வியாழன், 30 நவம்பர், 2023

இந்தியர் மீது குற்றம் சுமத்திய அமெரிக்கா - சீக்கியரை கொலை செய்ய திட்டமிட்டதாக .

அமெரிக்கா, இந்தியா, சீக்கியப் பிரிவினைவாதம்

 BBC News தமிழ் :    சீக்கியப் பிரிவினைவாதியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக இந்தியர்மீது குற்றம் சுமத்திய அமெரிக்கா - என்ன நடந்தது?
சீக்கியப் பிரிவினைவாதத்தை ஆதரித்த ஒரு அமெரிக்க குடிமகனைக் கொலை செய்ய நடந்ததாகக் கூறப்படும் சதித்திட்டத்தை முறியடித்திருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கிறது.
இந்தச் சதித்திட்டம் நியூயார்க்கில் நடத்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக, நிகில் குப்தா என்ற இந்தியர் மீது புதன்கிழமை (நவம்பர் 29) குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அவரை இந்திய அரசாங்க ஊழியர் ஒருவர் இயக்கியதாகக் குற்றப்பத்திரிகை கூறுகிறது.
இந்த விஷயத்தில், அவர்மீது கூலிக்குக் கொலை செய்ய முயன்றக்தாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இது இந்தியாவில் இருந்து திட்டமிடப்பட்டதாக வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.
ஆனால், யாரைக் கொலை செய்ய இந்தத் திட்டம் தீட்டப்பட்டது என்று நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.

இந்திய அதிகாரிகளின் எதிர்வினை என்ன?

இதுதொடர்பில் அமெரிக்கா தனது பாதுகாப்பு விஷயங்கள் குறித்து எழுப்பியக் குற்றச்சாட்டில், விசாரணையைத் தொடங்கியுள்ளதாக இந்திய அரசு முன்னதாக கூறியிருந்தது.

குற்றப்பத்திரிகை வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே, இந்த விவகாரத்தை இந்திய அரசாங்கத்தின் மிக மூத்த மட்டங்களில் எழுப்பியதாக அமெரிக்க அரசாங்கம் கூறியிருக்கிறது. அதற்கு இந்திய அதிகாரிகள் ‘ஆச்சரியம் மற்றும் கவலையுடன்' பதிலளித்ததாக அமெரிக்கா கூறியிருக்கிறது.

"சீக்கியர்களுக்கு இறையாண்மை கொண்ட அரசை நிறுவ வேண்டும் என்று பகிரங்கமாக வாதிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கக் குடிமகனை, நியூயார்க் நகரில் கொலை செய்யப் பிரதிவாதி இந்தியாவில் இருந்து சதி செய்தார்," என்று அமெரிக்க வழக்கறிஞர் டாமியன் வில்லியம்ஸ் கூறினார்.

மேலும் அவர், "அமெரிக்க மண்ணில் அமெரிக்கக் குடிமக்களைப் படுகொலை செய்யும் முயற்சிகளை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்," என்று கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர் யார்?

குற்றப்பத்திரிகையின்படி, நிகில் குப்தா சர்வதேச போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டவர். அவர் இந்தக் கொலைத்திட்டத்திற்காக இந்திய அரசாங்க அதிகாரி ஒருவரால் நியமிக்கப்பட்டார்.

மேலும், இத்திட்டம் குறித்து அமெரிக்காவில் உள்ள ஒரு கூட்டாளியைத் தொடர்பு கொள்ளுமாறு நிகில் குப்தாவிடம் அந்த இந்திய அதிகாரி சொன்னதாகவும் குற்றப்பத்திரிகை கூறுகிறது. நிகில் குப்தா, நியூயார்க் நகரில் இந்தக் கொலையைச் செய்யக்கூடிய ஒருவரைச் சந்திக்க எண்ணியிருந்தார் என்றும் அது கூறுகிறது.

ஆனால், அதற்கு பதிலாக, அந்த நபர் குப்தாவை, மாறுவேடத்தில் இருந்த ஒரு காவல் அதிகாரியிடம் அறிமுகப்படுத்தியது என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. அவர், ஒரு லட்சம் டாலர்களுக்கு இந்தக் கொலையைச் செய்வதாக கூறியதாகவும் குற்றப்பத்திரிகை கூறுகிறது.

நிகில் குப்தா ஜூன் 9 அன்று ஒரு கூட்டாளி மூலம் $15,000 முன்பணமாகச் செலுத்தினார், என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

ஜூன் 30-ஆம் தேதி அமெரிக்க வழக்கறிஞர்கள் நிகில் குப்தாவுக்கு எதிராக முதற்கட்டக் குற்றச்சாட்டை வெளியிட்டனர். சிறிது நேரத்திலேயே செக் குடியரசில் உள்ள அதிகாரிகள் அவரைல் கைது செய்தனர். நீதிமன்ற ஆவணங்களின்படி, அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் அவர்கள் அவரை இன்னும் காவலில் வைத்துள்ளனர்.

ஆவணங்களில் இந்தச் சதியின் இலக்கு குறிப்பிடப்படவில்லை என்றாலும், அவர் சீக்கிய பிரிவினைவாதக் குழு ஒன்றின் அமெரிக்கத் தலைவர் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

குர்பத்வந்த் சிங் பன்னு
இதற்கு முன்னர் எழுந்த குற்றச்சாட்டு
சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர், அமெரிக்காவில் வாழும் காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவரைக் கொலை செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குர்பத்வந்த் சிங் பன்னு, எனும் சீக்கியத் தனி நாடான காலிஸ்தானை கோரும் பிரிவினைவாதியைக் கொலை செய்ய இந்தியா திட்டமிட்டதாகக் கூறப்பட்டிருந்தது.

அதற்கு பதிலளித்த இந்தியா, ‘குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகள் உட்பட சிலரைப் பற்றிய தகவல்களை அமெரிக்கா பகிர்ந்திருக்கிறது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது,' என்று கூரியிருந்தது.

அதைத்தொடர்ந்து, புதன்கிழமை (நவம்பர் 29) இந்தியா இந்த விஷயத்தை விசாரிப்பதற்காக ஒரு குழுவை அமைத்திருக்கிறது என்று வெளியுறவுத்துறைச் செயலாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இந்தியா, சீக்கியப் பிரிவினைவாதம்

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையும் கனடாவின் குற்றச்சாட்டும்

கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு குருத்வாராவுக்கு வெளியே சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இந்த மரணம் அவரது ஆதரவாளர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சீக்கிய பிரிவினைவாதிகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே உலகளாவிய பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

சர்ரே நகரில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் பரபரப்பான வாகன நிறுத்துமிடத்தில், ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை முகமூடி அணிந்த இரண்டு பேர் அவரது டிரக்கில் வைத்து சுட்டுக் கொன்றனர்.

அப்போது நிஜ்ஜாரின் மரணத்துக்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார். நிஜ்ஜாரின் மரணத்திற்கும் இந்திய அரசின் ஏஜென்ட்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ‚நம்பகமான அம்சங்களை‘ கனடா உளவுத்துறை அடையாளம் கண்டுள்ளது என்று அவர் கூறியிருந்தார்.

இந்தக் கொலை தொடர்பான உளவுத்துறைத் தகவல்களை அமெரிக்காதான் கனடாவுக்கு வழங்கியதாக தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அப்போது செய்தி வெளியிட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து இந்தியா-கனடா உறவில் குறிப்பிடத்தகுந்த அளவில் விரிசல் ஏற்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக