செவ்வாய், 23 ஜனவரி, 2024

சுப்பிரமணியன் சுவாமி தொடர் தாக்குதல்! அயோத்தியில் தன்னை முன்னிறுத்தும் மோடி!

minnambalam.com ara  அயோத்தியில் ராமர் கோவிலை திறந்து வைத்து, பால ராமர் சிலையை நிறுவியதன் மூலம் இன்று இந்தியா மட்டுமல்ல, உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் பிரதமர் மோடி.
அயோத்தியில் இந்த நிகழ்ச்சியில் அவர் மட்டுமே பிரதானமாக முன்னிறுத்தப்பட்ட நிலையில், தனது நெருங்கிய சகாவான உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அமைச்சர்களை எல்லாம் நாட்டின் ஒவ்வொரு பகுதியில் உள்ள ராமர் கோயில்களுக்கு வழிபடுமாறு அனுப்பிவிட்டார்.
இந்த நிலையில் பாஜகவுக்குள் இருந்தே இவ்விவகாரத்தில் மோடியை நோக்கி கண்டன அம்புகளை ஏவி வருகிறார் பாஜகவைச் சேர்ந்தவரான சுப்பிரமணியன் சுவாமி.
பிரதமர் மோடி அயோத்தி செல்வதற்கு முன் தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி ஆகிய இடங்களுக்கு சென்று ராமர் சம்பந்தப்பட்ட இடங்களில் வழிபாடு செய்தார்.

அப்போது ராமர் பாலம் தொடங்குவதாக கருதப்படும் அரிச்சல் முனை பகுதியில் கடற்கரையோரம் நின்று பூஜை செய்தார் மோடி.
இதை சுட்டிக் காட்டிய சுப்பிரமணியன் சுவாமி, “ராமர் கட்டிய சேது பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க மோடி மறுப்பது ஏன்? அவர் இந்துக் கடவுள்களின் முன் பிரார்த்தனை செய்கிறார், ஆனால் ஒரு அசுரனைப் போல நடந்து கொள்கிறார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ராமர் பாலத்தின் வழியாக சேது சமுத்திர திட்டம் தொடங்கப்பட வேண்டும் என்று திமுக மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தபோது, ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் சுப்பிரமணியன் சுவாமி. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

இந்த நிலையில் 2009, 2014 நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ராமர் பாலம் தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் பத்து வருடமாக அதை மோடி நிறைவேற்றவில்லை. இதை நிறைவேற்றினால் அதன் முழு பெருமையும் சுப்பிரமணியன் சுவாமிக்கு சென்றுவிடும் என்பதால் மோடி அதை நிறைவேற்ற மறுக்கிறார் என்று சுவாமியின் நண்பர்கள் பதிவிட்டனர்.

அதை பகிர்ந்துகொண்ட சுப்பிரமணியன் சுவாமி, ராமர் சேது பாலத்தை நினைவுபடுத்தி மோடிக்கு கண்டனங்களை நேற்றும் இன்றும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

“அயோத்தி கோயிலில் ராமரின் முன்பாக… பிரதமர் என்ற அந்தஸ்துக்கு எந்த மதிப்பும் இல்லை. ஆனால் தன்னை முன்னிறுத்தி மோடி பிராண பிரதிஷ்டை பூஜையில் ஈடுபடுகிறார். மேலும் அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பகவான் ராமரை பின்பற்றவில்லை, குறிப்பாக அவரது மனைவி விவகாரத்தில் ராமர் போல நடந்து கொள்ளவில்லை. கடந்த பத்து வருடங்களாக அவர் ராமராஜ்ய பிரதமராகவும் நடந்து கொள்ளவில்லை.

    Modi is muscling into the Prana Prathishta Puja, when his PM status is a zero in the Puja, nor has he followed Bhagwan Ram in his personal life especially in his behaviour to his wife, nor he has acted as per Ram Rajya as PM during the last decade.

    — Subramanian Swamy (@Swamy39) January 22, 2024

தற்போது அயோத்தியில் ராமர் கோவில் நிஜமாகி, கனவு நனவாகியிருக்கிறது. பிரதமர் மோடி இப்போதாவது… ராமர் சேது பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அங்கீகரிப்பதற்காக கலாசார அமைச்சர்  பிரஹலாத் படேல் அனுப்பிய 6 ஆண்டு நிலுவையில் உள்ள கோப்பில் மோடி கையெழுத்திட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.

தொடர்ந்து மோடி அரசு மீதும் மோடி அரசின் பொருளாதார நடவடிக்கைகள் மீதும் கடுமையான விமர்சனங்களை பாஜகவுக்கு உள்ளிருந்தே தொடர்ந்து முன் வைத்து வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி.
சுவாமியை சமாதானப்படுத்த மோடி சில தொழிலதிபர்கள் மூலம் முயற்சித்ததாகவும், ஆனால் அதற்கு சுவாமி இணங்கவில்லை என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
–வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக