வியாழன், 11 ஜனவரி, 2024

ஹோட்டலில் ஒன்றாக இருந்த ஜோடி.. இருவேறு மதம் என்பதால் கொடூரமாக தாக்கிய கும்பல்.. வீடியோ

tamil.oneindia.com - Mani Singh S :  பெங்களூர்: கர்நாடகாவில் இருவேறு சமூகத்தை சேர்ந்த திருமண உறவை தாண்டிய ஜோடி ஒட்டல் அறையில் ஒன்றாக இருந்ததை பார்த்த, ஒரு கும்பல் ஒன்று கொடூரமாக இருவரையும் தாக்கியதோடு அதை வீடியோவாகவும் பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் உள்ள ஹனகல் தாலுகாவில், தனியார் ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்த ஹோட்டலில் கடந்த 8 ஆம் தேதி கர்நாட அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வரும் 40 வயது நபரும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 26 வயது பெண்ணும் ஒன்றாக அறை எடுத்து தங்கியிருந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றாக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில், ஓட்டலுக்குள் இருவரும் சென்ற போது அங்கிருந்த ஒரு ஆட்டோ டிரைவர் பார்த்துள்ளார். உடனே தனக்கு தெரிந்த ஒரு கும்பலுக்கு பர்தா அணிந்த படி செல்லும் ஒரு பெண் வேறு ஒரு மதத்தை சேர்ந்தவருடன் செல்வதாக கூறியிருக்கிறார். உடனே அங்கு வந்த கும்பல் ஒன்று இருவரும் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு சென்றது.

கும்பல் தாக்குதல்: ஓட்டல் ரூமிற்குள் செல்லும் முன்பே வீடியோவை ஆன் செய்து விட்டனர். கதவை தட்டியதும் ஆட்டோ டிரைவர் யார் என்று திறந்து பார்த்து இருக்கிறார். அதற்குள் திமு திமுவென உள்ளே புகுந்த அந்த கும்பல் 40 வயதான அந்த டிரைவரை சரமாரியாக தாக்கியிருக்கிறது. இதைப்பார்த்து அந்த பெண் பர்தாவால் முகத்தை மூட முயற்சித்து இருக்கிறார்.

ஆனால், இதையும் தடுத்த கும்பல் வீடியோ எடுத்ததோடு சரமாரியாக தாக்கியது. இந்த தாக்குதல் முழுவதையும் வீடியோவாக எடுத்தனர். தொடர்ந்து இங்கு எப்படி வந்தீர்கள் என கேள்வி எழுப்பியதோடு இருவரையும் தங்கள் பைக்கில் ஏற்றிக் கொண்டு சென்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று அங்கும் இருவரையும் கொடூரமாக தாக்கியிருக்கிறார்கள்.

இணையத்தில் வீடியோ: மேலும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலிலும் இந்த கும்பல் ஈடுபட்டுள்ளது. பின்னர் அந்த பெண்ணிடம் 500 ரூபாய் கொடுத்துவிட்டு சொந்த ஊருக்கு செல்லுமாறு அனுப்பி வைத்து இருக்கிறது. இதன் பிறகு தனது கணவரின் ஊரான சிர்சிக்கு சென்றுள்ளார். ஹோட்டல் அறையில் இருந்த ஜோடி மீது கொடூர தாக்குதல் நடைபெற்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

இது போலீசாரின் கவனத்திற்கு சென்றதையடுத்து, ஜோடி மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரை கைது செய்துள்ளனர். அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எதுவும் அளிக்கவில்லை. இருந்தாலும் பெண்ணின் கணவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகாரளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

3 பேர் கைது: இந்த கும்பல் எந்த ஒரு அமைப்பையும் சேர்ந்தவர்கள் இல்லை என்றும் அவர்கள் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் இருக்கிறதா? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை கைது செய்துள்ளோம். மூன்றாவது நபர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படும். சம்பந்ந்தப்பட்ட ஏனைய நபர்களையும் கண்டறிந்துள்ளோம். விரைவில் அவர்களையும் பிடிப்போம். வீடியோ ஆதாரங்களும் உள்ளன" என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக