செவ்வாய், 23 ஜனவரி, 2024

தமிழ்நாட்டில் 6,18,90,348 வாக்காளர்கள்! ஆண்கள் 3,03,96,330 0 பெண்கள் 3,14,85,724 - மூன்றாம் பாலினத்தவர் 8,294

tamil.oneindia.com - Mani Singh S : சென்னை: சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் தான் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்கள் உள்ளனர் என்றும், மிக குறைந்த வாக்காளர்களை கொண்ட சட்டமன்ற தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட 164-கீழ்வேளூர் உள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் எனத் தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதனால், தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், இன்று இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டார்.
இதில், செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட27 - சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மிக குறைந்த வாக்காளர்களை கொண்ட சட்டமன்ற தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட 164-கீழ்வேளூர் உள்ளது.

இது தொடர்பாக சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6,18,90,348 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 3,03,96,330 பேரும் பெண் வாக்காளர்கள் 3,14,85,724 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8,294 பேரும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதில், தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட 27-சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 6,60,419 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் 3,30,522, பெண்கள் 3,29,783 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 114 ஆகும்.

இதற்கு அடுத்தப்படியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட 117- கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 4,62,612 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,29,950 : பெண்கள் 2,32,538; மூன்றாம் பாலினத்தவர் 124) ஆகும்.

இதேபோல், தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட 164-கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1.72,140 ஆவர். (ஆண்கள் 84,702; பெண்கள் 87,435; மூன்றாம் பாலினத்தவர் 3).

இதற்கு அடுத்தப்படியாக இரண்டாமிடத்தில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 18-துறைமுகம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,72,624 ஆவர் (ஆண்கள் 89,569 ; பெண்கள் 82,996; மூன்றாம் பாலினத்தவர் 59).

வெளிநாடு வாழ் வாக்காளர்கள்: 22.01.2024 அன்று வெளியிடப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 3,480 வெளிநாடுவாழ் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 71 வெளிநாடுவாழ் வாக்காளர்களின் பெயர்கள் சிறப்பு சுருக்க முறைத்திருத்த காலத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இதுவரை, 4,32,805 வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிக்கப்பட்டுள்ளனர்.

தொலைபேசி எண்கள்: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி, மாவட்ட தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் மாவட்ட தொடர்பு மையங்களை "1950" என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான தகவல்களை அறியலாம். தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் 180042521950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணுடன் மாநிலத் தொடர்பு மையம் இயங்கி வருகின்றது.

விண்ணப்பிப்பது எப்படி?: வாக்காளர் பட்டியலினை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in என்ற வலைத்தளத்திலும் காணலாம். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம். வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டிலுள்ளது (22.01.2024) 01.01.2024 அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், கீழ்க்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கலாம்:-

i. வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐ சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.
ii. இணையம் மூலமாக (www.voters.eci.gov.in) என்ற வலைத்தளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
iii. கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து "Voter Helpline App" செயலியைத் தரவிறக்கம் செய்து அதன்மூலம் விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு சுருக்கமுறைத் திருத்த காலம் மற்றும் தொடர் திருத்த காலங்களில் பெறப்பட்ட முன்கூட்டிய விண்ணப்பங்கள் தொடர் திருத்த காலத்தின் போது அந்தந்த காலாண்டில் உரிய வாக்காளர் பதிவு அலுவலரால் பரிசீலிக்கப்படும். ஒரு வாக்காளர் தனது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு படிவம் 6பி-இல் விண்ணப்பிக்கலாம். 22.01.2024 அன்று வரை தமிழகத்தில் 4.29 கோடி (69.38%) ஆதார் எண்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்காக சேகரிக்கப்பட்டுள்ளன.

ரூ.1000 கட்டணம்: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, இரண்டு அச்சிடப்பட்ட வாக்காளர் பட்டியல் நகல்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்குமாறு அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் மென் நகலினை (புகைப்படமின்றி) வாக்காளர் பதிவு அலுவலரிடமிருந்து ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ரூ.100/-வீதம் கட்டணம் செலுத்தி பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
Chozhinganallur assembly constituency has the highest number of voters in Tamil Nadu, while 164-Lower Vellur under Nagapattinam district has the least number of voters, the Election Commission said.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக