சனி, 27 ஜனவரி, 2024

நிதிஷ்குமார் பிரதமர் ஆக வாய்ப்புள்ளது... Nitishkumar likely to become PM Had He Stayed In INDIA : அகிலேஷ் யாதவ்

 மின்னம்பலம் -christopher :  ”நிதிஷ்குமார் பிரதமர் ஆக வாய்ப்புள்ளது… ஆனால்” : அகிலேஷ் யாதவ்
நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருக்கும் பட்சத்தில் அவர் இந்தியாவின் பிரதமராக வாய்ப்பு உள்ளது என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.   வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவான இந்தியா கூட்டணியில் சமீபத்தில் நடந்துவரும் மாற்றங்கள் தேசிய அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் உடன் திமுக, திருணமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை அமைத்தன.

சமீபத்தில் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணியில் பேச்சுவார்த்தை எழுந்த நிலையில்,


மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, ’கூட்டணியில் இருக்கிறோம்.. ஆனால் மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவோம்’ என்று அறிவித்தார்.

அதற்கு அடுத்த நாளே அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ‘நாங்களும் பஞ்சாபில் தனித்து போட்டியிடும்’ என அறிவித்தது. இது கூட்டணிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அனைத்து கட்சிகளிடமும் பேசி இந்தியா கூட்டணியை உருவாக்கிய பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்து முதல்வராக பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பூகம்பமாக எழுந்துள்ளது.

இதற்கு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் இன்று (ஜனவரி 26) மறுப்பு தெரிவித்தாலும், பிகாரில் நடந்துவரும் அரசியல் நகர்வுகள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிற கட்சி தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்த நிலையில் உத்தரபிரதேசம் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், “நிதிஷ் குமார் முயற்சியில் தான் இந்தியா கூட்டணி உருவானது. இந்தியா கூட்டணியை தொடர்ந்து அவர் வலுப்படுத்துவார்.

தேசிய ஜனநாயக கூட்டணியுடன் நிதிஷ் குமார் செல்வார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவர் இந்தியா கூட்டணியுடன் இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். அப்படி இருந்தால், நிதிஷ் குமார் பிரதமராக வாய்ப்பு உள்ளது.

என்னை பொறுத்தவரை, நான் பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை. உத்தரபிரதேசத்தில் கணிசமான தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். அதுவே எனது முன்னுரிமை” என்று அகிலேஷ் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக