வியாழன், 30 நவம்பர், 2023

விஜயகாந்துக்கு என்னாச்சு? ஸ்டாலினுக்கு சென்ற இரகசிய அறிக்கை?


 மின்னம்பலம் - Aara  : டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்துக்கு என்னாச்சு? ஸ்டாலினுக்கு சென்ற சீக்ரெட் ரிப்போர்ட்!
வைஃபை ஆன் செய்ததும், விஜயகாந்த் உடல் நிலை தொடர்பாக சென்னை மியாட் மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பு இன்பாக்சில் வந்துவிழுந்தது.
அதைப் பார்த்துவிட்டு தேமுதிகவின் சில நிர்வாகிகளுக்கு வாட்ஸ் அப் கால் போனது.
அந்த உரையாடலுக்குப் பிறகு வாட்ஸ் அப் மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“நடிகரும் தேமுதிக நிறுவனரும், பொதுச் செயலாளருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலம் குறித்து சென்னை மியாட் மருத்துவமனை வெளியிட்ட தகவல் அரசியல், சினிமா உலகத்தினர் தொடங்கி கடைகோடி விஜயகாந்த் ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் வரை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
’அதாவது விஜயகாந்தின் உடல் நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீரற்றதாக உள்ளது’ என்பதுதான் மருத்துவமனை வெளியிட்ட அப்டேட்.


கடந்த நவம்பர் 18 ஆம் தேதி விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சளித் தொந்தரவு காரணமாக அவர் வழக்கமான பரிசோதனைகளுக்காகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நவம்பர் 24 ஆம் தேதி விஜயகாந்த் நலமோடு இருக்கிறார் என்று மியாட் மருத்துவமனை செய்தி வெளியிட்டது., அதேநேரம் அவரது உடல் நிலை தொடர்பாக மாறுபாடான செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன.


இந்த நிலையில்தான்தான் இன்று நவம்பர் 29 காலை மியாட் மருத்துவமனை சார்பில் வெளியான அப்டேட்டை அடுத்து திரையுலகத்தினர், அரசியல் பிரமுகர்கள் பலரும் விஜயகாந்த் வீட்டைத் தொடர்புகொண்டு அவரது உடல் நலம் பற்றி விசாரிக்கத் தொடங்கிவிட்டனர். சரத்குமார் மருத்துவ அப்டேட் வெளியானதில் இருந்தே கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி ஐந்தாறு முறை விஜயகாந்த் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டிருக்கிறார். பல நடிகர்களும் விஜயகாந்த் உடல் நிலை பற்றி விசாரிக்கத் தொடங்கிவிட்டனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி வரை விஜயகாந்தின் உடல் நிலை குறித்து  விசாரித்திருக்கிறார்கள்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரான மா.சுப்பிரமணியன் மியாட் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசியிருக்கிறார். அரசு மருத்துவ நிபுணர்களும் மியாட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு விஜயகாந்துக்கு தேவையான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டனர். விஜயகாந்தை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கலாமா என்றும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இப்போது இருக்கும் நிலையில் அவர் பயணம் செய்வது சாத்தியமற்றது என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

நுரையீரல் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டது வெண்டிலேட்டர் சுவாசத்தைத்தான். எனவேதான் பலரும் பதறிவிட்டார்கள். விஜயகாந்தின் மகன்கள் மும்பையில் இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு வேகவேகமாக சென்னை வந்துவிட்டார்கள்.

முதலமைச்சர் ஸ்டாலின் விஜயகாந்த் உடல் நிலை குறித்து கேட்டறிந்திருக்கிறார். முதல்வருக்கு அனுப்பப்பட்ட அதிகாரபூர்வ ரகசியக் குறிப்பில், ‘விஜயகாந்த் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். வெண்டிலேட்டர் வைக்கப்பட்டுள்ளது. அதிலும் கண்டென்ஸ்டு ஆக்ஸிஜன் அளிக்கப்படுகிறது. பல்ஸ் குறைந்துகொண்டிருக்கிறது. மருத்துவர்கள் இன்னும் இரு நாட்கள் கழித்துதான் சொல்ல முடியும் என்கிறார்கள்’ என சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா, ‘விஜயகாந்த் மருத்துவமனையில் நலமுடன் இருக்கிறார். விரைவில் குணமடைந்து வந்து அனைவரையும் சந்திப்பார்’ என்று நம்பிக்கை அளித்து இன்று இரவு விஜயகாந்தின் எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

    கேப்டன் நலமாக இருக்கிறார். விரைவில் முழு உடல் நலத்துடன் வீடு திரும்பி, நம் அனைவரையும் சந்திப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக