வியாழன், 11 ஜனவரி, 2024

லட்சத்தீவில் இஸ்ரேல் என்ன செய்யப் போகிறது? - இந்தியா - மாலத்தீவு பிரச்னையில் மூக்கை நுழைக்கும் இஸ்ரேல்

BBC News தமிழ் :  இந்தியா - மாலத்தீவு நடுவே மூக்கை நுழைக்கும் இஸ்ரேல் - லட்சத்தீவில் என்ன செய்யப் போகிறது?
இந்திய பிரதமர் நரேந்திர மோதி குறித்து மாலத்தீவு அமைச்சர் ஒருவர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது.
மாலத்தீவு அமைச்சர் மரியம் ஷியுனா, பிரதமர் மோதி லட்சத்தீவுக்குச் சென்று வந்த பிறகு பகிர்ந்த படங்கள் குறித்து ஆட்சேபகரமான கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அவர் பிரதமர் மோதியை இஸ்ரேலின் கைப்பாவை என்று அழைத்திருந்தார்.
மாலத்தீவுக்கு இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவுகள் இல்லை. மாலத்தீவு சுதந்திரம் அடைந்த பிறகு, 1965 முதல் 1974 வரை இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திர உறவு இருந்தது, ஆனால் 1974 இல் அது நிறுத்தப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையே இன்றும் முழுமையான ராஜதந்திர உறவு இல்லாவிட்டாலும், மாலத்தீவுக்கு வரும் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமானது.

இஸ்ரேல்-காஸா போர் தொடங்கிய பிறகு, பாலத்தீனர்களுக்கு ஆதரவாக மாலத்தீவில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சிலர், இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை மாலத்தீவுக்கு வர விடாமல் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இஸ்ரேலிய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் லட்சத்தீவின் அழகிய படங்களைப் பகிர்ந்தது. அப்போது தான், இந்தியா- மாலத்தீவு விவகாரத்தில் இஸ்ரேல் நுழைந்தது.

கடந்த திங்கள்கிழமை லட்சத்தீவின் சில படங்களைப் பகிர்ந்து கொண்ட இஸ்ரேலிய தூதரகம், அவர்களின் குழுக்களில் ஒன்று அங்கு சென்றதாகக் கூறியிருந்தது.

இஸ்ரேலிய தூதரகம், "கடந்த ஆண்டு கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் குறித்து, இந்திய அரசின் கோரிக்கையின் பேரில் நாங்கள் லட்சத்தீவுக்குச் சென்றோம்" என்று கூறியது.

மேலும், "இஸ்ரேல் இந்த திட்டத்தில் பணியாற்றுவதற்கு தயாராக உள்ளது. லட்சத்தீவின் அழகை இன்னும் பார்க்காதவர்களுக்காக இந்தப் படங்கள்" என்று அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிரதமர் மோதி குறித்து மாலத்தீவு அமைச்சர் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து, லட்சத்தீவின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவின.

பல பிரபலங்கள், மாலத்தீவுக்குச் செல்லாமல் உள்நாட்டிலேயே லட்சத்தீவின் அழகை கண்டு ரசிக்க வேண்டும் என்று கூற தொடங்கினர்.

இந்தியாவுடனான மோதல் காரணமாக, சுற்றுலாத்துறை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் மாலத்தீவு கவலை கொள்கிறது.

எனினும், லட்சத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். எளிதான பயணம் மேற்கொள்ள போக்குவரத்து ஏற்பாடுகள் இல்லாதது மற்றும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது ஆகியவையே இதற்கு முக்கியக் காரணங்கள் ஆகும்.

இதனை சீர் செய்யும் நோக்கில், இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுக்க உள்ளது. லட்சத்தீவில் புதிய விமான நிலையம் கட்டமைக்க தயாரிப்புகள் நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலிய தூதரகத்தின் ட்வீட்டைத் தொடர்ந்து, லட்சத்தீவில் உள் கட்டமைப்பு வசதிகள் குறித்த விவாதம் தொடங்கியுள்ளது.
இந்தியா Vs மாலத்தீவு : இஸ்ரேலின் பங்கு என்ன?

பட மூலாதாரம், @IsraelinIndia

லட்சத்தீவில் இஸ்ரேல் என்ன செய்யப் போகிறது?

இஸ்ரேலிய தூதரகம் லட்சத்தீவில் கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தைத் தொடங்க உள்ளதாக ட்வீட் செய்திருந்தது. கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் என்பது, உப்புநீரில் இருந்து உப்பு மற்றும் கனிமங்களை நீக்கி, அந்த நீரை குடிப்பதற்கும் வேறு தேவைகளுக்கும் பயன்படுத்த தயார்படுத்தும் ஒரு செயல்முறை.

உலகெங்கிலும் சுத்தமான நீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஐக்கிய நாடுகள் தரவுகளின்படி, உலகில் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் சுத்தமான குடிநீரை பெற முடியாத நிலையில் உள்ளனர்.

கடல்நீரை நேரடியாகப் பயன்படுத்த முடியாது, ஏனென்றால் அதில் உப்புச் செறிவு 35,000 பிபிஎம் (ஒரு மில்லியனில் இருக்கும் துகள்கள்) இருக்கும். கடல்நீரை குடிநீராக மாற்றும் செயல்முறையின் மூலம் இந்த அளவை 10 பிபிஎம் வரை குறைக்க முடியும். இந்த நீர் குடிப்பதற்கு பாதுகாப்பானது.

ஒரு மதிப்பீட்டின்படி, உலகளவில் கிடைக்கும் குடிநீரில், ஒரு சதவீதம் மட்டுமே கடல்நீரை குடிநீராக மாற்றும் செயல்முறையின் மூலம் கிடைக்கிறது.

லட்சத்தீவு சிறிய தீவுகளின் தொகுப்பு ஆகும். அங்கு சுத்தமான நீர் தட்டுப்பாடு ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. உப்புநீரை குடிப்பதற்கு ஏற்ற நீராக்குவதற்கான தொழில்நுட்பத்தில் இஸ்ரேல் நிபுணத்துவம் பெற்றது.

இஸ்ரேல் கடல்நீரை குடிநீராக மாற்றும் செயல்முறையை ஐந்து தசாப்தங்களாக பயன்படுத்தி வருகிறது. அதன் கடற்கரையில் பல்வேறு இடங்களில் ஐந்து கடல்நீரை குடிநீராக மாற்றும் ஆலைகள் உள்ளன. மேலும், இரண்டு கூடுதல் ஆலைகளை அமைப்பதற்கு தயாராகி வருகிறது.

2019 வரை, இஸ்ரேல் தனது நீர் தேவைகளில் 70 சதவீதத்தை இந்த கடல்நீரை குடிநீராக மாற்றும் செயல்முறையின் மூலம் பூர்த்தி செய்தது. அதன் குடிநீரில் 25 சதவீதம் இந்த செயல்முறையிலிருந்து வருகிறது.

கடல்நீரை குடிநீராக மாற்றுவதைத் தவிர, கழிவுநீர் சுத்திகரிப்பிலும் இஸ்ரேல் வெற்றி பெற்றுள்ளது. அதன் கழிவுநீர் மறுசுழற்சி விகிதம் 90 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்த நீரை விவசாயம் மற்றும் பிற தினசரி தேவைகளுக்குப் பயன்படுத்துகிறது இஸ்ரேல்.

ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையின் தரவுகளின்படி, உலகின் கழிவுநீர் 80 சதவீதம் சுத்திகரிக்கப்படாமல் அல்லது பயன்படுத்தப்படாமல் ஆற்றிலோ கடலிலோ திரும்பவிடப்படுகிறது.

ஒவ்வொரு சொட்டு நீரையும் பயன்படுத்தி நீர் மேலாண்மை மற்றும் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்திற்கு உதாரணமாக இஸ்ரேல் தன்னை முன்னிறுத்துகிறது. தனது மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் நீர் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று இஸ்ரேல் கூறுகிறது.
இந்தியா Vs மாலத்தீவு : இஸ்ரேலின் பங்கு என்ன?

கடல்நீரை குடிநீராக்குவதில் உள்ள சவால்கள் என்ன?
எந்தவொரு குறிப்பிட்ட தொழில்நுட்பமும் அதற்குரிய குறைபாடுகளைக் கொண்டிருக்கும். கடல்நீரை குடிநீராக மாற்றும் செயல்முறை அதற்கு விதிவிலக்கல்ல.

மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் அறிக்கையின்படி, உலகளவில் நாள்தோறும் 100 பில்லியன் லிட்டர் நீர் கடல்நீரை குடிநீராக மாற்றும் செயல்முறையின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆனால் அதே அளவு உப்பு மீண்டும் கடலில் திரும்ப விடப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல. இதை கடலில் விடாமல் தவிர்ப்பதற்கான செயல்முறைகளை மேற்கொள்ள பலரும் அறிவுறுத்துகின்றனர்.

டவுன் டு எர்த் சுற்றுச்சூழல் இதழின் படி, கடல்நீரை குடிநீராக மாற்றும் செயல்முறையின் மற்றொரு சவால், அதை அமல்படுத்த அதிக செலவாகும். கடல்நீரை குடிநீராக மாற்றும் ஆலையை கட்டுவதற்கு லட்சக்கணக்கான டாலர்கள் செலவாகலாம்.

நீர் தொழில்நுட்ப நிபுணர் கிறிஸ்டோபர் காசன் இந்த இதழிடம், இஸ்ரேல் வெற்றிபெற்றதற்குக் காரணம் அவர்களிடம் பணம் இருந்தது. குறைந்த கூலிக்கு தொழிலாளர்கள் இருந்தனர். இதனால் அவர்களின் செலவு குறைந்தது. இது உலகின் மற்ற பகுதிகளுக்குப் பொருத்தமாக இருக்காது என்று கூறுகிறார்.

அதே நேரத்தில், ஆய்வாளர்கள் மின்சார பயன்பாட்டையும் மற்றொரு பெரிய சவாலாகக் கருதுகின்றனர். கடல் நீரை குடிநீராக்கும் செயல்முறையில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது, இஸ்ரேல் தனது மொத்த மின்சாரத்தில் 10 சதவீதத்தை இந்த செயல்முறையில் செலவிடுகிறது.

இதற்கான தீர்வையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இதில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர். ஒரு ஆய்வின்படி, 2050-ம் ஆண்டிற்குள் சூரிய சக்தி மற்றும் சேமிப்பு முறை மூலம் கடல்நீரை குடிநீராக மாற்றும் செலவை குறைக்க முடியும் என்று நம்புகின்றனர்.

கடல்நீரை குடிநீராக மாற்றும் செயல்முறையின் மூலம் கிடைக்கும் குடிநீரின் தரத்தைப் பற்றிய கவலைகளும் எழுந்துள்ளன. ஐக்கிய நாடுகள் அறிக்கையின் படி, இந்த செயல்முறையிலிருந்து கிடைக்கும் நீரில் அன்றாட உணவில் மிகவும் முக்கியமான மெக்னீசியம் குறைபாடு உள்ளது.

இதன் குறைபாடு இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஐக்கிய நாடுகள் கூறுகிறது. மேலும், இஸ்ரேலில் இந்த நீரை பயன்படுத்தும் பகுதிகளில், இதய நோய்கள் பொதுவானவை.

கடல்நீரை குடிநீராக மாற்றும் செயல்முறை இந்தியாவில் நீண்ட காலமாக செயல்படுத்தப்பட்டு வருவது இல்லை. 2010 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இந்தியாவின் முதல் கடல்நீரை குடிநீராக மாற்றும் ஆலை நிறுவப்பட்டது.

இன்று, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் குஜராத் என இந்தியாவின் மூன்று மாநிலங்களில் நான்கு பெரிய ஆலைகள் உள்ளன. மேலும் கடல்நீரை குடிநீராக மாற்றும் ஆலை கட்டுவதாக மகாராஷ்ட்ரா அறிவித்துள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு இப்போது இந்தியாவின் பெருநகரங்களில், குறிப்பாக கடற்கரை ஓரத்திலுள்ள நகரங்களில் வழக்கமான விஷயமாக மாறிவிட்டது. மீஞ்சூரில் கட்டப்பட்ட முதல் கடல்நீரை குடிநீராக மாற்றும் ஆலை சென்னையின் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு சுத்தமான நீரை வழங்குகிறது.

மகாராஷ்ட்ரா அறிவித்த ஆலை மும்பைக்கு நீர் வழங்கும். நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கடல்நீரை குடிநீராக மாற்றும் ஆலை குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் உள்ளது. குஜராத் எட்டு புதிய கடல்நீரை குடிநீராக மாற்றும் ஆலைகளை கட்ட திட்டமிட்டுள்ளது.

எனினும், லட்சத்தீவில் இஸ்ரேல் எந்த வகையான கடல்நீரை குடிநீராக மாற்றும் ஆலையை கட்டும் அல்லது அங்கு இந்திய அரசுக்கு எப்படி உதவும் என்பது குறித்து இதுவரை எந்த திட்டமும் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக