செவ்வாய், 21 நவம்பர், 2023

போலீஸ் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழப்பு

ceylonmirror.net - Jeevan : கைது செய்யப்பட்டிருந்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு வரும் போதே இறந்திருந்தார் : சட்ட வைத்திய அதிகாரி
தடுப்புக் காவலில் வைத்து தாக்கப்பட்டதாக நம்பப்படும் வடக்கு தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இறந்த இளைஞரின் உடலில் காயங்கள் இருந்ததாக தெரிய வந்துள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருபத்தாறு வயதுடைய நாகராசா அலெக்ஸ், நவம்பர் 19 ஞாயிற்றுக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்படும் போது ,
ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கீழ் பிரேத பரிசோதனை நடத்திய சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 20 ஆம் தேதி வெளியிடப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் தடயவியல் நிபுணர் ருத்ரபசுபதி மயோரதன் , இறந்த இளைஞனின் முதுகு, கை மற்றும் கால்களில் பல காயங்கள் இருந்தன. மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



குறித்த இளைஞன் தடுப்புக்காவலில் இருந்த போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய முறையில் தலையிடவில்லை என உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கையில், வட்டுக்கோட்டை சித்தங்கேணியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்பவர் நவம்பர் 8ஆம் திகதி வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் எனவும் அவரை சந்திக்க அனுமதிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 10 ஆம் திகதி, நாகராசா அலெக்ஸின் தாயார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் தனது மகனை விசாரணைக்காக பொலிஸாரால் கைது செய்ததாக முறைப்பாடு செய்தார்.

நவம்பர் 10ஆம் திகதி பொலிஸார் நாகராசா அலெக்சை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், சந்தேக நபரை தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்.சிறைச்சாலை தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டிருந்த நாகராசா அலெக்ஸ் உடல்நலக் குறைவு காரணமாக சில நாட்களுக்கு முன்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்போது, ​​மருத்துவமனைக்கு அவரை பார்க்க வந்த உறவினர் ஒருவரிடம் நாகராசா அலெக்ஸ், தன்னை போலீசார் சித்ரவதை செய்தாக விவரித்ததை, உறவினர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

“போலீசார் அவரை சந்தேகத்திற்கிடமான வழக்கு ஒன்றுக்காக கொண்டு சென்று அடித்தனர். திருட்டு ஒன்று நடந்துள்ளது என்றனர். பின்பக்கமாக துணியால் கட்டி , முகத்தை மூடி தண்ணீர் ஊற்றி அடித்தனர். கொஞ்சம் உணவு கொடுத்தார்கள். கயிற்றால் கட்டியும் அடித்தனர். திருடினாய்தானே எனக் கேட்டுக் கேட்டு அடித்தனர் . நான் இல்லை என்றேன். ஒரு பையில் பெட்ரோல் ஊற்றி , அதனுள் நுழைய வைத்து அடித்தனர். நான் சுயநினைவை இழந்தேன். இரண்டு கைகளையும் உயர்த்த முடியாதுள்ளது. முதலில் உணவு வழங்கப்படவில்லை. மறுநாள் சாப்பாட்டை தந்ததோடு , தங்களது அறைக்கு எடுத்துச் சென்று எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொன்னார்கள். அடுத்த நாள் என்னை மிரட்டினார்கள் . ஒரு பெக் மதுபானம் குடிக்க கொடுத்தார்கள்,” என்று நாகராஜா அலெக்ஸ் சொல்வது ஒரு வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக