வெள்ளி, 19 ஜனவரி, 2024

எம்எல்ஏ மகன் வீட்டில் பணிபுரிந்த இளம் பெண் புகாரில் வழக்குப் பதிவு

 Hindu Tamil  :  சென்னை: திருவான்மியூரில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்தபோது, அவ்வீட்டின் உரிமையாளரர்களான கணவன், மனைவி தன்னை அசிங்கமாக பேசியும், அடித்தும் காயப்படுத்தியதாகவும் கூறி
18 வயது பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காவல் துறை தரப்பில் வெளியிட்ட தகவல்: கடந்த ஜன.16 அன்று உளுந்தூர்பேட்டை, அரசு மருத்துவமனையில் இருந்து கொடுத்த தகவலின் பேரில், மேற்படி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு சுமார் 18 வயது பெண் வந்திருப்பதாகவும்,
அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும், சென்னை - திருவான்மியூரில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்ததாகவும் தெரிவித்தனர்.


அதன்பேரில், நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான மகளிர் காவல் குழுவினர், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று மேற்படி பெண்ணிடம் விசாரணை செய்தனர்.

விசாரணையில் அப்பெண் கூறும்போது, தான் திருவான்மியூரில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்து வந்ததாகவும், அவ்வீட்டின் உரிமையாளரர்களான கணவன், மனைவி தன்னை அசிங்கமாக பேசியும், அடித்தும் காயப்படுத்தியதாக தெரிவித்தார். மேலும், இது குறித்து, மேற்படி பெண் கொடுத்த புகார் மீது நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளது. எனினும், அந்த வீட்டின் உரிமையாளர்கள் பெயர்களை காவல் துறையினர் குறிப்பிடவில்லை.

எம்.எல்.ஏ விளக்கம்: இதனிடையே, பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி அளித்த பேட்டி ஒன்றில், “என் மகனுக்கு 7 வருடங்களுக்கு முன்னர் திருமணமாகிவிட்டது. அவர் அவரது குடும்பத்துடன் திருவான்மியூரில் வசித்து வருகிறார். நான் வேறு பகுதியில் வசிக்கிறேன். அவர்கள் எப்போதாவது இங்கு வருவார்கள். நானும் எப்போதாவது அங்கு செல்வேன். அங்கு நடந்தது என்னவென்ற முழு விவரம்கூட எனக்குத் தெரியாது. நடந்த சம்பவத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். நான் இதில் ஏதும் தலையிடவில்லை. இந்த விவகாரத்தில் எனக்கும் என் மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்.

பின்னணி என்ன? - உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 18 வயதுடைய 12-ம் வகுப்பு படித்த இளம்பெண் ஒருவரை, குடும்பச் சூழல் காரணமாக அவரது பெற்றோர் சென்னையை அடுத்த பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏவான இ.கருணாநிதியின், மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில், வீட்டு வேலை செய்ய 7 மாதங்களுக்கு முன்னர் அனுப்பி வைத்துள்ளனர். திருவான்மியூர், 7-வது அவென்யூவில் வசித்து வந்த ஆண்ட்ரோவும், அவரதுமனைவி மெர்லினாவும் அந்த இளம்பெண்ணை வேலை வாங்குகிறோம் என்ற பெயரில் கொடுமைப்படுத்தியதாகவும், அவரது கை, கன்னம், முதுகு உட்பட பல்வேறு இடங்களில் சூடு வைத்து சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

வேலை பிடிக்கவில்லை ஊருக்குப் போகிறேன் என கிளம்பிய அந்தப் பெண்ணை அனுப்ப மறுத்து கட்டாயப்படுத்தி தங்க வைத்துள்ளனர். மேலும்,பேசியபடி சம்பளத்தையும் கொடுக்கவில்லை. இதுகுறித்து வெளியே சொன்னால் அவரது குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பொங்கலையொட்டி ஊருக்குச் சென்ற அந்தப் பெண், பெற்றோரிடம் நிலைமையைக் கூறி கதறி அழுதுள்ளார். உடல் முழுவதும் தீக்காயங்கள், தழும்புகள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சிஅடைந்த பெற்றோர், மகளை உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து, மருத்துவமனை சார்பில் எம்எல்ஏவின் மகன் வீடு அமைந்துள்ள, நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, சம்பந்தப்பட்ட இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

வீடியோவில் இளம்பெண் கூறியவை: “முகவர் மூலம் திமுக எம்எல்ஏ இ.கருணாநிதி மகன் வீட்டுக்கு வேலைக்கு சென்றேன். வேலைக்கு சேர்ந்த 2 நாளிலேயே என்னால் முடியாது என்றேன். அப்போது என்னை அடித்து உதைத்து எனது போனை பிடுங்கி வைத்துக் கொண்டனர். வேலை செய்துதான் ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தினர். நடந்த விவரத்தை எனது தாயாரிடம் சொல்ல முடியாதபடி செய்தனர்.

முதலில் 6 மாதத்தில் அனுப்பி வைப்பதாகக் கூறினர். வரும்போதும், போகும்போதும் காரணமே இல்லாமல் கன்னத்தில் அடிப்பார்கள். என்னைத் தாக்கும்போது காயம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கமாட்டார்கள். மஞ்சள் வைத்து எனது காயத்தை நானே குணப்படுத்த வேண்டும். காலை 6 மணிக்கு ஆரம்பித்தால் நள்ளிரவைத் தாண்டியும் வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும். வீட்டுக்கு என்னை அனுப்பி வையுங்கள் என கூறி காலில் விழுந்து கெஞ்சியும் அவர்கள் விடவில்லை.

எனது தலைமுடியைக் கூட வெட்டினர். எனது முகமே மாறிவிட்டது. எம்எல்ஏ மருமகள் நான் ஒரு வார்த்தை சொன்னால் உன் வீடே இல்லாமல் ஆக்கி விடுவார்கள். உன் நடத்தை சரியில்லை என வதந்தி பரப்பி விடுவேன் என மிரட்டினார். பாத்திரம் சரியாக கழுவவில்லை என்றாலோ, துணியை சரியாக மடித்து வைக்கவில்லை என்றாலோ விதவிதமாகக் கொடுமைப்படுத்துவார்கள். மிளகாய் தூளை கரைத்து குடிக்க வைத்தனர். காரத்தால் துடிப்பேன். அப்போது, தண்ணீர்கூட குடிக்க அனுமதிக்க மாட்டார்கள். 7 மாதம் வேலை செய்தும் எந்த சம்பளமும் கொடுக்கவில்லை” எனக் கூறி அழுவதோடு வீடியோ காட்சி முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக