வெள்ளி, 8 டிசம்பர், 2023

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்தார் சபாநாயகர்

மாலை மலர் : புதுடெல்லி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றுக்கொண்டு அதானி குழுமத்திற்கு எதிராக கேள்விகள் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. மக்களவை உறுப்பினருக்கு லாகின் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை வெளியில் உள்ள நபருக்கு வழங்கி பாராளுமன்ற இணைய தளத்தைப் பயன்படுத்த அனுமதித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக மக்களவை நெறிமுறைக்குழு விசாரணை நடத்தி, சுமார் 500 பக்க அறிக்கையை தாக்கல் செய்தது.
இந்த அறிக்கையில் மொய்த்ராவின் செயல் மிகவும் ஆட்சேபணைக்குரிய, நெறிமுறையற்ற, கொடூரமான மற்றும் குற்றவியலானது எனவும், அவரை எம்.பி. பதவியில் இருந்த நீக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.
இதற்கிடையே, மக்களவையில் பா.ஜனதாவின் விஜய் சோங்கர் அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மதிய உணவிற்கு பிறகு பாராளுமன்றம் கூடியது. அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா, திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ராவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, அவரும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு வெளியே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக