ஞாயிறு, 24 டிசம்பர், 2023

2024 தேர்தல் - காங்கிரஸ் வேட்பாளர்களை அதிரடியாக அறிவிக்க ராகுல் காந்தி திட்டம்

மாலைமலர் : பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை இந்த தடவை வீழ்த்தியே தீரவேண்டும் என்ற நிர்பந்தமான நிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. 138 ஆண்டுகள் பாரம்பரிய சிறப்பு கொண்ட காங்கிரஸ் கட்சி கடந்த 2 பாராளுமன்ற தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்தித்தது.
அதில் இருந்து கட்சியை மீட்டு புத்துணர்ச்சி கொடுக்க ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரை உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும் இன்னமும் 100 சதவீத பலன் கிடைக்கவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் செயல்பாடு ராகுலுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மிகவும் அசட்டையாக இருந்ததாக ராகுல் கருதுகிறார். இதையடுத்து காங்கிரசில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரவும் பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரசை தயார்படுத்தவும் ராகுல் அடுத்தடுத்த நடவடிக்கைகளை தொடங்கி உள்ளார்.

அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் கடந்த 23-ந் தேதி நடந்தபோது ராகுல்காந்தி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்றும் அவர் புதிய உத்தரவுகளை பிறப்பித்தார்.

இதையடுத்து பாராளுமன்ற தோ்தலுக்கான பணிகளை எந்தவித தாமதமும் இல்லாமல் உடனடியாக தொடங்க முடிவு எடுக்கப்பட்டது. பாராளுமன்ற தோ்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளா்களை விரைந்து இறுதி செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

அதற்காக வேட்பாளா் பரிசீலனைக் குழு இம்மாதமே அமைக்கப்பட உள்ளது. தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ப.சிதம்பரம் தலைமையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதுபோல மற்ற முக்கிய குழுக்கள் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே ராகுல் காந்தியை இரண்டாம் கட்ட இந்திய ஒற்றுமை நடை பயணத்தை மேற் கொள்ளுமாறு செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கேட்டுக்கொண்டனா். அதை ராகுல் பரிசீலிப்பதாக கூறி உள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் சில மாதமே உள்ள நிலையில் பாத யாத்திரை சென்றால் பலன் கிடைக்குமா? என்ற சந்தேகம் ராகுல் மனதில் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. என்றாலும் வட மாநிலங்களில் முக்கிய நகரங்களில் ராகுல் பாத யாத்திரை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

பாராளுமன்ற தேரதலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணிக்கு எதிராக 'இந்தியா' கூட்டணியை வலுவான அணியாக உருவாக்க தேவையான அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொள்வது என்று காங்கிரஸ் தலைவர்கள் தீர்மானித்து உள்ளனர். ஆனால் செல்வாக்கு உள்ள மாநில கட்சி தலைவர்களிடம் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்துவது கஷ்டம் என்பதால் அந்த சிக்கலை தீர்ப்பது பற்றியும் ராகுல் ஆலோசித்து வருகிறார்.

பா.ஜனதா கட்சி தேர்தலை சந்திக்க முழுவீச்சில் தயாராகி விட்டதால் அதற்கு முன்னதாக அனைத்து பணிகளையும் தொடங்க வேண்டும் என்பதில் ராகுல் உறுதியாக உள்ளார். அதன்படி முதல் கட்டமாக 250 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிக்க அவர் முடிவு செய்துள்ளார்.

வேட்பாளர் தேர்வு ரகசியமான முறையில் நடந்து வருகிறது. அடுத்த மாதம் (ஜனவரி) காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை வெளியிட ராகுல் தீர்மானித்து இருக்கிறார்.

எனவே வரும் நாட்களில் காங்கிரஸ் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டப்படும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக