ஞாயிறு, 26 நவம்பர், 2023

முதல்வர் ஸ்டாலின் : பொதுமக்களிடம் நல்ல பெயர் எடுப்பவர்களுக்கே தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும்

மாலைமலர் : சென்னை  தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் 17-ந்தேதி (டிசம்பர்) நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டை மிகப் பிரமாண்டமாக நடத்த தி.மு.க. முடிவு செய்துள்ளது.
இதற்காக சேலத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில் 5 லட்சம் பேரை திரட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து இருந்து எவ்வளவு பேர் வருவார்கள், எத்தனை கார், பஸ், வேன்கள் வரும் என்ற விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
மாநாட்டுக்கு வருபவர்கள் ஒருநாள் முன்னதாகவே வந்து தங்கி கொள்ள திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்தி காண்பிக்க தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தி.மு.க. மாவட்டக் கழக செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.சென்னை தியாகராயர் நகரில் உள்ள அக்கார்டு ஓட்டலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் கனிமொழி எம்.பி. உள்ளிட்ட துணைப் பொதுச் செயலாளர்கள் 72 மாவட்டக் கழக செயலாளர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சூழலில் தி.மு.க. இளைஞரணி மாநாடு டிசம்பர் 17-ந்தேதி நடைபெற உள்ளதால் இந்த மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி முடிக்க ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் இளைஞரணி நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவது அவசியம் என்று கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

ஞரணியினர், மாணவரணியினர் மற்றும் கழகத்தின் பிற அணியினர் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் வாகன வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தேர்தலுக்காக அமைக்கப்பட்ட வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் (பி.எல்.ஏ.2) பற்றிய விவரங்களை மாவட்டச் செயலாளர்கள், அவ்வப் போது சரிபார்த்து அவர்களின் பணி விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். நாம் கை காட்டு பவரே பிரதமர் ஆக வேண்டும் என்றால் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும்.

இந்த தேர்தலில் போட்டியிட பொதுமக்களிடம் நல்ல பெயர் எடுப்பவருக்கே வாய்ப்பு வழங்கப்படும். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இவர்தான் வேட்பாளர் என்று இதுவரை முடிவு செய்யவில்லை.

தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செய்துள்ளோம். மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டமும் சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இனி வரும் காலங்களில் மகளிர் வாக்கு நமக்குதான் என்பதில் சந்தேகம் இல்லை.

தேர்தலில் கூட்டணி விஷயத்தை தலைமை பார்த்துக் கொள்ளும். தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்வோம். நீங்கள் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற கடுமையாக பாடுபட வேண்டும்.

இவ்வாறு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

சேலத்தில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி மாநாடு ஒருங்கிணைப்பாளராக அமைச்சர் கே.என்.நேரு நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை இன்று மாலையில் நடைபெறும் இளைஞரணி அமைப்பளர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி நிர்வாகிகளுக்கு எடுத்து கூற உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக