வியாழன், 23 நவம்பர், 2023

4 பேரை திமுகவிலிருந்து நீக்கிய துரைமுருகன்! நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்களை கட்டம் கட்டிய பொதுச்செயலாளர்

tamil.oneindia.com   - Arsath Kan : நெல்லை: நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் உட்பட 4 பேரை திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்திருக்கிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன்.
நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ள நிலையில் அதில் 51 இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியை சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். இதில் ஒரு தரப்பினர் மேயர் சரவணனுக்கு ஆதரவாகவும் மற்றொரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் இருந்து வருகின்றனர்.
இதனால் நெல்லை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்படும்.
இதனிடையே நெல்லை மேயரை மாற்றக்கோரி கவுன்சிலர்களில் ஒரு தரப்பினர் தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்கள், மண்டலத்திற்கு ஒரு ஜே.சி.பி. இயந்திரம் வாங்கச் சொன்னால் இன்னோவா கார் வாங்கியிருக்கிறார்கள் என மேயர் மற்றும் துணை மேயர் மீது சரமாரியாக புகார் கூறியதோடு ஆளுங்கட்சி கவுன்சிலர்களே பிரஸ்மீட்டும் கொடுத்தனர்.

இது திமுக தலைமையின் பொறுமையை சோதித்து பார்த்துவிட்டது. இதையடுத்து முதல்வரிடமிருந்து சென்ற அறிவுறுத்தல் படி துரைமுருகன் அதிரடி ஆக்‌ஷனுக்கு தயாரானார். அதன்படி இன்று ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு;

''திருநெல்வேலி மத்திய மாவட்டம்,திருநெல்வேலி மாநகரம், திருநெல்வேலி மாநகராட்சி 6வது வார்டு உறுப்பினர் பவுல்ராஜ், 20வதுவார்டு உறுப்பினர் மன்சூர், 24வது வார்டு உறுப்பினர் ரவீந்தர் மற்றும் 7வது வார்டைச் சேர்ந்த மாநகர பிரதிநிதி ஆர். மணி (எ) சுண்ணாம்பு மணி ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்குஅவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால்,அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார்கள்.''

ஆளுங்கட்சி மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களை தூண்டி விடுவது யார் என்பது பற்றியும் ரகசிய விசாரணை நடத்தி வருகிறது திமுக தலைமை. தமிழ்நாட்டின் மற்ற மாநகராட்சிகளை காட்டிலும் நெல்லை மாநகராட்சியில் எப்போதுமே அக்கப்போராகத் தான் இருந்து வருகிறது. இதனால் மாவட்ட பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசு கட்சியில் சிண்டு முடிபவர்களை அழைத்து கடுமையாக டோஸ் விடுவார் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக