சனி, 25 நவம்பர், 2023

முன்னாள் டிஜிபி மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

minnambalam.com - christopher :  தமிழ்நாடு அரசு மற்றும் முதல்வர் குறித்து  வாட்ஸ் அப் குரூப்களில் அவதூறு செய்திகளை பரப்பியதாக கூறப்பட்ட நிலையில் முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது 7 பிரிவுகளின் கீழ் இன்று (நவம்பர் 24) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் டிஜிபியாகவும், அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆகவும் இருந்தவர் நட்ராஜ்.
ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துகளை அவ்வப்போது பதிவிட்டு வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பான ஸ்க்ரீன்ஷாட்டுகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தின.முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
சென்னை மயிலாப்பூரில் இன்று நடைபெற்ற திருமணவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அங்கு தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், ”திமுக இளைஞர் அணியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் தேவையில்லாத பிரசாரங்களை செய்வதாக குற்றம் சாட்டினார்.

ஓய்வுபெற்ற ஒரு போலீஸ் அதிகாரி அவரது சொந்த வாட்ஸ்அப் கணக்கில் இருந்து அவதூறு கருத்துகளை பதிவிட்டு வருகிறார். அவரது பெயரை இங்கு சொல்ல விரும்பவில்லை.

இந்துக்கள் ஓட்டு எங்களுக்கு வேண்டாம் என்று நான் சொல்லியதாக ஒரு செய்தியை அவர் போட்டுள்ளார். இந்து ஓட்டுக்கள் இல்லாமலே நாம் வெற்றி பெற்று விடுவோம் என நான் சொன்னதாக வாட்ஸ்அப்பில் கருத்து போட்டுள்ளார்.

ஒரு போலீஸ் அதிகாரி அதுவும் மிகப்பெரிய பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர் இப்படி பேசி இருக்கிறார். அவர் மீது வழக்கு தொடுத்துள்ளேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

7 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

இந்த நிலையில், திருச்சி மத்திய மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஷீலா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம்  புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரில், தமிழ்நாட்டில் மதக்கலவரங்களை தூண்டி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் முன்னாள் டிஜிபி நட்ராஜ் தொடர்ச்சியாக வாட்ஸ் அப் குரூப்களில் தவறான செய்திகளை பதிவிட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது.

அதன்பேரில் முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது 153 A, 504, 505(1)(b), 505(1)(c), 505 (2), 66 IT act (2008) உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் திருச்சி சைபர் க்ரைம் காவல்துறை போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக