செவ்வாய், 5 டிசம்பர், 2023

லஞ்ச வழக்கில் ED அமலாக்கத்துறை அதிகாரி ஜாமீன் மனு தள்ளுபடி

 மாலைமலர் : திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வருபவர் டாக்டர் சுரேஷ்பாபு.
இவர் மீது கடந்த 2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் டாக்டர் சுரேஷ் பாபு மற்றும் அவரது மனைவி ஆகியோர் விடுவிக்கப்பட்ட நிலையில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை மீண்டும் எடுத்து தாங்கள் விசாரிக்க இருப்பதாகவும், விசாரணை நடத்தாமல் இருக்க வேண்டுமானால் ரூ.51 லட்சம் தர வேண்டும் என மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரியாக இருந்த அங்கிட் திவாரி கூறியுள்ளார்.
அதன்படி 2-வது தவணையாக ரூ.20 லட்சத்தை பெற்றுக் கொண்டு திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு காரில் திரும்பிச் சென்றபோது விரட்டிச்சென்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் அங்கிட் திவாரியை கைது செய்தனர். 15 மணி நேர விசாரணைக்கு பின்பு திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை வருகிற 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி மோகனா உத்தரவிட்டார். இதனையடுத்து தனக்கு ஜாமீன் வழங்க கோரி திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அங்கிட் திவாரி தரப்பில் வக்கீல் விவேக் பாரதி மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று நீதிபதி மோகனா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அங்கிட் திவாரி சார்பில் வாதிட்ட விவேக் பாரதி அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது. எனவே பிரதிவாதிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கூறினார்.

ஆனால் இதனை எதிர்த்த அரசு தரப்பு வக்கீல் அணுராதா, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தி கையும் களவுமாக ரூ.20 லட்சம் லஞ்சப்பணத்துடன் அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு ஆரம்ப கட்ட நிலையில் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா அங்கிட் திவாரி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறுகையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அங்கிட் திவாரி கடந்த 2018ம் ஆண்டு உதவி அமலாக்கத்துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று கடந்த ஏப்ரல் மாதம் முதல் மதுரையில் உள்ள அமலாக்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விசாரணை அதிகாரியாக பணிபுரிந்தார்.

எம்.என். நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்த அவர் சில உயர் அதிகாரிகளின் உடந்தையுடன் பல்வேறு வழக்குகளில் பெரும் தொகையை பேரம் பேசி கிடைக்கும் பணத்தை 7 அதிகாரிகளுடன் பங்கிட்டு கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். அவருடன் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளின் பெயர் விபரங்களை பெறுவதற்காக அங்கிட் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம்.

இது தொடர்பாக அவருடன் தொடர்பில் உள்ள அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக