புதன், 24 ஜனவரி, 2024

கிரகாம் என்றொரு மானிடன்.. இந்தப் படுகொலை உலகின் கொடுஞ்செயல் பட்டியலில் நிச்சயம் இடம்பெறும்.

May be an image of 5 people, blonde hair and people smiling

Balakrishnan R :   ஆனந்த விகடனில் வெளியான எனது தமிழ் நெடுஞ்சாலை தொடரில் ஒரு கட்டுரை இது.
கிரகாம் என்றொரு மானிடன்
ஜனவரி 23, 1999. தீ வைத்துக் கொளுத்தப்பட்ட அந்த வேனுக்கு அருகே சென்றபோது என் இதயம் படபடத்தது. கிரகாம் ஸ்டூவர்ட்ஸ் ஸ்டேன்ஸுடன் அவரின் குழந்தைகள் பிலிப்பும் திமோத்தியும் கருகிக்கிடந்தார்கள். அந்தக் கறுப்பு தினத்தின் கனத்தை இறக்கிவைக்க முடியாமல் இன்றுவரை சுமக்கிறேன்.
அதிகாலை 4 மணிக்கு விடாமல் ஒலித்தது தொலைபேசி. இந்த நேரத்தில் யார் என்று பதறியடித்து எழுந்தேன். கிரகாமின் மனைவி கிளாடிஸ் பேசினார். "மனோகர்பூரில் கிரகாம், பிலிப், திமோத்திக்கு ஏதோ அபாயம் நேர்ந்திருக்கிறது. பயமாக இருக்கிறது. நீங்கள் விசாரிக்க முடியுமா?" என்று கேட்டார்.


பக்கத்து மாவட்டமான கெந்துஜாரிலில் உள்ள ஒரு பழங்குடிக் கிராமம் மனோகர்பூர். மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் பேசினேன். கரஞ்சியா சப் கலெக்டரையும் தாக்கூர்முண்டா தாசில்தாரையும் எழுப்பி ஸ்பாட்டுக்குப் போகச் சொன்னேன். கெந்துஜார் கலெக்டருக்கும் தகவல் அளித்தேன். டிரைவரையும் எனது மெய்க்காப்பாளரையும் வரவழைத்து, காலை 5 மணிக்குக் கிளம்பினேன்.
190 கி.மீ தூரம். இடையிடையே மலைப்பாதை. நான்கு மணி நேரம் ஆகும். கிரகாமும் இரண்டு குழ ந்தை க ளும் நள்ளிரவில் ஒரு கும்பலால் எரித்துக் கொல்லப்பட்டார்கள் என்று வயர்லெஸ்ஸில் உறுதிசெய்தனர் கள அதிகாரிகள். தாக்கூர்முண்டாவில் என்னைச் சந்தித்த கிரகாமின் பால்ய நண்பர் கில்பர்ட் வென்ஸும், சுபாங்கர் கோஷும் நடந்த பயங்கரத்தை என்னிடம் கண்ணீருடன் விளக்கினார்கள்.
கில்பர்ட்டை நிமிர்ந்துகூட என்னால் பார்க்க இயலவில்லை. நமது சகிப்புணர்வு பற்றிய மதிப்பீடுகள் எல்லாம் சல்லி சல்லியாய் அந்தச் சாலையில் நொறுங்கிக்கிடந்தன. கெந்துஜார் கலெக்டரும், எனது மாவட்ட எஸ்.பி-யும் வந்து சேர்ந்தார்கள். தற்காலிக சவப்பெட்டிகளை ஏற்பாடு செய்து சடலங்களை கட்டாக் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்குப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தோம்.
நான்கு நாள்களுக்கு முன்புதான் கிரகாம் தனது குடும்பத்துடன் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். ஊட்டியில் படித்துக் கொண்டிருந்த எஸ்தர், பிலிப்புக்கு விடுமுறை ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த கில்பர்ட் வென்ஸையும் அழைத்து வந்திருந்தார்.
ஆஸ்திரேலியாவின் க்வீன்ஸ்லாந்தி லுள்ள பால்ம்வுட்ஸில் 1941-ல் பிறந்த கிரகாம், தனது 15-வது வயதில் மயூர்பன்ஜ் மாவட்டத் தலைநகர் பாரிபதாவைச் சேர்ந்த சாந்தனு சத்பதி என்பவருடன் பேனா நண்பரானார். அவரது அழைப்பில் 1965-ல் மயூர்பன்ஜ் வந்தவர், அதன்பின் தாயகம் திரும்பவில்லை. மயூர்பன்ஜ் ராஜாவின் ஆதரவுடன் 1895-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மயூர்பன்ஜ் சுவிசேஷ சபையில் தன்னை இணைத்துக்கொண்டு தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் இறைப்பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1981-ல் இந்தியா வந்த கிளாடிஸை 1983-ல் திருமணம் செய்து கொண்டார். ஒடியா, சந்தாலி, ஹோ மொழிகளில் சரளமாகப் பேசுவார்.
ஒருநாள், ராஜஸ்தானிலிருந்து பூரி கோயிலுக்கு வந்த ஒரு சுற்றுலாப் பேருந்து பாரிபதா அருகே விபத்திற்குள்ளானது. தகவலறிந்து விரைந்தேன். படுகாயம் அடைந்த சிலரை கட்டாக் மருத்துவமனைக்கு அனுப்ப ஆம்புலன்ஸைத் தேடினால், டிரைவரைக் காணவில்லை. கிரகாம் நினைவுக்கு வந்தார். தொலைபேசியில் அழைத்தேன். பத்தே நிமிடங்களில் இரண்டு வேன்களுடன் வந்தார்.
மெயின் ரோட்டில் டயர் ரிப்பேர் செய்யும் கடையில் ஒரு பழைய டயரை கிரகாம் தனது வேனில் ஏற்றுவதை எதேச்சையாகப் பார்த்தேன். காரை நிறுத்தி எதுவும் பிரச்னையா என்று கேட்டேன். இல்லை, தொழுநோயாளிகளுக்குப் பொருத்தமான காலணி செய்வதற்காக இந்தப் பழைய டயர் என்றார். இந்தக் கடைக்காரர் பழைய டயருக்குப் பணம் வாங்குவதில்லை என்றார். கடைக்காரரையும் அழைத்துப் பாராட்டினேன்.
தொழுநோய் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டு பிடித்துவிட்டால் முற்றிலும் குணமாக்கிவிடலாம். இதுபற்றி கிரகாமுடன் கலந்தாலோசித்து எனது மாவட்டத்திலுள்ள எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் யாருக்கும் தொடு உணர்வு குறைந்த தோல் நிறமாற்றம் இருக்கிறதா என்று சர்வே நடத்தி, பட்டியல் தயாரித்தோம். இந்தக் கணக்கெடுப்பில் ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மட்டுமன்றி, பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களையும் பயன்படுத்தினோம்.
கட்டாக்கிலிருந்து சடலங்கள் வந்துவிட்டன. பாரிபதாவில் கல்லறைத் தோட்டத்தில் ஒரே குழியில் மூன்று பேரையும் அடக்கம் செய்ய ஏற்பாடு நடந்தது. மேற்பார்வை செய்வதற்காக நான் அங்கு சென்றேன். அந்த இடத்தைச் சில தொழுநோயாளிகள் அழுது கொண்டே சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.
'இந்தியா டுடே'யின் ரூபன் பானர்ஜி என்னிடம் கருத்து கேட்கிறார். என்ன சொல்வேன். "வாழ்க்கையின் மீதான எனது காமம் என்னிடமிருந்து காணாமல் போனதைப் போல உணர்கிறேன்” என்றேன்.
பிலிப்பும் திமோத்தியும் என்ன செய்தார்கள்? அந்தக் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமையை என் மகள்கள் இருவருக்கும் எப்படி விளக்குவோம்? எங்கள் வீட்டிற்கு வந்திருந்தபோது காலிபிளவர் பக்கோடாவை  விரும்பிச் சாப்பிட்டனர் பிலிப்பும் திமோத்தியும். என் மனைவி டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு கொல்லைப்புறத் தோட்டத்திற்குப் போவதைப் பார்த்து நானும் ஓடினேன். நான் டார்ச் லைட் அடிக்க அவர் காலிபிளவர் பறித்து வந்து மீண்டும் பக்கோடா செய்தார். அந்தக் குழந்தைகளின் நினைவு வந்ததால் எங்கள் வீட்டில் பல ஆண்டுகள் காலிபிளவர் சமையல் இல்லை
கொலைக்குற்றவாளி தாராசிங் ஒடிசாக்காரர் இல்லை. உத்தரப் பிரதேசத்திலிருந்து இந்தி ஆசிரியராக வந்தவர். தாக்கூர்முண்டா பகுதியில் நடந்த சில சம்பவங்கள் எனக்கு நெருடலாகவே இருந்தன. டிசம்பர் 21-ம் தேதிதான் புதிய எஸ்.பி பொறுப்பேற்றார். அவருடன் கலந்தாய்வு செய்யும்போது தாராசிங்கின் நடவடிக்கைகள் பற்றி விரிவாகப் பேசினோம். தாராசிங் கெந்துஜார் மாவட்டத்திலிருந்து செயல்பட்டதால் ஜனவரி 6-ம் தேதி, அதாவது படுகொலைக்கு இரண்டு வாரம் முன்புதான் அந்த நபரின் நடவடிக்கைகளைக் கண்காணித்துத் தகவல் அனுப்பும்படி அந்த மாவட்ட கலெக்டருக்குக் கடிதம் எழுதினேன். 18-ம் தேதி எனது வீட்டிற்கு வந்த கிரகாம் அந்தப் பகுதிக்குக் குழந்தைகளுடன் சென்று தங்கப்போவதைச் சொல்லவே இல்லை. இது என்னை உறுத்திக்கொண்டே இருந்தது.
கிரகாம் படுகொலைக்குப் பின்பு இதுபற்றி நான் கிளாடிஸிடம் கேட்டேன். "ஜனவரி 18-ம் தேதி கிரகாமின் பிறந்த நாள். அன்று மாலையை உங்களுடன் செலவிட விரும்பினார், அதனால் தான் அனைவரும் வந்தோம்" என்றார். "என் கணவரையும் இரண்டு குழந்தைகளையும் படுகொலை செய்தவர்களை நான் மன்னித்துவிட்டேன்" என்று கிளாடிஸ் அறிவித்தார். அவருக்கு ஆறுதல் சொல்லச் சென்ற நானும் என் மனைவியும் கண்கலங்கி நின்றோம். எங்களுக்கு அவர் ஆறுதல் சொன்னார்.
இறுதிச்சடங்கு முடிந்ததும் நான் செய்த முதல் வேலை, கிரகாம் ஸ்டேன்ஸ் பற்றி யாராவது எப்போதாவது புகார் செய்திருக்கிறார்களா என்று எஸ்.பி- யிடம் எழுத்து மூலமாகக் கேட்டது தான். அதற்கான விடை எனக்கும் தேவைப்பட்டது. கோப்புகளை எல்லாம் தோண்டித்துருவிப் பார்த்துவிட்டு "எந்தப் புகாரும் இல்லை” என்று பதில் அனுப்பினார்.
இந்தப் படுகொலை பற்றி விசாரிக்க நீதிபதி டி.பி.வாத்வா கமிஷனை ஒன்றிய அரசு நியமித்தது. டெல்லியில் நடந்த விசாரணையில் நான் சாட்சியம் அளித்தேன். கிரகாம் குடும்பத்துடன் வந்து சந்தித்ததைக் கூறத் தேவையில்லை என்றார்கள் சக அதிகாரிகள். ஆனால் நான் அதை அழுத்தம்திருத்தமாகக் கூறினேன். கிரகாம் கொலை செய்யப்படும்வரை மதச் சுதந்திரம், மதமாற்றம் குறித்து ஒடிசா மாநிலத்தில் ஒரு சட்டம் இருப்பதே எனக்குத் தெரியாது என்பதுதான் உண்மை. அதை ஏன் நீங்களாகவே சொல்லவேண்டும் என்றார்கள். ஆனால் நானே சொன்னேன். ஏனெனில், வறட்சி நிவாரணப் பணிகளில், வளர்ச்சிப்பணிகளில் மூழ்கிக்கிடக்கும் ஒரு மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அந்தச் சட்டம் ஒரு முன்னுரிமை இல்லை என்பதைப் பதிவிட விரும்பினேன்.
ஒரு மாதம் கழித்து டெல்லிக்கு வரச்சொல்லி கமிஷனிடமிருந்து அழைப்பு. மீண்டும் விசாரணையோ என்று நினைத்தேன். விசாரணை முடிந்துவிட்டது; கமிஷனின் அதிகாரிகளுடன் கடைசியாக ஒரு கூட்டம். உங்களையும் அழைக்கத் தோன்றியது என்றார் நீதிபதி வாத்வா. அவர் அறிக்கையில் எனது சாட்சியம் சுருக்கமாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், ஆசை காட்டியோ வற்புறுத்தியோ யாரும் யாரையும் மதம் மாற்றியதாகப் புகார் எதுவும் இல்லை என்று நான் குறிப்பிட்டது தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஓராண்டுத் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் கொலைக்குற்றவாளி தாராசிங் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். விசாரணை நீதிமன்றம் 2003-ல் மரண தண்டனை வழங்கியது. 2005-ல் உயர் நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை வழங்கியது. 2011-ல் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
மிஷன் வளாகத்தில் இயங்கிய தொழுநோயாளர் விடுதியை கிரகாம் ஸ்டேன்ஸ் நினைவு மருத்துவ மனையாக கிளாடிஸ் விரிவாக்கினார். 2004 ஜூலையில் நடந்த தொடக்க விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டேன். 2005-ம் ஆண்டு இந்திய அரசு கிளாடிஸுக்கு பத்மஸ்ரீ விருதளித்துச் சிறப்பித்தது. பிறகு நான் தேர்தல் ஆணையப் பணிக்கு டெல்லி சென்றுவிட்டேன். மகள் எஸ்தருடன் கிளாடிஸ் ஆஸ்திரேலியா சென்றுவிட்டார்.
2009-ல் எனக்குப் பெரும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 2010-ல் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த கிளாடிஸ் சென்னையில் என்னை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 2016-ம் ஆண்டு கிளாடிஸுக்கு 'சமூக நீதிக்கான அன்னை தெரசா நினைவு விருது' வழங்கப்பட்டது. 2018 ஏப்ரலில் ஆஸ்திரேலியா சென்றிருந்தேன். கிளாடிஸை நேரில் சந்திக்க விருப்பம், ஆனால் சந்திக்க இயலவில்லை. 2019 செப்டம்பர். சென்னை விமான நிலையம். என் எதிரே திடீரென்று கிளாடிஸ். இந்தியாவிற்கு வந்திருக்கிறார். முற்றிலும் எதிர்பாராத ஒரு சந்திப்பு. புகைப்படம் எடுத்துக் கொண்டோம். எஸ்தருக்குத் திருமணம் ஆகிவிட்டது. கணவர் பெயர் ரூபென். நான்கு குழந்தைகள். கிளாடிஸ் அங்கேயே ஒரு மருத்துவமனையில் பகுதி நேரமாகப் பணியாற்றுகிறார். அவ்வப்போது பேரக் குழந்தைகளின் படங்களை அனுப்பிவைப்பார்.
2019-ல் வெளியான 'The Least of These' என்ற ஆங்கிலத் திரைப்படம் கிரகாமின் வாழ்க்கை பற்றியது. அனீஸ் டேனியல் இயக்கிய இந்தப் படத்தில் ஸ்டீபன் பால்ட்வின், கிரகாம் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தப் படத்தை இணையத்தில் பார்த்தேன். 1999-ல் கிரகாமின் படுகொலை பற்றி இந்தியாவின் குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன் கூறியது நினைவிற்கு வந்தது. "இந்தப் படுகொலை உலகின் கொடுஞ்செயல் பட்டியலில் நிச்சயம் இடம்பெறும். தொழுநோயாளிகளுக்காகக் காலமெல்லாம் பாடுபட்ட ஒரு மனிதனை நன்றி பாராட்டி முன்மாதிரியாகக் கொண்டாடாமல் இப்படிக் கொன்றது, இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கும் மனிதாபி மானத்திற்கும் முற்றிலும் முரணானது."
அது முதல் குடிமகனின் குரல் மட்டுமல்ல, மனசாட்சியுள்ள ஒவ்வோர் இந்தியனின் குரலும்.
------
Box
ஹான்சன் நோய்
ஹான்சன் நோய் எனப்படும் தொழுநோய், மைக்கோபேக்டீரியம் லெப்ரே எனும் நுண்ணுயிரியால் ஏற்படும் நீடித்த தொற்று நோயாகும். குறிப்பாகத் தோலையும், நுனி நரம்புகளையும் பாதிக்கிறது.தசை இழப்பு ஏற்பட்டு இறுதியாக உறுப்புகளை உருக்குலைக்கும். 'தொழுநோய் பாவத்தினாலோ சாபத்தினாலோ ஏற்படுவதில்லை. அது ஒரு பாக்டீரியா நோய் ' என்பதைக் கண்டுபிடித்து உலகுக்குச் சொன்னவர் ஜி.எச்.ஏ.ஹான்சன். இவர் நார்வே நாட்டைச் சேர்ந்த மருத்துவர். இதனால் தொழுநோயை 'ஹான்சன் நோய்' என்று மருத்துவ உலகம் அழைக்கிறது.
ரிஃபாம்பிசின் (rifampicin), டேப்ஸோன் (dapsone), க்ளோஃபஜிமின் (clofazimine) ஆகிய மூன்று மருந்துகளைக் கொண்ட கூட்டு மருத்துவ முறை (Multi drug Therapy) 1981இல் அறிமுகமானது. இதனால் உலகில் தொழுநோய் வெகுவாகக் குறைந்துவிட்டது. 1980களில் 52 லட்சமாக இருந்த தொழுநோயாளிகளின் எண்ணிக்கை 2018இல் இரண்டு லட்சம் பேராகக் குறைந்தது நவீன மருத்துவத்தின் மாபெரும் வெற்றி. இந்த இரண்டு லட்சம் பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என்பது வருத்தத்திற்குரிய உண்மை.
"தொழுநோயை ஒழிக்கமுடியவில்லை என்பது எனது வாழ்நாளில் நான் செய்யமுடியாமல் போன ஒரு பணி" என்று வருந்தினார் மகாத்மா காந்தி. அவர் சுட்டுக்கொல்லப்பட்ட ஜனவரி 30 இந்தியாவில் தொழுநோய் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
-------
முகப்பு ஓவியம்:  டிராட்ஸ்கி மருது   May be an image of monumentMay be an image of 1 person, crowd and temple

 May be an image of 6 people and jeep

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக