திங்கள், 11 டிசம்பர், 2023

ஜம்மு காஷ்மீர் தீர்ப்பு பற்றி உமர் அப்துல்லா , மெஹபூபா முப்தி கடுமையான விமர்சனம்

மின்னம்பலம்   - Selvam ; umar abdullah says supreme court judgement disheartened    ஜம்மு காஷ்மீர் தீர்ப்பு: உமர் அப்துல்லா ரியாக்‌ஷன்!
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தமளிக்கிறது என தேசிய மாநாட்டு கட்சி துணை தலைவர் உமர் அப்துல்லா இன்று (டிசம்பர் 11) தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கிடையாது. 2024 செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில், “உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. அதனால் நாங்கள் மனம் தளர்ந்துவிட மாட்டோம். எங்களுடைய போராட்டம் தொடரும். பாஜக இந்த இடத்திற்கு வர பல தசாப்தங்கள் ஆனது. கடினமான நீண்ட பயணத்திற்கு தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.செல்வம்.

மின்னம்பலம் : ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பி விட்டதா? – மெகபூபா முப்தி காட்டம்!
ஜம்மு காஷ்மீரில் நாங்கள் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளோம் என்று மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி இன்று (டிசம்பர் 11) தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து பேசியுள்ள மெகபூபா முப்தி, “நாம் மனம் தளரக் கூடாது. ஜம்மு, காஷ்மீர் பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்துள்ளது. சட்டப்பிரிவு 370 என்பது ஒரு தற்காலிக விதி என்று கூறிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, நமது தோல்வியல்ல, மாறாக இந்தியாவின் தோல்வி. இந்த தீர்ப்பை கொண்டாடுகிறவர்களுக்கு நான் சிலவற்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இன்று ஜம்மு, காஷ்மீர் சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அனைத்து கடைக்காரர்களும் காலை 10 மணிக்கு முன் தங்கள் கடைகளை திறக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாங்கள் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளோம். இது காலங்காலமாக நடந்து வரும் அரசியல் போர். இதற்காக ஏராளமானோர் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். இதை விடமாட்டோம், ஒன்றுபட்டு போராட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக