சனி, 16 டிசம்பர், 2023

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்..

tamil.oneindia.com - Mani Singh S : சென்னை: மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு, தற்போது நெடுஞ்சாலைத்துறையின் நிலத்திலேயே முழுமையாக அமைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், பழமையான இந்த நுழைவாயில் வளைவைப் பாதுகாத்து, பராமரிப்பது மட்டுமே அரசின் நோக்கம் என்று அமைச்சர் எவ. வேலு தெரிவித்துள்ளார்.
சேலம் ஏற்காடு சாலையில் 1935 ஆம் ஆண்டு டி. ஆர் சுந்தரம் என்பவரால் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோ தொடங்கப்பட்டது. இந்த ஸ்டூடியோவில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர், உள்ளிட்டோர் பணியாற்றியுள்ளனர். கடந்த 1982 ஆம் ஆண்டு வரை மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டது. அதன்பிறகு அந்த இடத்தை வர்மா கன்ஸ்ட்ரக்‌ஷன் என்ற நிறுவனம் அந்த இடத்தை வாங்கி வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறது.அந்த இடத்தில் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் என குறிப்பிட்டு நினைவு வளைவுடன் கூடிய நுழைவு வாயில் மட்டும் உள்ளது. அதன் உள்ளே சுமார் 1345 சதுர அடி கொண்ட சிறிய இடம் மட்டும் இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் மு.க ஸ்டாலின் சேலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயிலில் நின்று செல்பி எடுத்து பகிர்ந்தார். இது சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியது.

இத்தகைய சூழலில், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு அலங்கார நினைவு வளைவில் 'இந்த இடம் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது. அத்துமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கை பேனர் கட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. நுழைவுவாயிலின் உட்பகுதியில், நெடுஞ்சாலைத் துறையால் முட்டுக்கல் நடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியது.

    மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்களின் அறிவிப்பு.#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@evvelu @mp_saminathan pic.twitter.com/keoGKrxrND
    — TN DIPR (@TNDIPRNEWS) December 15, 2023

இதற்கிடையே, அந்த இடத்தை அரசு ஆக்கிரமித்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்க அரசு முயற்சிப்பதாகவும் அண்ணாமலை உள்ளிட்டோர் விமர்சித்து இருந்தனர். இந்த நிலையில், தான் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ.வேலு இவ்விவகாரம் தொடர்பாக தனது விளக்கத்தினை அளித்துள்ளார். எ.வவேலு கூறியிருப்பதாவது:-

மாடர்ன் தியேட்டர் சொத்தை ஆக்கிரமித்து கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டுமா? அராஜகம்.. அண்ணாமலை தாக்கு! மாடர்ன் தியேட்டர் சொத்தை ஆக்கிரமித்து கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டுமா? அராஜகம்.. அண்ணாமலை தாக்கு!

சேலத்தில் முன்பு செயல்பட்டு வந்த மாடர்ன் தியேட்டர்ஸின் நுழைவாயிலில் சிலை அமைப்பதற்காக, அந்த இடத்தை கேட்டு, அரசின் சார்பில் நிர்ப்பந்திக்கப்படுவதாக பத்திரிக்கையில் செய்திகள் வந்துள்ளன. இந்த நிறுவனம் செயல்பட்டு வந்த 8.9 ஏக்கர் நிலமானது. தற்போது, மனைகளாகவும், வணிகப் பகுதியாகவும் மாற்றப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த பகுதியின் நுழைவாயில் வளைவு சேலம் ஏற்காடு நெடுஞ்சாலையில் கன்னங்குறிச்சி கிராமத்தின் சர்வே எண்.8இல் உள்ளது.

இந்த சாலையை விரிவாக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதால், நெடுஞ்சாலைத்துறை நிலங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்வதற்காக, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களால், 2.12.2023 அன்று அளவீடு நடத்தப்பட்டுள்ளது. இந்த அளவீட்டின் போது, மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு முழுமையாக, நெடுஞ்சாலைத்துறை நிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டது.

அரசின் நிலவரை படத்தில் உள்ளவாறு, எல்லைகளை வரையறுப்பதற்காக, நெடுஞ்சாலையினுடைய எல்லையில் எந்த சொத்துக்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு, எல்லை கற்கள் நடப்பட்டுள்ளன. மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு, தற்போது நெடுஞ்சாலைத்துறையின் நிலத்திலேயே முழுமையாக அமைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில்,

பழமையான இந்த நுழைவாயில் வளைவைப் பாதுகாத்து, பராமரிப்பது மட்டுமே அரசின் நோக்கம் என்ற அடிப்படையில், இந்தப் பகுதியில், வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கோ, சிலைகளை நிறுவுவதற்கோ அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை. எனவே, இந்த நெடுஞ்சாலைத்துறை இடம் தவிர, வேறு இடத்தைக் கேட்டு அரசுத்தரப்பில் நிர்ப்பந்திப்பதாக வெளிவரக்கூடிய தகவல்கள் தெளிவுபடுத்தப்படுகிறது. அனைத்தும் தவறானவை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக