வெள்ளி, 10 நவம்பர், 2023

கமலஹாசன் திமுக கூட்டணியில்? இரண்டு இடங்களை கேட்கிறாராம்!

மாலைமலர் : சென்னை மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் 2018-ம் ஆண்டு கட்சியை தொடங்கிய ஓராண்டிலேயே பாராளுமன்ற தேர்தலை சந்தித்தார்.
அந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நான்கு சதவீத வாக்குகள் கிடைத்தன.
அதன் பின்னர் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இரண்டு சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை அந்த கட்சி பெற்றது.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் கமல்ஹாசன் இணைந்து போட்டியிட தயாராகி வருகிறார்.
இதை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியை பலப்படுத்தும் வகையில் கட்சியினருக்கு பல்வேறு கட்டளைகளை அவர் பிறப்பித்துள்ளார்.

கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினை பலப்படுத்தி மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள கட்சியாக உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். பாராளுமன்ற தேர்தலில் மக்களின் குரல் ஒலிக்க வேண்டும். அது மக்கள் நீதி மய்யத்தின் குரலாக இருக்க வேண்டும் என்று தனது பிறந்தநாளில் அவர் கட்சியினர் மத்தியில் பேசினார்.

இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆக வேண்டும் என்பதில் கமல்ஹாசன் தீவிரமாக உள்ளார். இப்படி தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கமல்ஹாசனுக்கு நிச்சயம் கை கொடுக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். அதே நேரத்தில் கமல்ஹாசன் உடன் கைகோர்ப்பது தி.மு.க. கூட்டணிக்கு வலுசேர்க்குமா என்பதும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கிராமப்புறங்களை விட நகர்ப்புற பகுதிகளில் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் மக்கள் நீதி மய்யத்தின் வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்கு பலன் அளிக்கும் என்று அந்த கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று டெல்லியில் தனது குரலை ஒலிக்கச் செய்து விட வேண்டும் என்பதில் கமல்ஹாசன் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். தி.மு.க. கூட்டணியில் அவருக்கு மட்டும் ஒரு இடம் ஒதுக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இரண்டு இடங்களை கேட்டு பெற்று விட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் வேகம் காட்டி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் நடைபெறும் கூட்டணி பேச்சுவார்த்தையில் இதனை வலுவாக வலியுறுத்தவும் அவர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள். தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் சேர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் வாக்குகளும் கிடைக்கும்பட்சத்தில் அது எங்களது கூட்டணிக்கு பலமாகவே இருக்கும் என்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக