வெள்ளி, 10 நவம்பர், 2023

மஹூவா மொய்த்ராவை MP தகுதி நீக்கம் செய்ய நெறிமுறைகள் குழு பரிந்துர- திடீர் வாக்கெடுப்பு!

minnambalam.com - selvam : திருணமூல் காங்கிரஸ் எம்.பி.யான மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அகற்றுவதற்கு இன்று (நவம்பர் 9) கூடிய நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அதானி குழுமத்தின் கார்ப்பரேட் முறைகேடுகள், அதானிக்கும்- பிரதமர் மோடிக்குமான உறவுகள் பற்றி நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு அடுத்தபடியாக தொடர்ந்து பேசி வந்தவர் திருணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவாய் மொய்த்ரா.
அவரை சிக்க வைக்க சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த பாஜகவுக்கு எம்பிக்களின் மக்களவை லாக் இன் விவகாரம் உதவியது. அதாவது எம்.பி. மஹுவா மொய்த்ராவின் நாடாளுமன்ற இணையத் தளத்தின் லாக் இன் அணுகல், தொழிலதிபர் தர்ஷன் ஹிரா நந்தியினிடம் சென்றது எப்படி என்று பாஜக தரப்பில் சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதை நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவுக்கு அனுப்பினார் சபாநாயகர். கடந்த நவம்பர் 2 ஆம் தேதி கூடிய குழுக் கூட்டத்தில் தன்னிடம் இழிவான கேள்விகள் கேட்கப்பட்டதாக வெளிநடப்பு செய்தார் மஹூவா மொய்த்ரா.

அதன் பின் இன்று (நவம்பர் 9) மாலை நாடாளுமன்ற வளாகத்தில் நெறிமுறைகள் குழு கூட்டம் நடந்தது. ‘மஹூவா மொய்த்ரா கேள்வி கேட்க பணம் வாங்கியதும், தனது எம்.பி. லாக் இன் அணுகலை வேறு ஒருவருக்கு கொடுத்ததும் உறுதியாகியிருகிறது. எனவே அவரை மக்களவையில் இருந்து வெளியேற்ற இக்குழு முடிவு செய்கிறது. சபாநாயகருக்கு பரிந்துரை செய்கிறது’ என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரைக்கு கூட்டத்தில் ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், நான்கு பேர் எதிராகவும் வாக்களித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. குழுவின் தலைவரான பாஜக எம்பி வினோத் சோங்கர் உள்ளிட்ட பத்து உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். குழுவில் இடம்பெற்ற பாஜக உறுப்பினர்கள் 7 பேரில் 3 பேர் கலந்துகொள்ளவில்லை.

நவம்பர் 2-ஆம் தேதி நெறிமுறைகள் கூட்டம் நடந்தபோது மஹுவாவை ஆதரித்து வெளிநடப்பு செய்த 5 எம்.பி.க்களில் ஒருவரான தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி. உத்தம் ரெட்டி, தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதால் கலந்துகொள்ளவில்லை.

‘நான் சட்டமன்றத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதால் நெறிமுறைகள் குழுவின் கூட்டத்தை சற்று தள்ளி வைக்குமாறு’ உத்தம் ரெட்டி கடிதம் மூலம் கேட்டும், தேதியை மாற்ற மறுத்துவிட்டார் குழுத் தலைவரான வினோத் சோங்கர். அதனால் உத்தம் ரெட்டி கலந்துகொள்ளவில்லை. இவர் கலந்துகொண்டிருந்தால் மஹுவாவுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பார். முடிவே மாறியிருக்கும்.
குழுவின் இன்னொரு உறுப்பினரான ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

முன்னாள் பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் மனைவியும், பாட்டியாலா எம்பியுமான பிரணித் கவுர் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் நெறிமுறைகள் குழு உறுப்பினராக இருக்கிறார். அவர் மஹூவா மொய்த்ராவின் தகுதி நீக்கத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.

எனவே 6-4 என்ற அடிப்படையில் மஹூவா மொய்த்ராவை மக்களவையில் இருந்து அகற்றும் தீர்மானத்தை நெறிமுறைகள் குழு நிறைவேற்றியது. இது மக்களவை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவுக்கு சட்ட ரீதியான குற்றவியல் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை என்றாலும்… சபாநாயகருக்கு பரிந்துரைக்கும் அதிகாரம் உள்ளது.

எனவே அதானியை நாடாளுமன்றத்தில் விமர்சித்தற்காக ராகுல் காந்தியை அடுத்து வீழ்த்தப்படும் அடுத்த விக்கெட்டாக மஹூவா மொய்த்ரா கருதப்படுகிறார்.

இதுகுறித்து கொல்கத்தாவில் இன்று பேசிய திருணமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மேற்கு வங்காள மாநில அமைச்சருமான டாக்டர் சஷி பாஞ்சா, “இன்று நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு கூட்டம் கூடியது. அந்த கூட்டத்தில் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்த நிலையில், அதை திடீரென வாக்கெடுப்புக்கு விட்டது அநியாயம், ஆனால் அந்த அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே பொது வெளியில் வெளியிடப்படுவதில் இருந்தே நெறிமுறைகள் குழுவின் போக்கு புரிகிறது. இதை சட்டப்படி எதிர்கொள்வோம்” என்று கூறியுள்ளார்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக