வியாழன், 14 டிசம்பர், 2023

ஈரான் பெண் உரிமை போராளி நர்கீஸ் முகமதிக்கு நோபல் பரிசு!

வீரகேசரி ; ஈரான் கடும் சிறையில் வாடும் பெண் வீராங்கனைக்கு  நோபல் பரிசு
மனித சமூகத்தில் பெண் வழி சமூகம் என்பதே ஆரம்ப காலத்தில் காணப்பட்டது. ஆனால், சமூக கட்டமைப்பில் ஆண்கள், பெண்களை விட வலிமையானவர்கள் என்ற எண்ணக்கரு உருவானது.
இதன் காரணமாக பெண் அடிமைத்துவம் என்பது பன்னெடுங்காலமாக உலகில் பல சமூகங்களிலும் நிலவி வந்தது. ஆனால், காலமாற்றத்தால் உலகில் ஆண்களை விட பெண்கள் பல துறைகளிலும் இன்று முன்னேறிவிட்டனர்.
பெண் அடிமைத்துவம் என்பதே இன்று இல்லை என்று கூறுமளவு சில சமூக கட்டமைப்புகள் உள்ளன. ஆனால், சில பாரம்பரிய மத நடைமுறைகளை பின்பற்றும் நாடுகளில் பெண்கள் ஏதோ ஒரு வகையில் அடிமைத்துவத்துடனேயே நடத்தப்படுகின்றனர்.

  ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற சில நாடுகளில் இவ்வாறு பெண்களுக்கு எதிரான கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுவதாகவும், பெண் அடிமைத்துவம் இருப்பதாகவும் கூறப்படுவதுண்டு. அதற்கிணங்க பல சம்பவங்களும் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றன.



ஆடைகளில் காணப்பட்ட கடுமையான விதிமுறைகள் காரணமாக ஈரானில் பல போராட்டங்கள் இடம்பெற்றதோடு சட்டங்களும் கடுமையாக்கப்பட்டன. குறிப்பாக, பெண்கள் ஆடை சரியாக அணியவில்லை என்றால் 10 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்பு பிரிவு பொலிஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர்.

இந்நிலையில், ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி என்ற 22 வயதுடைய பெண் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றபோது சிறப்புப் படை பொலிஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம் சாட்டினர். அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். பொலிஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டமையால் அவர் உயிரிழந்தார்.

மாஷாவின் மரணம் ஈரானில் பெரும் போராட்டம் முன்னெடுக்க காரணமானது. ஆனால், பொலிஸார் தாக்கி இளம் பெண் கொல்லப்பட்ட குற்றச்சாட்டை அரசு மறுத்தது. ஆயினும், இந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்தது.போராட்டங்களின்போது, ஈரானிய பெண்கள் தங்களது கேசத்தை வெட்டி போர்க்கொடி போல் கம்பங்களில் ஏற்றி, அரசுக்கு எதிரான கலகக் குரல்களை வலுவாக்கினர். தாங்கள் அணிந்திருந்த ஹிஜாப்களை காற்றில் சுழற்றி, அவற்றுக்கு தீயிட்டு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, உலக நாடுகளின் பார்வையை ஈரான் வசம் திருப்பியது. ஆனால் அரசு தொடர்ந்து சட்டங்களை கடுமையாக்கியது. ஈரானில் ஆடை அணிவதில் விதிகளை மீறும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகின்றன.

ஈரானில் போராட்டங்களை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு நர்கீஸ் சிறையில் அடைக்கப்பட்டார். ஈரானில் மேற்கத்திய நாடுகளுடன் தொடர்புள்ளதாக கைதானவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் தெஹ்ரானின் எவின் சிறையில் இவர் அடைக்கப்பட்டுள்ளார்.

பொறியியலாளரான நர்கீஸ், ஐரோப்பிய பாராளுமன்றத்தால் வழங்கப்படும் கருத்துரிமைக்கான ‘சகரோவ்’ பரிசை கடந்த 2018இல் பெற்றார்.

மேலும், இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு நர்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டது. நர்கீஸ் முகமதி அமைதிக்கான நோபல் பரிசு பெறும் 19ஆவது பெண்ணும் ஈரான் நாட்டைச் சேர்ந்த 2ஆவது பெண்ணும் ஆவார்.

ஈரானில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும் பெண்களின் உரிமை மற்றும் சுதந்திரத்துக்காகவும், ஜனநாயகத்தை வலியுறுத்தியும் போராடி வரும் மனித உரிமை ஆர்வலரான இவருக்கு இந்த நோபல் பரிசு கிடைத்துள்ளது.

நோர்வேயின் ஒஸ்லோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நர்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்ட நோபல் பரிசை பாரீஸில் வசித்து வரும் அவரது மகன் அலி ரஹ்மானி மற்றும் மகள் கியானா ரஹ்மானி பெற்றுக்கொண்டனர்.

முகமதுவை ஈரான் அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளமையால், அமைதிக்கான நோபல் பரிசை அவர் நேரடியாக பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக, நர்கீஸின் இரட்டை குழந்தைகளான 17 வயதான குறித்த இரட்டையர்கள் இந்த நோபல் பரிசை பெற்றுக்கொண்டனர்.

கியானி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“பெண்களின் சுதந்திரத்துக்காக போராடுவது மதிப்புக்குரிய விடயம்.வெற்றியை மட்டுமே நம்பி நாம் இந்த போராட்டங்களில் ஈடுபட வேண்டும். ஏனெனில் இது விலைமதிப்பற்றது. நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதற்காக எனது தாயாரின் சுதந்திரத்தை ஈரானிய அதிகாரிகள் மேலும் பறிக்ககூடும். எங்களது அம்மாவை நாங்கள் இறுதிவரை சந்திக்க முடியாமல் கூட போகலாம். ஆனால், அவர் என்றும் எங்கள் இதயத்தில் இருப்பார்” என்றார்.

நர்கீஸின் மகன் அலி கூறுகையில், “வெற்றி என்பது எளிதானது அல்ல. அது உறுதியானது. எனது தாயாரின் போராட்டம் உன்னதமானது” என்றார்.

ஈரான் அரசின் கெடுபிடிகளால் 2015ஆம் ஆண்டு முதல் பிரான்சில் புலம்பெயர்ந்து வாழும் முகமதியின் இரட்டை குழந்தைகள், 9 ஆண்டுகளாக தாயாரை சந்திக்கவில்லை என்றனர்.

பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் நடத்தப்படுவதாக குற்றம் சாட்டப்படும் ஈரான் நாட்டில் பெண்களுக்காக, உரிமைகளுக்காக போராடியமையால் சிறைவாசத்தை அனுபவிக்கும் இந்த பெண்ணுக்கு நோபல் கிடைத்துள்ளமை பெண்களுக்கே சிறப்பு.
குமார் சுகுணா Virakesari

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக