புதன், 4 அக்டோபர், 2023

பல காதல்களை கடந்த Renato வால் Malena மேல் இருந்த காதலை மட்டும் மறக்கவே முடியவில்லை !

May be an image of 4 people and text

சுமதி விஜயகுமார் :   Renato விற்கு எல்லாம் ஒரே நேரத்தில் நடக்கிறது.
அவனுக்கு முதல் சைக்கிளை அப்பா வாங்கி கொடுக்கும் போது தான் இத்தாலி இரண்டாம் உலகப் போரில் பங்கெடுக்கிறது.
ரெனாட்டோவும் தன் வாலிப உணர்ச்சிகளை உணரத் துவங்குகிறான்.
சைக்கிள் வாங்கியதும் தான், அவன் விரும்பிய நண்பர்கள் அவனை நண்பனாக ஏற்றுக் கொள்கிறார்கள். அவனுக்கு ஒரு புதிய உலகத்தை அறிமுகப்படுத்துகிறார்கள். Malena.
அந்த சிறிய டவுனின் அழகி அவள். முதல் முறை அவளை பார்க்கும் போதே தன் அழகால் அவனை சுண்டி இழுகிறாள் Malena.
அதன் பிறகு தான் Renato கவனிக்கிறான் அந்த ஊரில் Malena வை பற்றி அறியாதவர்கள் யாரும் இல்லை என்று. எப்போதும் Malena பற்றி தான் பேச்சுக்கள்.
அவள் அவனை வைத்திருக்கிறாள், அவள் என்னை படுக்கைக்கு அழைத்தாள். அவள் என்னை வேறு மாதிரி பார்த்தாள் என்று ஆண்களும் அவள் என்ன அவ்வளவு அழகா, அவள் ஒரு விபச்சாரி என்று பெண்களும் பேசுவதை கவனித்தான்.



யார் என்ன சொன்னாலும் Renato வால் அவளை தன் நினைவில் இருந்து நீக்கவே முடியவில்லை. பகல் இரவு என்று அவள் நியாபகத்திலேயே இருக்கிறான். அன்று முதல் அவளை அறிந்து கொள்ள அவளுக்கு தெரியாமலேயே அவளை கண்காணிக்க துவங்குகிறான்.

Malena திருமணமானவள். கணவன் ராணுவத்தில் இருப்பதால், இரண்டாம் உலகப் போரில் பங்கெடுக்க சென்றதால் தனியாக வசிக்கிறாள். ஊரில் பேசிக்கொள்வதை போல யாருடனும் அவளுக்கு தொடர்பில்லை. தந்தை அதே டவுனில் ஒரு பள்ளி ஆசிரியர். வேறு யாரும் அவளுக்கு கிடையாது. வெளியில் வரும் போதெல்லாம் அவள் பார்வை நேராக இருக்கும். யாருடைய கண்களையும் சந்திக்காது. Renato அவளை எப்படியாவது தன்னை பார்க்க வைத்துவிட வேண்டும் என்று எவ்வளவு முயற்சி எடுத்தாலும் ஒரு நாளும் அவள் அவனை பார்த்ததேயில்லை.

சில நாட்களில் Malenaவின் கணவன் இறந்து போனதாக தகவல் கிடைக்கிறது. நொறுங்கி போகிறாள் Malena. ஊரில் இருக்கும் ஆடவர்களும் அவளுக்காக தயார் ஆகிறார்கள். அவள் ஒருவனை தேர்ந்தெடுக்கிறாள். சில நாட்களில் அவள் மேல் புகார் எழ, நீதிமன்றம் செல்கிறாள் Malena. அவளின் காதலன் , அவளை காப்பதற்கு பதில், அவளுடன் வெறும் நட்பு மட்டும் தான் என்று சொல்லி நழுவி செல்கிறான். தந்தையும் அவளை ஒதுக்குகிறார். தனி மரம் ஆகிறாள் Malena.

ஆதரவற்ற நிலையில் பணி செல்ல முயற்சித்து தோல்வியை தழுவுகிறாள். தந்தையும் இறந்து போகிறார். ஒரு சிறிய ரொட்டி துண்டிற்கு தன் உடலை இழக்கிறாள். இனி ஒழுக்கமாய் வாழ்வது சாத்தியமில்லை என்பதை உணர்கிறாள். நாஜி படையின் அதிகாரிக்கு ஆசை நாயகியாய் மாறுகிறாள். இரண்டாம் உலக போரில் இத்தாலி தோற்க, நாஜி அதிகாரிகள் ஊரை விட்டு செல்கிறார்கள். அவள் மேல் பொறாமை கொண்ட பெண்கள், இது தான் சமயம் என்று அவளை தெருவிற்கு இழுத்து வந்து அவள் மயிரை கத்தரித்து, ஆடைகளை கிழித்து அடித்து உதைக்கிறார்கள்.

ஆண்களோ உதவ பயந்து, சோகத்துடன் அமைதி காக்கிறார்கள்.
அடுத்தநாள் தன்னை முழுவதுமாக மறைத்துக் கொண்டு, காயங்களுடன் ரயில் ஏறுகிறாள் Malena.
தன் சைக்கிளுடன் அவள் செல்வதையே சோகமாக பார்த்துக் கொண்டிருக்கிறான் Renato.
சில நாட்கள் கழித்து, ஒரு கையை இழந்த நிலையில் Malena வின் கணவன் ஊர் திரும்புகிறான்.
வீட்டில் தன் மனைவி இல்லாததை கண்டு ஊர்காரர்களிடம் விசாரிக்கிறான். அவமானம் மட்டுமே அவனுக்கு மிஞ்சுகிறது. அவளை ஒரு விபச்சாரியாகவே சித்தரித்தது ஊர். குழம்பிய அவனுக்கு Renato ஒரு கடிதம் எழுதி அவன் மேல் தூக்கி எறிகிறான்.

'நீங்கள் Malena பற்றி கேள்விப்படும் அனைத்தும் உண்மையில்லை. அனைத்தும் பொய்யுமில்லை.
ஆனால் ஒன்றை மட்டும் என்னால் சொல்ல முடியும். அவள் உங்களை மட்டும் தான் காதலித்தாள். இதையெல்லாம் உங்களிடம் நேரில் சொல்லும் தைரியம் எனக்கு இல்லை.
 அதனால் தான் கடிதமாக எழுதுகிறேன். அவள் கடைசியாக இந்த ரயிலில் ஏறியதை தான் நான் பார்த்தேன் - இப்படிக்கு Renato'

அடுத்தநாள் Malena வின் கணவனும் ரயில் ஏறுகிறான். நாட்கள் ஓடுகிறது.
ஒரு வருடம் கழித்து Malena தன் கணவனுடன் ஊர் திரும்புகிறாள். ஊரே வாயடைத்து போகிறது. முன்பிருந்த எழிலை இழந்தவளாய் திரும்புகிறாள். முன்பு அவளை பார்த்ததை போல் இப்போது அவளை யாரும் பார்க்கவில்லை. எந்த பெண்கள் அவளை அவமானப்படுத்தினார்களோ அவர்கள் எல்லாம் இப்போது அவளிடம் கனிவாக நடந்துகொள்கிறார்கள்.

அவளையே பின் தொடரும் Renato அவள் தவற விடும் பழங்களை எடுத்து கொடுக்கும் போது தான் முதன்முதலில் அவனை பார்க்கிறாள் Malena.
அதன் பின் பல காதல்களை கடந்த Renato வால் Malena மேல் இருந்த காதலை மட்டும் மறக்கவே முடியவில்லை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக