வியாழன், 29 பிப்ரவரி, 2024

12 தொகுதி கேட்கும் காங்கிரஸ்..7-ஐத் தாண்டாத திமுக..என்ன நடக்கிறது

 மின்னம்பலம் -vivekanandhan :  திமுக-காங்கிரஸ் இடையே இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்த பின்னரும் தொகுதிப் பங்கீடு குறித்த உடன்பாடு எட்டப்படாமல் தொடர்ச்சியாக இழுபறி நீடித்து வருகிறது.
கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு திமுக கூட்டணியில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த முறை அந்த எண்ணிக்கையிலிருந்து குறையக் கூடாது என்பது காங்கிரசின் கணக்காக இருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகை எப்படியாவது அதிக தொகுதிகளைப் பெற வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.
கடந்த முறை 9 சீட்டு என்றால் இந்த முறை 12 சீட்டுகளை பெற வேண்டும், அப்போதுதான் நாம் புதிதாக ஏற்றிருக்கும் தலைமைப் பொறுப்புக்கு மரியாதையாக இருக்கும் என்பது செல்வப்பெருந்தகையின் நோக்கமாக இருக்கிறது.
ஆனால் திமுக தரப்போ 5 தொகுதிகளில் ஆரம்பித்து அதிகபட்சமாக 7 தொகுதிகள் என்று அதைத் தாண்டாமல் நிற்கிறது.



செல்வப்பெருந்தகை தான் போடும் 12 தொகுதிகள் என்ற கணக்கு குறித்து பேசும்போது, 2019 பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் 3 லட்சம், 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால் 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்கு வித்தியாசம் அவ்வளவு பெரிதாக இல்லை. இதற்குக் காரணம் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று மக்கள் வாக்களித்தார்கள். அதனால் தான் அவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்தது. இந்த முறையும் நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் பிரதமராக வேண்டும் என்று மக்கள் வாக்களிப்பார்கள். அதனால் எங்களுக்கு அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு பதிலளித்த திமுக தரப்பு, 2019 தேர்தலில் மோடி எதிர்ப்பை மையமாக வைத்து வீடு வீடாக திண்ணைப் பிரச்சாரம் செய்தது திமுகதான். மோடி எதிர்ப்பால் தான் இவ்வளவு வாக்குகளைப் பெற முடிந்தது. அதனால்தான் வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசங்களும் அதிகமாக இருந்தது என்று சொல்லியிருக்கிறது.

7 தொகுதிகளைத் தாண்டுவதற்கு திமுக தரப்பு தயாராக இல்லாததாலும், இறங்கி வருவதற்கு காங்கிரசும் தயாராக இல்லாததாலும் இழுபறி நீடித்துக் கொண்டே இருக்கிறது. தொகுதிப் பங்கீடு முடிவதற்கு சிக்கலுக்குரிய மாநிலங்கள் என்று பார்க்கப்பட்ட உத்திரப்பிரதேசம், டெல்லி போன்றவற்றிலேயே உடன்பாடு எட்டப்பட்ட பிறகும் தமிழ்நாட்டில் இன்னும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொகுதி உடன்பாடு எட்டப்படாமல் தொடர்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக