறது. எங்களுக்கு வாக்களிக்காத மக்கள் என்ன ஆனாலும் பரவாயில்லை என ஒன்றிய அரசு நினைக்கிறது. சட்டத்திற்கு இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் பெயர்கள் வைக்கப்படுகிறது.

திருக்குறளை ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று பிரதமர் பேசுகிறார். ஆனால், அது யாருக்கும் புரியவில்லை. பழமையான மொழி தமிழ் என ஒவ்வொரு இடத்திலும் பிரதமர் சொல்வதாக பாஜகவினர் சொல்கிறார்கள், அது எங்களுக்கும் தெரியும். பாஜக சொல்லி தெரிய வேண்டியது இல்லை. பழமையான மொழிக்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை. தென்னாட்டுக்கு எதிராக ஒவ்வொரு திட்டத்தையும் ஒன்றிய அரசு செய்து கொண்டிருக்கிறது. தென்னாட்டை கட்டுக்குள் கொண்டுவர பாஜக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
“தமிழ்நாட்டிற்கு 29 பைசா... ஆனால் உ.பி-க்கு வட்டியுடன் இரண்டு பைசா?”: மோடி அரசை விளாசி தள்ளிய கனிமொழி MP!

சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் வகையில் இருக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. ஜி.எஸ்.டி வரி மூலம் நாம் ஒரு ரூபாய் கொடுத்தால் நமக்கு 29 பைசா மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆனால் உத்தரபிரதேசத்திற்கு இரண்டு ரூபாய் இரண்டு பைசா என அதனை இரு மடங்காக்கி வட்டியுடன் கொடுக்கிறார்கள். கேட்டால் முன்னேற வேண்டிய மாநிலம் உத்தரபிரதேசம் என சொல்கிறார்கள். பல ஆண்டு காலமாக பாஜக ஆட்சியில் இருக்கும் போது ஏன் முன்னேறிய மாநிலமாக உத்திரபிரதேசம் மாறவில்லை என்பதற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

பல தடைகளை ஒன்றிய அரசு செய்தும் நிதி போதுமானதாக ஒதுக்காமல் இருந்தும் தமிழகத்தை பல துறைகளில் முன்னேறிய மாநிலமாக முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றி உள்ளார். சென்னை நெல்லை தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்தும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு அழிவை மக்கள் சந்தித்துள்ளனர். சென்னை பாதிப்புகளை பார்வையிட ராணுவ அமைச்சர் ராஜநாத் சிங் வந்தார். தூத்துக்குடி வெள்ள பாதிப்புகளை பார்வையிட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தார். ஒன்றிய நிதியமைச்சர் கோவிலை சுற்றி சகதி இருக்கிறது. அர்ச்சகருக்கு சம்பளம் இல்லை என்ற கவலை மட்டுமே ஏற்பட்டது.

ஜி.எஸ்.டியால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட வியாபாரிகள் வெள்ளத்திலும் பல மடங்கு பாதிக்கப்பட்டனர். வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் மீது அக்கறை இல்லாமல் நிதி அமைச்சருக்கு குருக்கள் மீது மட்டுமே அக்கறை ஏற்பட்டது. இதுவரை ஒன்றிய அரசு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படியே தமிழக அரசின் நிதி மூலம் மக்களுக்கு நிவாரண நிதிகளை வழங்கி உள்ளது.
“தமிழ்நாட்டிற்கு 29 பைசா... ஆனால் உ.பி-க்கு வட்டியுடன் இரண்டு பைசா?”: மோடி அரசை விளாசி தள்ளிய கனிமொழி MP!

பாஜக நேர்மை, நியாயம் என பேசிக் கொண்டிருந்ததை நீதிமன்றம் தேர்தல் பத்திர விவகாரத்தில் பிறப்பித்த உத்தரவு மூலம் உடைபட்டு விட்டது. 2018 ம் ஆண்டு தேர்தல் பத்திர நடைமுறையை பாஜக கொண்டு வந்தது. இதுவரை பாஜகவிற்கு தேர்தல் பத்திரமூலம் 6564 கோடி கிடைத்துள்ளது. மற்ற கட்சிகளின் மொத்த கணக்கை கூட்டினால் கூட இந்த தொகை வராது. ஒன்றிய அரசு கொடுத்த எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை. நிறைவேற்றப் போவதுமில்லை அறிவித்த பதினைந்து லட்சம் என்ன ஆனது என்றும் இதுவரை தெரியவில்லை.

நாட்டிற்கே உணவு அளிக்கும் விவசாயிகளை தீவிரவாதிகள் போல் நடத்தும் ஆட்சி தான் மத்தியில் உள்ளது. சமய நல்லிணக்கம் என எதையும் பற்றி கவலைப்படாமல் மத அரசியல் செய்துதான் ஆட்சி செய்ய வேண்டும் என்பதே பாஜகவின் திட்டம். கிராமத்தில் உள்ள சாதாரண மக்களுக்கு நல்ல திட்டத்தை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டம் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம். அதற்கு முறையாக நிதி ஒதுக்காமல் போதுமான வேலை போதுமான ஊதியம் உள்ளிட்டவைகள் பாஜக அரசால் கொடுக்கப்படாமல் உள்ளது.

சாதாரண மக்களுக்கு நல்ல திட்டம் என்றால் அது பாஜகவிற்கு பிடிக்காது. பெரும்பான்மையான மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் எதிரான ஆட்சியே பாஜகவின் ஆட்சி , இந்திய இறையாண்மை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு எதிரானது பாஜக ஆட்சி, இந்திய கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் நாட்டின் பல மாநிலங்கள் பாஜகவை தூக்கி எறிந்து விட்டது நாடும் விரைவில் பாஜகவை தூக்கி எறியும் இந்தியா வெற்றி பெறும் நாளை இந்தியா வெற்றி அடையும் நாளாகும் பாஜகவின் வெற்றி நாட்டின் தோல்வி என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக