சனி, 2 டிசம்பர், 2023

மணல் குவாரி, ஹவாலா, பி.எம். ஆபீஸ்... -கைதான ED அதிகாரி பற்றி FIR இல் புதிய தகவல்கள்!

minnambalam.com :  -Manjula : லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தற்போது திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதனிடையே போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் அவர் குறித்த மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் சுரேஷ் பாபுவை மிரட்டி ரூபாய் 40 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் நேற்று (டிசம்பர் 1) கைது செய்யப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை FIR-ல் அங்கித் திவாரி குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.மருத்துவர் சுரேஷ் பாபு அவரது மனைவி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களது சேவையை களங்கப்படுத்தி விடுவேன் என அங்கித் திவாரி மிரட்டியுள்ளார்.

மேலும் லஞ்சம் தராவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சப் பணத்தில் பங்கு தர வேண்டும் எனவும் மிரட்டி இருக்கிறார்.

மருத்துவர் சுரேஷ்பாபு லஞ்ச பணத்தை தயார் செய்து விட்டு தொடர்பு கொண்டபோது, மணல் குவாரியில் இருப்பதாக அங்கித் திவாரி அவரிடம் கூறியுள்ளார். எனவே அங்கித் திவாரி ஏற்கனவே மணல் குவாரிகளிலும் சோதனை நடத்தியவர் என்பது தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே பல பேரை மிரட்டி பணம் பறித்துள்ளதால் மணல் குவாரி அதிபர்களிடமும் அவர் லஞ்ச பேரம் பேசினாரா? என விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

லஞ்ச பணத்தை ஹவாலா பணப்பரிமாற்றம் செய்பவர்கள் மூலம் கொடுத்தனுப்ப முடியுமா? என அங்கித் திவாரி மருத்துவரிடம் கேட்டுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இருந்து நடவடிக்கை எடுக்க சொல்லி புகார் வந்துள்ளதாகவும், நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் தங்களுக்கு பணம் அளிக்க வேண்டும் என்றும் மருத்துவர் சுரேஷ்பாபுவை, அங்கித் திவாரி மிரட்டியுள்ளதாகவும் FIR-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
–மஞ்சுளா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக