ஞாயிறு, 28 ஜனவரி, 2024

தமிழ்நாடு to ஸ்பெயின் : வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க 10 நாட்கள் சுற்றுப்பயணம் - முதலமைச்சர் அதிரடி!

தமிழ்நாடு to ஸ்பெயின் : வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க 10 நாட்கள் சுற்றுப்பயணம் -  முதலமைச்சர் அதிரடி!

Kalaignar Seithigal - Prem Kumar : தமிழ்நாடு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க 10 நாட்கள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன்படி இன்று 9:40 மணிக்கு மணிக்கு சென்னையில் இருந்து துபாய் செல்கிறார் முதலமைச்சர்.
வெளிநாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் ஆரம்பிக்கும் போது அந்த பகுதிகளில் பெரிய பொருளாதார வளர்ச்சி ஏற்படும். ஏராளமான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்காக தமிழகு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


அதன் ஒரு பகுதியாகவே கடந்த ஜனவரி 7, 8-ந் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அதில், ரூ.6 லட்சத்து 64 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 27 லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

வழக்கமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தான் நிறுவனங்கள் அதிகமாக முதலீடு செய்ய விரும்பும். ஆனால் இந்த முறை தென்மாவட்டங்களில் கணிசமான நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டின. குறிப்பாக ராமநாதபுரம், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு அதிகமான முதலீடுகள் வந்துள்ளன.

இந்த நிலையில், முதலீட்டாளர் மாநாடு முடிந்த பின்னரும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்கு செல்ல உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியிருந்தார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று இரவு வெளிநாடு புறப்படுகிறார். இதற்காக இரவு 9.40 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் செல்கிறார். பின்னர், அங்கிருந்து சுவீடனுக்கு செல்லும் முதலமைச்சர் அதன்பிறகு ஸ்பெயினுக்கு பயணம் செய்ய உள்ளார்.

ஸ்பெயின் சென்ற உடன், அங்குள்ள பல்வேறு நாட்டு தொழில் அதிபர்கள், வெளிநாட்டு அரசு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, முதல்வர் வருகிற பிப்ரவரி 7ம் தேதி சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக