புதன், 22 நவம்பர், 2023

உத்தராகண்ட் சுரங்க மீட்புப் பணி: நாளைக்குள் நல்ல செய்தி கிடைக்கும் - அதிகாரி தகவல்

Hindu Tamil  : உத்தராகண்ட் சுரங்க மீட்புப் பணி: நாளைக்குள் நல்ல செய்தி கிடைக்கும் - அதிகாரி தகவல்
டேராடூன்: உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்து தொடர்பாக அடுத்த 24 மணி நேரத்தில் நல்ல செய்தி கிடைக்கும் என்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி அருகே அமைக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட திடீர் விபத்து காரணமாக, 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 12ம் தேதி அதிகாலை இந்த விபத்து நேரிட்ட நிலையில், கடந்த 11 நாட்களாக அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது. பக்கவாட்டில் துளையிடும் முயற்சி தாமதமாகி வருவதை அடுத்து, செங்குத்தாகவும் துளையிட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் இன்று தொடங்கின.இந்நிலையில், மீட்புப் பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சாலை போக்குவரத்துத் துறையின் கூடுதல் செயலாளர்(தொழில்நுட்பம்) மெஹ்மூத் அகமது, "நள்ளிரவு 12:45 மணிக்கு ஆகர் இயந்திரத்தைப் பயன்படுத்தி துளையிடத் தொடங்கினோம். 39 மீட்டர் துளையிட்டு 800 மிமீ குழாயைச் சொருகியுள்ளோம் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் நன்றாக முன்னேறி வருகிறோம்.

கிடைமட்டத்திலும் துளையிட்டு வருகிறோம். இதில், 7.9 மீட்டர் வரை துளையிட்டுள்ளோம். எவ்வாறாயினும், சுரங்கப்பாதைக்குள் 45-50 மீட்டர்களை அடையும் வரை, அவர்களை மீட்பதற்கான சரியான காலக்கெடுவை வழங்க முடியாது. குழாய்களை சொருகுவதில் தடைகள் இல்லை என்றால் இன்றிரவு அல்லது நாளை காலை மிகப் பெரிய செய்தி வரலாம்" என்று தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணியில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரி ரவி எஸ் பதானி கூறுகையில், "மீட்பு நடவடிக்கை மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. நாங்கள் இப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். எப்போது மீட்கப்படுவார்கள் என்பதற்கான காலக்கெடுவை வழங்குவது கடினம்.

ஏனெனில், அது கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்ளும். உள்ளே இருக்கும் தொழிலாளர்களின் நிலைமை நன்றாக உள்ளது. அவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. தகவல் தொடர்பு நன்றாக உள்ளது. அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நன்றாக பேசுகிறார்கள். அவர்களின் மன உறுதி அதிகமாக உள்ளது" என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக