திங்கள், 1 ஜனவரி, 2024

திமுக கூட்டணியில் பாமக சேர முயற்சி - விசிகவை இழக்க திமுக விரும்பவில்லை?

 Maalaimalar . சென்னை பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் கடைசியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இப்போதே கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்க ஆரம்பித்துள்ளது.
இந்த தேர்தலில் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி தலைமையில் ஒரு அணியும், காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சிகள் அடங்கிய 'இந்தியா கூட்டணி' மற்றொரு அணியாகவும் களம் இறங்குகிறது.
இந்த கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி வைக்க மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்த வரை தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாக களம் இறங்குகின்றன.

கடந்த தேர்தலில் இந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஐ.ஜே.கே. கட்சியின் பாரிவேந்தர் இந்த முறை தி.மு.க. கூட்டணியில் இல்லை என்பது முடிவாகிவிட்டது. அதற்கு பதில் கமல்ஹாசன் கட்சியான மக்கள் நீதிமய்யம் தி.மு.க. கூட்டணியில் இடம் பெறும் என தெரிகிறது.

இந்த நிலையில் எதிர் அணியில் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி கிடையாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்ட வட்டமாக அறி வித்துள்ளதால் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க. பா.ஜனதாவுடன் கூட்டணி சேருமா?அல்லது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பா.ம.க.வை பொறுத்தவரை எந்தக்கூட்டணி வலுவாக உள்ளதோ அந்த கூட்டணியில் சேர்ந்து வெற்றி பெறுவதற்கு தான் முன்னுரிமை அளிக்கும்.

அந்த வகையில் பார்க்கும்போது அ.தி.மு.க. வுடன் கூட்டணி வைக்குமா? அல்லது பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த இரு கட்சிகளும் தனித்தனியாக மோதும் நிலையில் பா.ஜனதா பக்கம் செல்வதா? அல்லது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதா? என்ற தடு மாற்றத்தில் பா.ம.க. நிலை உள்ளது.

இதனால் இரு கட்சிகளையும் தவிர்த்து விட்டு தி.மு.க. கூட்டணிக்கு செல்லலாமா? என்று பா.ம.க. காய் நகர்த்துவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதற்கு அச்சாரமாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கோட்டைக்கு சென்று சந்தித்து தமிழக நலன் சார்ந்த விசயங்கள் குறித்து பேசி விட்டு வந்துள்ளார். அது மட்டுமின்றி ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவும், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்தும் வலியுறுத்தி உள்ளார்.

அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி இல்லை என்றாகி விட்ட நிலையில், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி வலுவான கூட்டணியாக தெரிவதால் இங்கு சேர வாய்ப்பு இருக்குமா? என்ற எண்ணத்திலேயே டாக்டர் ராமதாஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இருக்கலாம் என்று தி.மு.க. நிர்வாகிகள் பலர் பேசி வருகின்றனர்.

இது பற்றி தி.மு.க. மேலிட மூத்த நிர்வாகியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலை பொறுத்த வரை தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள கட்சிகள் தான் இந்த தேர்தலிலும் தொடரும். இதில் பாரிவேந்தர் கட்சியான ஐ.ஜே.கே. கட்சி மட்டும் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது. அதற்கு பதில் கமல்ஹாசன் கட்சி இங்கு கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது.

பா.ம.க. வை பொறுத்தவரை தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்கிறார்கள் என்பது உண்மை தான்.

ஆனால் அவர்களுக்கு தொகுதி ஒதுக்கும் அளவுக்கு இங்கு 'சீட்' இல்லை அப்படியே பா.ம.க.வை கூட்டணியில் சேர்ப்பதாக இருந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதை ஏற்குமா? என்பது கேள்விதான்.

ஏனென்றால் பா.ம.க.வுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் முரண்பாடு உண்டு. பா.ம.க. வந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்பார்களா? என தெரியாது. நாங்களும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை இழக்க விரும்பவில்லை.

பா.ம.க. வை பொறுத்த வரை பா.ஜனதா தலைமையிலான கூட்டணியை தான் விரும்புவார்கள். ஆனால் அந்த கூட்டணியில் அ.தி.மு.க. இல்லை என்பதால் பா.ஜனதா கூட்டணி இங்கு வெற்றி பெறுமா? என்ற ஐயப்பாடு அவர்களுக்கு உண்டு.

அதனால் பா.ம.க. இந்த தேர்தலில் எந்த பக்கம் செல்லும் என்பது இனிமேல் தான் தெரியவரும்.

தி.மு.க கூட்டணியை பொறுத்த வரை இந்தந்த கட்சிகள் என்று முடிவு செய்து வைத்துள்ளோம். அதன்படி தான் கூட்டணி இருக்கும். ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதிகள் என்பது கூட ஓரளவு முடிவு செய்துவிட்டோம்.

எனவே தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை ஏற்கனவே உள்ள கூட்டணி கட்சிகளுக்கு போட்டியிடும் தொகுதிகள் வேண்டுமானால் மாறலாம் எண்ணிக்கை மாற வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக