ஞாயிறு, 14 ஜனவரி, 2024

காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சோனியா நெருக்கடி? லோக்சபா தேர்தலில் போட்டியிட மறுத்து 'அடம்'?

tamil.oneindia.com -  Mathivanan Maran :   டெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே போட்டியிட்டாக வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நெருக்கடி தருகிறாராம்;
ஆனால் வயது முதுமையை காரணம் காட்டி தேர்தலில் போட்டியிட மறுக்கிறார் கார்கே என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.
கர்நாடகா காங்கிரஸின் முகங்களில் ஒருவராக திகழ்ந்தவர் மல்லிகார்ஜூன கார்கே.
 9 முறை கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக 2 முறை எம்பியாக தேர்தலில் போட்டியிட்டு வென்றவர். ஆனால் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் முதல் முறையாக தோல்வியைத் தழுவினார் கார்கே.
 குல்பர்கா தொகுதியில் பாஜகவின் உமேஷ் யாதவிடம் தோற்றுப் போனார் மல்லிகார்ஜூன கார்கே.
இது அவருக்கு மிகப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
 அதுவும் 95,452 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார் கார்கே. அத்துடன் அவரது அரசியல் வாழ்வு முடிந்தது என பலரும் கூறினர்.

Cong. Chief Mallikarjun Kharge not intrest to contest Lok Sabha election 2024?

ஆனால் 78 வயதில் மல்லிகார்ஜூன கார்கே கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021-ல் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் கார்கேவுக்கு வழங்கப்பட்டது. 2022-ல் காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் தேர்தலில் 7897 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 24 ஆண்டுகளுக்கு பின்னர் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் முதல் முறையாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவரானார் என்ற பெருமையைப் பெற்றார் கார்கே.

தற்போது லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் காங்கிரஸ் உள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய "இந்தியா" கூட்டணியில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. "இந்தியா" கூட்டணியின் பிரதமர் வேட்பாளராகவும் கார்கேவை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் முன்மொழிந்தனர். ஆனால் மல்லிகார்ஜூன கார்கே இதனை ஏற்க மறுத்தார்.

இந்நிலையில் மல்லிகார்ஜூன கார்கே தலித் என்பதால் அவரை முன்னிறுத்தி சில தொகுதிகளை கைப்பற்ற முடியுமா? என மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டீம் கணக்குப் போடுவதாக கூறப்படுகிறது. இதனால் லோக்சபா தேர்தலில் கார்கேவை களமிறக்க சோனியா தரப்பு விரும்புகிறதாம். குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியுடன் மறைமுக உடன்பாடு செய்து கொண்டு தலித் தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவை அம்மாநிலத்தில் வேட்பாளராக களமிறக்கலாம் என்கிற ஆலோசனையில் இருக்கிறதாம் சோனியா தரப்பு.

ஆனால் மல்லிகார்ஜூன கார்கேவோ, தமக்கு 81 வயது ஆகிறது. இனியும் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என தெரிவித்துவிட்டாராம். இருப்பினும் மல்லிகார்ஜூன கார்கேவை எப்படியும் தேர்தலில் களமிறக்க நெருக்கடி தருவோம் என்கிறதாம் சோனியா தரப்பு. இதனால் மல்லிகார்ஜூன கார்கே கடும் நெருக்கடியில் சிக்கி இருக்கிறார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக