வியாழன், 25 ஜனவரி, 2024

News 7 செய்தியாளர் தாக்கப்பட்டார் - காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் - முதல்வர் உத்தரவு

கலைஞர் செய்திகள் - KL Reshma :  தமிழ்நாடு செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம் : காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் - முதல்வர் உத்தரவு !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நேச பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிந்து வரும் நிலையில், பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை வெளிகொண்டு வரும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் இவருக்கு அவர்களிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வந்துள்ளது.
இந்த சூழலில் நேற்று பகல் நேரத்தில் தன்னை பற்றி மர்ம கும்பல் விசாரித்து வந்துள்ளதை செய்தியாளர் நேச பிரபு அறிந்துள்ளார்.

எனவே காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு இதுகுறித்து தொலைபேசி மூலம் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து நேரில் வந்து புகார் தெரிவிக்குமாறு காவல் அதிகாரிகள் கூறியதாக கூறப்படுகிறது.

அவர் பேசி கொண்டிருந்த சமயத்தில் மர்ம கும்பல், செய்தியாளரை வெட்டுவதற்காக துரத்தியுள்ளது. இதனால் அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் இருக்கும் அறை ஒன்றினுள் சென்று கதவை பூட்டிக்கொண்டுள்ளார். ஆனால், அந்த கும்பலோ விடாமல் கதவை உடைத்து உள்ளே இருந்த அவரை வெளியே இழுத்து வந்து சரமாரியாக வெட்டியுள்ளது.

இதில் படுகாயமடைந்த நேச பிரபுவை மீட்ட பங்க் ஊழியர்கள், உடனடியாக அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நேசபிரபுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கங்கா மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இந்த நிகழ்வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்ட செய்தியாளரின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் அலட்சியமாக நடந்து கொண்ட காவல் அதிகாரியையும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பு பின்வருமாறு :

“திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த, தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர், நேச பிரபு அவர்கள் நேற்று அடையாளம் தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். ஊடக செய்தியாளர் மீதான இந்த தாக்குதல் நிகழ்ச்சி மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்பவம் நடப்பதற்கு முன்பாக செய்தியாளர் நேச பிரபு அவர்கள் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரியதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

மேலும் மருத்துவ சிகிச்சையில் உள்ள நேசப் பிரபுவுக்கு, பத்திரிகையாளர் நல வாரியத்திலிருந்து ரூ.3 லட்சம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்கள்.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக