செவ்வாய், 26 டிசம்பர், 2023

3 குற்றவியல் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்.. இனி ஐபிசி, சிஆர்பிசி இல்ல!

tamil.oneindia.com - Noorul Ahamed Jahaber Ali :  டெல்லி: இந்தியாவில் அமலில் இருந்து வரும் சட்டங்களான ஐபிசி, சிஆர்பிசி, எவிடென்ஸ் சட்டம் போன்றவற்றை மாற்றும் 3 குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்து இருக்கிறார்.
இந்தியாவில் பல ஆண்டுகளாக குற்றவியல் சட்டங்கள், தண்டனை சட்டங்கள், சான்று சட்டங்ளான ஐபிசி, சிஆர்பிசி, எவிடன்ஸ் ஆக்ட் போன்றவை நடைமுறையில் இருந்து வந்தன. ஆனால், சில நிமிடங்களுக்கு முன்பிருந்து அவர் முழுமையாக மாற்றப்பட்டு உள்ளன. இனி அவற்றின் பெயர் இந்தியில் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷ்யா என்று அழைக்கப்படும். இந்தியில் மட்டுமல்ல நாடு முழுவதும் இதே பெயர்களைதான் இனி பயன்படுத்த வேண்டும்.காரணம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட இந்த 3 சட்ட மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் தற்போது ஒப்புதல் அளித்து இருக்கிறார். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலகட்டமான 1860 களில் இருந்து ஐபிசி, சிஆர்பிசி, எவிடன்ஸ் சட்டம் ஆகியவை அவ்வப்போது நாடாளுமன்றத்தில் பல்வேறு திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்த 3 சட்டங்களையும் மொத்தமாக மாற்ற இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த ஆகஸ்டு மாதம் அறிவித்தார். ஐபிசிக்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, சிஆர்பிசிக்கு பதில் பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, எவிடன்ஸ் சட்டத்துக்கு பதில் பாரதிய சாக்ஷ்யா என்று அனைத்துக்கும் இந்தியில் பெயர் மாற்றி சட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக அவர் தெரிவித்து இருந்தார்.

இதில் பல்வேறு குற்றங்களுக்கு புதிய தண்டனைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், நாசகார நடவடிக்கைகள், இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் ஆயுதமேந்திய கிளர்ச்சி, சாதி, மத அடிப்படையிலான கும்பல் படுகொலைகள், பிரிவினைவாதம்,போன்றவற்றுக்கான தண்டனைகள் புதிய சட்டங்களில் சேர்க்கப்பட்டு உள்ளன. இந்த மூன்று மாற்றங்களும் நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

இதனை அடுத்து நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் இந்த 3 குற்றவியல் சட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் மக்களவை மற்றும் மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டன. இதனை அடுத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலுக்காக அவை அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறார். இதன் மூலம் பழைய ஐபிசி, சிஆர்பிசி, எவுடென்ஸ் சட்டங்களுக்கு மாற்றாக மூன்று புதிய சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக