வெள்ளி, 22 டிசம்பர், 2023

நிதிஷ்குமாரை சமாதான படுத்தும் முயற்சியில் ராகுல்காந்தி! தொலைபேசியில் பேசினார்

மாலை மலர் :  பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா இரண்டு முறை தொடர்ச்சியாக மத்தியில் ஆட்சியமைத்துள்ளது. அடுத்த வருடம் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் 3-வது முறையாக மோடி தலைமையில் ஆட்சியை பிடித்துவிட்டால் இந்தியாவில் எதிர்க்கட்சிகள் இல்லாத நிலை ஏற்பட்டு விடும் என முக்கிய எதிர்க்கட்சிகள் தலைவர்களின் கணிப்பாக உள்ளது.
காங்கிரஸ் தற்போது மிகப்பெரிய அளவில் பா.ஜனதாவை எதிர்க்கும் வல்லமையோடு இருப்பதாக தெரியவில்லை. இதனால் 2024 மக்களை தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் அச்சாரம்போட்டார்.
இதற்கு லாலு பிரசாத்தின் மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆதரவு அளித்தார்.
 உத்தர பிரதேசத்தின் அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் ஆதரவு தெரிவிக்க பீகாரில் முதல் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் 2-வது கூட்டம் கர்நாடகாவில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைமை ஏற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா கூட்டணி (INDIA Bloc) எனப் பெயர் வைக்கப்பட்டது. அப்போதுதான் இந்தியா கூட்டணியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.

இந்த கூட்டணிக்கு வித்திட்ட நிதிஷ் குமார், இந்தியா எனப் பெயர் வைக்க தனது எதிர்ப்பை தெரிவித்தார். பின்னர் மகாராஷ்டிரா மாநிலத்தில் 3-வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு இந்தியா கூட்டணியின் வேகம் அதிகமாக இருந்தது. கூட்டணி கட்சிகளுக்கு இடையில் தொகுதிகளை பிரிப்பது மட்டும்தான் மீதமுள்ளது போன்று தோன்றின.

அப்போதுதான் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியா கூட்டணி வேலைகளை அப்படியே விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சி ஐந்து மாநில தேர்தலில் கவனம் செலுத்தியது.

ஐந்து மாநிலங்களில் தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகியவற்றில் எப்படியும் ஆட்சியை பிடித்து விடலாம் என காங்கிரஸ் நினைத்தது. இதனால் அகிலேஷ் யாதவ், நிதிஷ்குமார் உள்ளிட்ட தலைவர்களிடம் ஆலோசிக்காமலும், கூட்டணி தேவையில்லை எனவும் தனியாக களம் இறங்கியது.

இந்த ஐந்து மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி இந்தியா கூட்டணியில் நாங்கள்தான முதன்மையான கட்சி என்பதை காண்பிக்க திட்டமிட்டிருந்தது. தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போது நிதிஷ் குமார், ஆகிலேஷ் யாதவ் ஆகியோர் வெளிப்படையாக காங்கிரஸ் கட்சி மீது குற்றம்சுமத்தினர்.

ஏற்கனவே வெவ்வேறு கருத்துகளை கொண்ட கட்சிகள் ஒன்றிணைந்துள்ள நிலையில், இந்த கூட்டணி நீடிக்காது என பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்தன.

இந்த நிலையில்தான் தற்போது 4-வது கூட்டணி டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் முன்மொழிந்துள்ளனர்.

இது நிதிஷ் குமாருக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. மேலும், அவரது கட்சியினர் தேர்தலுக்கு பிறகு நிதிஷ் குமார் பிரதமர் வேட்பாளர் போட்டியில் முன்னணி வகிப்பார் என நினைத்திருந்தனர்.

இந்த கூட்டத்தின்போது நிதிஷ் குமார் இந்தியில் பேசியதை திமுக தலைவருக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் மனோஜ் ஷா மொழிமாற்றம் செய்து விளக்கியுள்ளார். திமுக தலைவரிடம் இருந்து ஆதாயம் பெற இவ்வாறு செய்வதாக மனோஜ் ஷா மீது கோபம் அடைந்துள்ளார்.

மேலும், கூட்டத்தின் பாதியிலேயே நிதிஷ் குமார் வெளியேறியதாக கூறப்படுகிறது. நான்கு மாநில தேர்தல் முடிவு பா.ஜனதாவுக்கு ஆதாயத்தை கொடுத்துள்ள நிலையில், இந்தியா கூட்டணியில் மாறுப்பட்ட கருத்து நிலவி வருவதால் கூட்டணி முழுமையடைந்து தேர்தலை சந்திக்காது என வெளிப்படையாக எதிர்க்கட்சிகள் பேசத் தொடங்கியுள்ளனர்.

நிதிஷ் குமார் போன்ற தலைவர்கள் வெளியேறினால் அது இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனால் அதிருப்தியில் உள்ள நிதிஷ் குமார் சமாதானம் செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதன் முயற்சியாக ராகுல் காந்தி நிதிஷ் குமாரிடம் போன் மூலம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. ஆனால், ராகுல் காந்தி இணைந்து செயல்படுவோம் என்பது குறித்து பேசி அவரை சமாதானப்படுத்தியிருக்கலாம் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக